ilakkiyainfo

ஐபிஎல் மெகா ஏலம் 2022: 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஷாருக்கான்; தமிழக வீரருக்கு அடித்த ஜாக்பாட்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபில் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் எனும் 2 புதிய அணிகள் உள்பட மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் கலந்து கொண்டன.

370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டினர் என மொத்தம் 590 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், அவற்றில் 217 வீரர்கள் மட்டுமே ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான ஏல நிகழ்ச்சியை லண்டனைச் சேர்ந்த ஹியூ எட்மீடெஸ் ஒருங்கிணைத்தார். ஏல நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ஹியூ எட்மீடஸ் மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ‘போஸ்டுரல் ஹைபோடென்ஷன்’ (பல்வேறு காரணங்களால் ஏற்படும் ரத்த அழுத்தம்)இருப்பது கண்டறியப்பட்டதால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் அவருக்கு பதில் ஏல நிகழ்ச்சியை சாரு சர்மா ஒருங்கிணைத்தார்

ஐபிஎல் அணிகளின் வியூகம்

ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றும் தங்கள் புதிய அணியை கட்டமைக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளன. கோப்பையை வெல்ல மீண்டும் முதலில் இருந்தே ஒரு சீரான அணியை தேர்வு செய்வது அவசியம்.

 

ஒருசில அணிகளுக்கு ஏலத்தின் மூலம் அணியை வழிநடத்தும் கேப்டன்களை தேடும் கூடுதல் பளுவும் இருந்தது.

இதைத் தவிர ஓபனிங், மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், டெத் பவுலர்கள் உள்ளிட்டோரையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது.

மெகா ஏலம் என்பதால் தொலைநோக்குப் பார்வையோடு ஒரே சீசனுக்கு மட்டுமின்றி அடுத்தடுத்த தொடரிலும் சிறந்து விளையாடும் வகையில் வீரர்களை தேர்வு செய்ய அணிகள் முனைப்பு காட்டின.

வீரர்களின் உடல்திறன், வயதும் முக்கிய பங்கு வகித்தன. 30 வயதை தாண்டிய வீரர்களுக்கு குறைந்த தொகைகளும் திறமையான இளம் வீரர்களை தங்கள் அணியில் எடுத்துக் கொள்ள அதிக விலைக்கும் ஏலம்போட்டிகள் நடந்தன.

இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்

ஐபிஎல் மெகா ஏலம் 2022ல் அதிக தொகைக்கு ஏலம் போனவர்களின் பட்டியலில் இஷான் கிஷன் முதலிடம் வகிக்கிறார். அவரை ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இஷான் கிஷான்

பட மூலாதாரம், Getty Images

இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் யுவராஜ் சிங்கிற்கு அடுத்து, அதிக விலைக்கு வாங்கப்பட்ட 2வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார்.

கடந்த 2020 ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன்,மும்பை அணிக்கு 516 ரன்கள் விளாசி டாப் ஸ்கோரராக திகழ்ந்தார்.

இதனால் அவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனை தங்கள் அணியில் அதிக விலை கொடுத்து சேர்த்துக் கொண்டது.

2வது அதிகபட்சமாக ஏற்கனவே சி.எஸ்.கேவில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான ஷ்ரேயாஸ் ஐயர் 3வது அதிகபட்ச ஏலத்தொகையான ரூ 12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கிக்கொண்டது

ஏலத்தில் ஜொலித்த தமிழக வீரர்கள்

மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன தமிழக வீரர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் வகிக்கிறார். சர்வதேச போட்டிகளில் விளையாடாமலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இளம் வீரரான ஷாருக்கான் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடியவர்.

சையது முஸ்தாக் அலி இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் விளாசி தமிழக அணிக்கு வெற்றியை தேடித் தந்தவர்.

ஷாருக்கானை அணியில் எடுக்க தொடக்கம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் முனைப்பு காட்டியது.

இருப்பினும் ரூ. 9 கோடிக்கு பஞ்சாப் அணி மீண்டும் ஷாருக்கானை ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஷாருக்கானின் அடிப்படை விலை ரூ. 40 லட்சம் மட்டுமே.

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இது குறித்து பிபிசி தமிழுக்கு பேசிய அவரது தந்தை வாஷிங்டன், தனது மகனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் ஐதராபாத் அணிக்கு தேர்வானதை பெருமையாக கருதுவதாகவும் பந்து வீச்சில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பயிற்சியாளராக இருப்பதால் அவரிடம் இருந்து பல நுணுக்கங்களை வாஷிங்டன் சுந்தர் கற்றுக்கொள்ள இது சிறந்ததொரு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

“ஐதராபாத் அணியில் சுழற்பந்துவீச்சாளராக ஜொலிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாஷிங்டன் சுந்தரால் அந்த அணிக்கு மேலும் பலம் கிடைத்துள்ளது. ஏலத்தில் ஐதராபாத் அணிக்கு கிடைத்த பெரிய மீன்தான் வாஷிங்டன் சுந்தர்,” என்றார் வாஷிங்டன் சுந்தரின் தந்தை.

இதேபோல தினேஷ் கார்த்திக்கை ரூ. 5.50 கோடிக்கு பெங்களூரு அணியும் ரவிச்சந்திரன் அஷ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியும் வாங்கியுள்ளது. இதுதவிர, யார்க்கர் மன்னன் என ரசிகர்களால் அறியப்பட்ட நடராஜனை ரூ.4 கோடிக்கு ஐதராபாத் அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 3 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.

விலைபோகாத முக்கிய வீரர்கள்

‘சின்ன தல’ என சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகர்களால் அறியப்பட்ட சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சென்னை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரெய்னா கடந்த சீசனில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாலும் வயது மூப்பு காரணமாகவும் ரெய்னாவை எந்த அணியும் வாங்க முற்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images

இதேபோல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், வங்கதேச ஆல் ரவுண்டர் சாகிப் அல் ஹசன், தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் ஏலம் போகவில்லை

அணி மாறிய ‘கேப்டன்’ நட்சத்திரங்கள்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய முகமாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். அந்த அணிக்காக அதிக ரன்களை சேர்த்தவர். 3 முறை ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். 2016ல் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை ஐதராபாத் வென்றபோது அணியை வழிநடத்தியவர்.

இப்படி பல பெருமைகளை சேர்த்த வார்னரை ஐதராபாத் அணி தக்க வைக்கவில்லை. இதனால் ரூ.6.25 கோடிக்கு வார்னரை டெல்லி அணி வாங்கியுள்ளது.

இதேபோல கொல்கத்தாவின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான டு பிளெசிஸை ரூ 7 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. டெல்லி அணியின் முக்கிய முகமாக திகழ்ந்த ஷிகர் தவான் தற்போது ரூ. 8.25 கோடிக்கு பஞ்சாப் அணியில் சேர்ந்துள்ளார்.

பழைய வீரர்களை வாங்கிய சி.எஸ்.கே.

இன்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை எடுத்தது. இதில் 5 பேர் ஏற்கனவே சென்னை அணிக்கு விளையாடியவர்கள்.

தீபக் சஹர் – ரூ. 14 கோடி

அம்பத்தி ராயுடு – ரூ. 6.75 கோடி

டுவெய்ன் பிராவோ – ரூ. 4.40 கோடி

ராபின் உத்தப்பா – ரூ 2 கோடி

கே.எம்.ஆசிஃப் – ரூ.20 லட்சம்

துஷார் தேஷ்பண்டே – ரூ.20 லட்சம்

Exit mobile version