ilakkiyainfo

உக்ரேனில் கூலிப்படைகள் களமிறங்கியுள்ளனவா?

Silent Professionals என்ற நிறுவனம் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு உக்ரேனில் போரில் ஈடுபட படைத்துறையில் பணிபுரிந்தவர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது.

தனியார் படை என்பது கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட “கௌரவப் பெயராகும்”. சிரியா, லிபியா, ஆப்கான் போர்க்களங்களில் பெருமளவு தனியார் படையினர் அமெரிக்காவாலும் இரசியாவாலும் பாவிக்கப்பட்டனர். ஈழப்போரிலும் வெளிநாடுகளின் கூலிப்படைகள் செயற்பட்டன.

கூலிப்படை வரலாறு

ஆரம்பத்தில் படையினருக்கான பின்புல வழங்கல் செய்தல், படையினருக்கான ஆபத்து பகுப்பாய்வு செய்தல், உளவு, வேவு போன்றவற்றில் தனியார் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

உலகெங்கும் தற்போது உள்ள தனியார் படை அமைப்புக்களில் 70% அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூலிப்படைத்துறையை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் அமெரிக்காவின் சீல் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற Erik Prince என்பவர். இவரது தனியார் படை Blackwater என்னும் பெயரில் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அது ஆப்கானிஸ்த்தானில் செயற்பட்டது. இவரது படைப்பிரிவு பத்து பில்லியன் டொலர் கூலிக்காக உக்ரேனில் உள்ள வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பயிற்ச்சியளிக்கின்றது என அமெரிக்காவின் Time சஞ்சிகை 2021 ஜூலை 7-ம் திகதி செய்தி வெளியிட்டது.

2020 பெப்ரவரி 23-ம் திகதி Erik Prince உக்ரேன் தலைநகருக்கு சென்று உக்ரேனிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

உக்ரேனிய படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களையும் உள்ளடக்கி ஒரு தனியார் படைப்பிரிவை அவர் உருவாக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

2022 மார்ச் 24-ம் திகதி உக்ரேனில் ஆரம்பித்த போரில் Erik Princeஇன் படையினரின் செயற்பாடுகள் மர்மமாக உள்ளன.

இரசியாவின் மிகப்பிரபலமான விமான ங்களில் ஒன்றான Su-24 தாக்குதல் போர்விமானத்தை உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

Stinger air missile

உக்ரேனியர்களிடமிருக்கும் Stinger போன்ற MANPAD ஏவுகணையால் Su-24ஐ சுட்டு வீழ்த்துவதற்கு போதிய பயிற்ச்சி தேவை.

அவ் ஏவுகணைகள் தாழப்பறக்கும் விமானங்களை மட்டும் சுட்டு வீழ்த்த வல்லன. ஒலியிலும் வேகமாக பயணிக்கக் கூடிய விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு நீண்ட பயிற்ச்சியும் அனுபவமும் தேவை.

Erik Prince முன் வைத்த கோரிக்கையை பைடன் நிராகரித்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான் எச்சந்தர்ப்பத்திலும் தமது படையை உக்ரேனுக்கு அனுப்பமாட்டேன் என அடிக்கடி சொல்கின்றார்.

Erik Prince அமெரிக்கா 2022இல் சேவையில் இருந்து நீக்கவிருக்கும் நாற்பத்தேழு F-16 போர்விமானங்களை வைத்து ஒரு தனியார் படையணியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் முன்வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்து விட்டார் எனவும் 2022 மார்ச் 4-ம் திகதி பிரித்தானிய நாளிதழான Daily Mailஇற்கு தெரிவித்திருந்தார்.

F-16ஐ உக்ரேனில் களமிறக்குவது புட்டீனை பெரும் சினப்படுத்தும் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.

சுட்டு விழுத்தப்படாத விமானம் என்னும் பெருமையைக் கொண்டிருந்த F-16 விமானம் 2019 இந்திய பாக் மோதலில் இந்தியாவிடமிருந்த MiG-21 Bison விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சர்ச்சைக்கு உரியதாக இருக்கின்றது.

Erik Prince,

அதை உக்ரேனில் உறுதி செய்யப்படுவதை F-16 உற்பத்தியாளர்கள் விரும்ப மாட்டர்கள். தான் 2021இன் இறுதியில் முன்வைத்த திட்டத்தை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டிருந்தால் உக்ரேனில் இன்று இத்தகைய இழப்பு நடந்திருக்காது என்கின்றார் Erik Prince.

