ilakkiyainfo

கடைசி டி20 போட்டியிலும் அசத்தல்- வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

நெருக்கடியான தருணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன் 61 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.

கொல்கத்தா:

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 65 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 35 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.

துவக்க வீரர்கள் மேயர்ஸ் (6), ஹோப் (8) ஆகியோர் விரைவில் வெளியேறிய நிலையில், அதிரடியாக ஆடிய ரோமன் பாவெல் 25 ரன்களில் வெளியேறினார்.

அதன்பிறகும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. 100 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.

ரொமாரியோ

இந்த நெருக்கடியான தருணத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 61 ரன்களில் அவுட் ஆனார்.

ரொமாரியோ ஷெப்பர்டு 29 ரன்களிலும், டிரேக்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாகர், வெங்கடேஷ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

Exit mobile version