சிறுத்தை கடித்து குதறியதில் காயமடைந்த விவசாயி – பனியன் நிறுவனம் முன்பு திரண்ட பொதுமக்கள்
திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பாப்பாங்குளம் கிராமத்தில் கடந்த 24-ந்தேதி விவசாயிகள், வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர் உட்பட 5 பேரை தாக்கிய சிறுத்தை வனத்துறையினர் விரித்த வலையில் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாப்பாங்குளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருமாநல்லூர் அருகே சிறுத்தை சாலையை கடந்து செல்வதை அவ்வழியாக காரில் சென்ற ஒரு குடும்பத்தினர் பார்த்து, உடனடியாக அவிநாசி நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தெரிவித்தனர்.
பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட நைஸ் பேக்கரி அருகே நடமாடியதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து பெருமாநல்லூர், பொங்குபாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் டுவிட்டரில் பதிவிட்டு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் வனத்துறையினர், பெருமாநல்லூர் அருகே மேற்குத்தோட்டம் பகுதியில் சிறுத்தை சாலையை கடந்ததாக கூறப்படும் இடங்களில் சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் என ஏதாவது உள்ளதா? என தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது பொங்கு பாளையம் பகுதியில் துரை என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த காலடி தடங்களும் எச்சமும் தப்பியோடிய சிறுத்தையுடையது தான் என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இதனையடுத்து பொங்கு பாளையம், கிருஷ்ணா நகர், எஸ்.பி.கே நகர், கோனக்காடு, எட்டம்ம பெரிச்சங்காடு, தட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலக்கடலை மற்றும் மசால் புல் பயிரிடப்பட்டுள்ள வயல் பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய 20 சென்சார் வகை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த ஒருவரின் நாய் திடீரென மாயமானது. அதனை தேடியபோது அங்குள்ள கிணற்றின் அருகில் நாய் இறந்து கிடந்தது.
நாயின் பாதி உடல் மட்டும் கிடந்ததால் தப்பித்த சிறுத்தை தான் அந்த நாயை அடித்து தின்று விட்டு சென்றது தெரியவந்தது.
மீதமுள்ள நாய் இறைச்சியை சாப்பிட சிறுத்தை வரும் என்பதால் அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 நாட்களாகியும் வனத்துறையினர் பிடியில் சிக்காமல் சிறுத்தை போக்குகாட்டி வருவது பாப்பாங்குளம், பொங்கு பாளையம் கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் தோட்டம், வயல்களுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தின் பின்பகுதியில் அந்நிறுவனத்தினர் வாழை மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். அதனை விவசாயி ராஜேந்திரன் (வயது 55) என்பவர் பராமரித்து வந்தார்.
இன்று காலை வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ராஜேந்திரன் மீது பாய்ந்து கடித்து குதறியது. ராஜேந்திரன் சத்தம் போடவே பனியன் நிறுவன பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுத்தை கடித்து குதறியதில் ராஜேந்திரன் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வாழை மரங்களுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தையை விரட்டுவதற்காக பனியன் நிறுவனத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் உள்ளே சென்றார். அப்போது அவர் மீதும் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அலறல் சத்தம் போட்டு அங்கிருந்து தப்பியோடினார். அவரை சிறுத்தை விரட்டி கொண்டே வந்ததால் அதனை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறியடித்து கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் பாப்பாங்குளம், பொங்குபாளையம் பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர் அம்மாபாளையம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.