புட்டீன் உக்ரேனில் உள்ள நாஜிகளை இல்லாமற் செய்யப் படை அனுப்புகின்றேன் எனச் சொன்னது Erik Prince பயிற்றுவித்துக் கொண்டிருந்த திவிர வலதுசாரிப் படைப்பிரிவைத்தான். இவர்கள் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள பிரதேசங்களை மீளக் கைப்பற்றுவதாகும்.

உக்ரேனிய கூலிப்படை

உக்ரேனுக்குள் இரசியப் படையினர் புகுந்தவுடனே உக்ரேனிய அதிபர் வெளிநாட்டில் வாழும் உக்ரேனியர்களும் உக்ரேனை விரும்புபவர்களும் உக்ரேனுக்காக போராட விரும்புகின்றார்கள் என அறிவித்தார்.

அவர்களை வைத்து “International Legion of Territorial Defence of Ukraine” என்னும் பெயர் கொண்ட படையணியை தான் உருவாக்கப் போவதாகவும் சொன்னார்.

இது அவர் ஒரு தனியார் படையை (கூலிப்படையை) உருவாக்கப் போகின்றார் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.

உலகெங்கும் உள்ள வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளும் நாஜிவாதிகளும் உக்ரேனைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் அங்கு களமிறங்கி உள்ளனர் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரேனில் போரில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தமது நாட்டுக்கு திரும்பி ஆபத்தான வகையில் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் ஒரு சதிக் கோட்பாடும் உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி வெள்ளை-உயரினவாதிகளால் அவர்கள் வாழும் நாடுகளுக்கு ஆபத்து என்பதால் அந்த நாடுகள் அவர்களை உக்ரேன் போர்முனைக்கு அனுப்பி கொல்ல முயற்ச்சிக்கின்றார்கள் என்பதே அச்சதிக் கோட்பாடு.

Russian mercenaries

இரசியா சிரியாவில் கூலிப்படை திரட்டியது

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் படையினர் பாரிய கட்டிடங்களுக்குள் நின்று போர் செய்யும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

அவர்களை இரசியா தனியார் படையாக சேவைக்கு அமர்த்தி உக்ரேனில் களமிறக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இச்செய்தியை சிரியாவின் deiresso24.net என்ற இணையத்தளம் வெளியிட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனும் வெளியிட்டது.

2022 மார்ச் 6-ம் திகதி அமெரிக்க Wall Street Journal இரசியா நகர்சார் போரில் அனுபவமுள்ள சிரியப் படையினரை நாள் ஒன்றிற்கு $200முதல் $300 வரையிலான கூலிக்கு ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் உக்ரேன் போரில் ஈடுபடுத்த ஆள் சேர்ப்பதாக செய்தி வெளியிட்டது.

சிரியாவில் இருந்து 16,000 படையினர் இரசியப்படையுனருடன் இணைந்து ச் உக்ரேனியர்களுக்கு “உதவி” செய்ய தயாராக உள்ளதாக இரசிய பாதுகாப்பு அமைச்சர் 2022 மார்ச் 11-ம் திகதி புட்டீனுக்கு தெரிவித்ததாக இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times தெரிவித்துள்ளது

புட்டீனின் கூலிப்படை

இரசியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் இரசிய அதிபரின் நெருங்கிய நண்பருமான Yevgeniy Prigozhin என்பவர் Wagner Group என்ற தனியார் படைப்பிரிவை வைத்திருக்கின்றார்.

இரசிய தனியார் படையினரின் வருமானம் அரச படையினரின் வருமானத்திலும் பார்க்க 7 மடங்கு அதிகமாகும்.

Yevgeny Prigozhin இற்குச் சொந்தமான Evro Polis நண்பரின் சிரியாவின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் 25விழுக்காடு உரிமம் பெற்றுள்ளது.

சிரியாவில் தனியார் படையினரைப் பயன்படுத்தியமைக்கு இவருக்கு வழங்கப்பட்ட கூலியா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

உக்ரேனிய அதிபர் விலோடிமீர் ஜெலென்ஸ்கியை கொல்லும் பணியில் Yevgeniy Prigozhin யின் Wagner Group களமிறக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் GB News தெரிவித்துள்ளது.

இரசியாவின் கை உக்ரேனில் மேலும் ஓங்கும் போது நேட்டோ நாடுகள் அதிக நிதியை உக்ரேனுக்கு வழங்கும். அந்த நிதியைப் பாவித்து உக்ரேன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள தனியார் படையினரை போரில் ஈடுபடுத்தும்.

-வேல்தர்மா-

Exit mobile version