இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பதுடன் அங்கு மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டியது அவசியமாகும்.
இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதுடன் இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் பண்டிகையுடன் இணைந்ததாக பிரித்தானியப் பாராளுமன்றத்தினால் ஜனவரிமாதம் ‘தமிழ் மரபுரிமை மாதமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினையும் கொண்டாடும் வகையிலேயே இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டர் நகரிலுள்ள மத்திய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
நிகழ்வை ஆரம்பித்துவைத்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான எலியற் கொல்பர், கடந்தகால மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.
அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் டாவே, ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவை பிரித்தானிய பாராளுமன்றத்தில் தான் சமர்ப்பித்தமை குறித்து சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதுடன் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக நாம் போராடவேண்டும்.
இலங்கை தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தத் தைப்பொங்கல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவணிகங்கள் தொடர்பான அமைச்சருமான போல் ஸ்கல்லி பிரிட்டனின் ஒவ்வொரு துறையிலும் தமிழர்கள் மிகையான பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள்.
அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதே தைப்பொங்கல் பண்டிகையின் தாற்பரியமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படுவதுடன் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை இலங்கைத் தமிழர்களுக்கான மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவை நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்திய பிரசாரம் மேலும் வலுவான முறையில் நடைபெறுவதைக் காணவிரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்தார்.
அத்தோடு ‘இதுவிடயத்தில் தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கப்படவேண்டும்.
எமது அரசாங்கத்தின்கீழ் மனித உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது’ என்று சுட்டிக்காட்டிய அவர், என்றேனும் ஒருநாள் இராணுவமயமற்ற சுயநிர்ணய உரிமையுடனான தமிழர் தாயகத்தைக் காண்போம் என்றும் கூறினார்.
இலங்கையில் ராஜபக்ஷாக்களின் மீள்வருகை அனைவருக்குமான தீவின் எதிர்காலத்திற்குப் பாதகமானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ரீட்டிங் சுட்டிக்காட்டிய அதேவேளை, தென்னாபிரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகளை விதிக்குமாறுகோரி நான் போராடினேன்.
இப்போது இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் லெமி குறிப்பிட்டார்.
அதன்படி அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நீங்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் டேவிட் லெமி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.