தனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இன்று (27) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்ணும் அவரின் இலங்கைத் தோழியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.

மூடப்பட்ட அறையில் வைத்து குறித்த வழக்கை விசாரித்த நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா; இலங்கைப் பெண்ணை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததோடு, அடுத்த மாதம் 29ஆம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார். அதுவரை அந்தப் பெண்ணை அவரின் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்குமாறும் உத்தரவிட்டார்.

அதேவேளை இந்தியாவிலிருந்து வந்துள்ள – இலங்கைப் பெண்ணின் தோழியை, இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

இந்தியா, தமிழகம் – குன்னத்தூரிலிருந்து – தனது இலங்கைத் தோழியை திருமணம் செய்யும் நோக்குடன் இலங்கை வந்த 24 வயதுடைய தமிழ் பெண்ணும், இலங்கையைச் சேர்ந்த அவரின் முஸ்லிம் தோழியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தியப் பெண்ணுடைய இலங்கைத் தோழியின் தந்தை, அக்கரைப்பற்று போலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்படி இரு பெண்களையும் கைது செய்த பொலிஸார், கடந்த 22ஆம் தேதி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக, அந்தப் பெண்கள் இருவரும் நீதிமன்றில் தெரிவித்தார்கள்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து – மனநல மருத்துவ அறிக்கையைப் பெற்று, இன்று 27ஆம் தேதி (இன்று) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பணித்த நீதவான், அதுவரையில் அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முதலாவது சந்தேக நபராக இலங்கைப் பெண்ணும், இரண்டாவது சந்தேக நபராக இந்தியப் பெண்ணும் பெயரிடப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலங்கைப் பெண்ணின் தந்தையான முறைப்பாட்டாளரின் சார்பாக சட்டத்தரணிகள் ஏ.எம். ஜெனீர் மற்றும் எம்.ஐ. றிஸ்வான் ஆகியோர் ஆஜராகினர். சந்தேக நபர்களான இரண்டு பெண்களின் சார்பாகவும் சட்டத்தரணி சதுர்திகா ஆஜரானார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்பொன்று மேற்கொண்டது.

பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிப்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம்

இன்றைய வழக்கு விசாரணையின் போது; இலங்கையில் பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிப்பது குற்றம் என, சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அதேவேளை அவ்வாறான திருமணத்துக்குரிய சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என்பது பற்றி குறிப்பிடப்பட்டதாகவும், வழக்கில் ஆஜரான சட்டத்தரணியொருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“அதேவேளை இலங்கை வந்துள்ள இந்தியப் பெண், இலங்கையின் குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் எவ்வித குற்றமும் மேற்கொள்ளவில்லை எனும் விடயம் – வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது”. எனவும் சட்டத்தரணி கூறினார்.

“இந்தக் காரணங்களை முன்னிறுத்தி, இந்தியப் பெண்ணை இந்த வழக்கிலிருந்து நீதவான் விடுவித்ததோடு, சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக, குறித்த பெண்ணை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்” எனவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதற்கிணங்க வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியப் பெண்ணை அவருக்காக ஆஜரான சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அழைத்துச் சென்றனர்.

இதேவேளை, வழக்கின் முதலாவது சந்தேக நபரான இலங்கைப் பெண்ணை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த நீதிமன்றம், எதிர்வரும் 29ஆம் தேதி – அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதுவரையில் அந்தப் பெண்ணை அவரின் குழந்தையுடன் பெண்கள் காப்பகமொன்றில் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

இதேவேளை இன்று நீதிமன்றில் ஆஜரான சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், இலங்கைப் பெண்ணினுடைய குழந்தையின் எதிர்காலம் குறித்து, நீதவானிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததாகவும் அறிய முடிகிறது.

இலங்கையின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் நபரொருவர் தனது பராமரிப்பிலுள்ள குழந்தையொன்றைப் பிரிந்து வெளிநாடு செல்வது குற்றம் என்பதால், சந்தேக நபரான இலங்கைப் பெண், அவரின் குழந்தையை தொடர்ந்தும் பராமரிக்க வேண்டும் என இன்று நீதிமன்றில் வலியுறுத்தப்பட்டதாகவும் வழக்கில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இலங்கைப் பெண்ணின் கணவர், தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களும் இன்று நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.

வழக்கின் பின்னணி

இந்தியா குன்னத்தூரைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழ் பெண்ணொருவர், கடந்த 20ஆம் தேதி, இலங்கை – அக்கரைப்பற்றிலுள்ள தனது முஸ்லிம் தோழியின் (வயது 19) வீட்டுக்குக்கு வந்திருந்தார்.

இவர்கள் சில காலமாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பேசிப் பழகி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்யத் தீர்மானித்தனர்.

இந்த நிலையில் இலங்கை வந்த இந்தியப் பெண், தனது தோழியை இந்தியா அழைத்துச் சென்று திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியதோடு, அதற்கு மறுத்தால் தான் தற்கொலை செய்யப் போவதாக தங்களை மிரட்டியதாக இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக இலங்கைப் பெண்ணின் தந்தை, இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை கடந்த 22ஆம் தேதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது குறித்த பெண்கள் இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் காண்பித்து, மருத்துவ அறிக்கையைப் பெற்று, அதனை 27 ஆம் தேதி (இன்று) சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதுவரை அவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறும் இதன்போது நீதவான் கட்டளையிட்டிருந்தார்.

மனநல மருத்துவ அறிக்கை என்ன கூறுகிறது?

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க மேற்படி பெண்கள் இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் எவ்வித உள நோய்க்கும் ஆளாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.

தன்பாலின உறவு என்பது – ஓர் உளநோய் அல்ல என்று, மனநல மருத்துவர் யூ.எல். சறாப்டீன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Share.
Leave A Reply