கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு  நடாத்த உத்தரவிட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்னவை சி.ஐ.டி.யினர் சற்றுமுன்னர் கைது செய்துள்ளனர்.

 

கொழும்பில் வைத்து அவரைக் கைது செய்ததாக  சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்தார்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய பொலிஸ் குழுவில் அங்கம் வகித்த  மூன்று கான்ஸ்டபிள்களையும், கண்டி – குண்டசாலை பகுதிக்கு சென்ற சி.ஐ.டி. சிறப்புக் குழுவினர் இன்று இரவு கைது செய்ததாக  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும்  பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தொடர்பில்  நீதிமன்ற உத்தரவுக்கு அமைய  அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  பொலிஸ் அத்தியட்சர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான குழுவினர்,  துப்பாக்கிச் சூட்டை நடாத்த கட்டளையிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை கைது செய்திருந்ததுடன்,  பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தலைமையிலான குழுவினர் ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களைக் கைது செய்திருந்தனர்.

நேற்று ( 27), துப்பாக்கிச் சூடு  நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ்  உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்றம்  வாசனா நவரட்ன பொலிஸ் மா அதிபருக்கு உத்தர்விட்டிருந்தார்.

அந்த நீதிமன்ற உத்தரவு இன்று ( 28) பொலிஸ் மா அதிபருக்கு  கிடைத்ததாக வீரகேசரியிடம் கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சர் நிஹால் தல்துவ, அந்த நீதிமன்ற உத்தரவை  உடனடியாக அமுல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு ஆலோசனை வழங்கியதாக   கூறினார். இந் நிலையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை  துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்த  பீ 2424/ 2022 எனும் இலக்கத்தை உடைய வழக்கு கேகாலை நீதிமன்றில் விசாரிக்கப்படுகிறது.

கடந்த 19 ஆம் திகதி, எரிபொருள் கோரி ரம்புக்கனை பிரதேச மக்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், அன்றைய தினம் மாலை பொலிசாரால் பலப் பிரயோகம் செய்து கலைக்கப்பட்டது. இதன்போது கண்ணீர் புகை தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியனவும் பதிவாகின.

ரீ 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுடப்பட்டிருந்தமை பின்னர் முன்னெடுத்த நீதிவான்  நீதிமன்ற பரிசோதனைகளின் போதான சாட்சிப் பதிவில் தெரியவந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 42 வயதான சாமிந்த லக்ஷான்  என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.

குறுக்கு வீதி ஒன்றில் ஓடிக்கொண்டிருந்த போது, சாமிந்த லக்ஷான் மீது பின்னால் இருந்து சுடப்பட்டதாக நீதவான் விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த ஒருவர் கூறியுள்ளார்.

மரண பரிசோதனைகளிடையே சாட்சியமளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்ன, தானே துப்பாக்கிச் சூட்டுக்கு  உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே,  இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மரணத்துக்கு  துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயமே காரணம் என  கேகாலை சட்ட வைத்திய அதிகாரியின்  அறிக்கை, சாட்சியம்  ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிவான் திறந்த மன்றில் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த மரணமானது சந்தேகத்துக்கு இடமானது என தீர்மானித்த நீதிவான் வாசனா நவரட்ன,  குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்த உத்தரவிட்ட அதிகாரி, அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய  பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply