பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ஜூலை முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு பலாலி விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் கொவிட் 19 தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டன.
அவ்விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளுரிலும் நிறுவப்பட்டுள்ள விமானக் கம்பனிகள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன.
அதற்கமைய, பலாலி சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.