தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற   எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை.தமிழர்களின் போராட்டம் பற்றி தெரியாத சுமந்திரன் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வெளியேறுவது சந்தோஷம் என்றும் இதையே  தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் விரும்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வாவின் 124 வது பிறந்த நாள் நிகழ்வில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (31) கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  கருத்து தெரிவித்த போது தமிழீழ விடுதலை இயக்கம்  (டெலோ) தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து   விலகினால் தான் சந்தோசப் படுவதாகவும் தமிழரசு கட்சியும் அதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தமாக பேசுவதற்கு சுமந்திரனுக்கு அருகதை இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன்.

ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து 10 வருடங்களுக்கு பின்பு தான் சுமந்திரன் இந்த கூட்டமைப்புக்குள் வந்து செயல்பட தொடங்கி இருக்கிறார்.கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கூட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.பல தடவைகள் கொச்சைப்படுத்தி இருக்கின்றார்.

அப்படி இருக்கும் போது விடுதலைப் புலிகளுடைய செயற்பாட்டில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி இருக்கின்றது. வன்முறையின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய சுமந்திரன் புலிகள் உருவாக்கிய இந்த கூட்டமைப்பில்  இவ்வாறு தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்க முடியும்?

இவருடைய கருத்துக்கள் தமிழர்களின் போராட்டத்தை மலினப் படுத்துவதாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

தமிழ் இனத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் எத்தனையோ உயிர்களை தியாகம் செய்த எமது இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஆசைப்படும் நபர் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருப்பதற்கு அருகதை அற்றவர்.

மாவை  சேனாதிராஜாவிடம் நான் கேட்க விரும்புகிறேன். வெளிப்படையாக பதில் கூறவேண்டும். தமிழரசு கட்சி இதை விரும்புன்கிறதா? சுமந்திரன் சொன்ன கருத்தை தமிழரசுக் கட்சி ஒட்டுமொத்தமாக ஆதரிக்கின்றதா? என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன், சுமந்திரனுடைய கூற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்பதனையும் வெளிப்படையாகக் கூற வேண்டும்.

சுமந்திரன் கூறுவது தான் தமிழரசு கட்சி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா? என்பதை வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு பாரிய பங்கு இருக்கிறது. இதை நாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறோம். அது உறுதிப்படுத்த பட்டிருக்கின்றது.

ஆனால் தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமந்திரனுக்கு சொந்தமான அமைப்பு என்று நினைத்துக் கொண்டு அவர் கருத்து சொல்ல முடியாது.

எனவே இந்த விடயங்களுக்கு சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா  ஆகியோர் பதில் கூறியாக வேண்டும்.

சுமந்திரனுடைய கருத்துதான் தமிழரசுக்கட்சியின் கருத்தா? சுமந்திரன் கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக சம்பந்தன் ஐயா ஏற்றுக் கொள்கிறாரா? இதற்கு வெளிப்படையான பதில் தரவேண்டும்.

தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற   எந்த ஒரு கட்சிக்கும் எந்த ஒரு நபருக்கும் அருகதை இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாங்கள் தொடர்ந்து இருப்போம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் எங்களுடைய பங்கு இருக்கின்றது.

சுமந்திரன் அடிக்கடி எம்மை சாடுகின்ற போது  நாங்கள் மௌனம் காத்து வந்தோம். ஏனென்றால் மாறி மாறி அடி படுகின்ற நிலை ஏற்படக் கூடாது என்று பொறுமையாக இருந்தோம்.

ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் அவ்வாறு பொறுமை காக்க முடியாது.

தொடர்ச்சியாக எமது போராட்டத்தை மலினப்படுத்தி வரும் சுமந்திரன் தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே செல்வது சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்வது நகைப்புக்குரிய விடயமாக இருக்கிறது.

அதை விட சிறி அண்ணாவையும் முப்படைகளை கொண்ட தலைவர் பிரபாகரனையும் இதில் இணைத்து பேசி இருக்கிறார்.

எமது தலைவருடைய சிந்தனைகளைக் கொண்டு நான் செயற்படுவதில் என்ன தவறு? அதேபோல். நாங்கள் ஏற்றுக்கொண்ட முப்படைகளை  கட்டி ஆண்ட தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இன்றைய நிலையில் அந்த இரண்டு தலைவர்களும்  இருந்திருந்தால் என்ன முடிவை எடுப்பார்களோ? அதையே இன்று எமது கட்சியும் எடுத்துள்ளது.

நாங்கள்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை சந்திக்க வரவில்லை என்பதற்காக சுமந்திரன் ஆத்திரப்பட கூடாது.

இந்த இரண்டு தலைவர்களும் இப்பொழுது என்ன சிந்திப்பார்களோ  அதன் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலை இயக்கம் செயல்படும்.

சுமந்திரனுக்கு போராட்டத்தைப் பற்றி தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

எனவே இது விடயம் தொடர்பாக மாவை அண்ணன் அவர்களும் சம்பந்தன் ஐயாவும் எமக்கு வெளிப்படையான பதிலைத் தர வேண்டும்.

அதே நேரத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லாது.

மேலும்  சுமந்திரன்   சுரேஸ் பிரேமச்சந்திரன் , கஜேந்திரகுமார் , விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களை மீண்டும் கூட்டமைப்பில் இணைய சொல்லி இருக்கின்றார்.

ஒற்றுமைக்கு தான் தடையில்லை என்றார்.  இப்படிச் சொல்லும் சுமந்திரன் எதற்காக  தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்? இது முன்னுக்குப் பின் முரணை கொண்டு சுமந்திரன் செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது.என அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply