திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதுதொடர்பான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனில்லாத நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணியளவில் அவர் உயிரிழந்தார்.

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார் மீனா. இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு செய்திகள் வலம்வரும் நிலையில், சக திரைக்கலைஞரான குஷ்பு விளக்கமொன்றை அளித்துள்ளார்.

“ஊடகங்கள் சற்று பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மீனாவின் கணவருக்கு 3 மாதங்களுக்கு முன்பாக கோவிட் ஏற்பட்டது. அதனால், அவரது நுரையீரலின் நிலை மோசமடைந்தது.

கோவிட் காரணமாக அவர் மரணமடைந்ததாகக் கூறி தவறான செய்தியை பரப்பாதீர்கள். அச்சத்தை ஏற்படுத்தாதீர்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வித்யாசாகரின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply