இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பிர்கள் மத்தியில் யூலை 20 ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தானும் போட்டியிடப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச முதலில் அறிவித்திருந்தார்.

பின்னர் தான் போட்டியிடவில்லை எனத் தெரிவித்துவிட்டு, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அதிருப்தியாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் எனத் தெரிவித்து அவ்வாறே செய்தார்.

இருந்தும் டலஸ் 82 வாக்குகள் மட்டும் பெற்று படுமோசமாக ரணில் விக்கிரமசிங்கவிடம் தோற்றுப் போனார். ரணில் 134 வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார்.

சஜித் போட்டியிடாமல் பின்வாங்கியதற்கு முக்கியமான சில காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், தானும் போட்டியிட்டால் அது மும்முனைப் போட்டியாக மாறி தான் நிச்சயம் தோற்றுப் போவேன் என்பது சஜித்திற்கு தெரியும்.

எனவே, அவர் 2015 ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.கவுடன் இணைந்து சந்திரிகா மேற்கொண்டது போன்ற ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற எண்ணினார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார்.

எனவே, ஐ.தே.கவும் சந்திரிகவும் மைத்திரிபால சிறிசேனவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரித்தெடுத்து பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றனர்.

ரணில் செய்த உபகாரத்துக்கு பரிசாக மைத்திரிபால சிறிசேனவால் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

அதேபோல, இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தெரிவின் போதும் சஜித் அணியால் திட்டமிடப்பட்டது.

அதாவது, தான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு, டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்தால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் தனது கட்சி உறுப்பினர்களும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மனோ கணேசன் அணி, சிறீ.ல.சு.கட்சி, ரவூப் ஹக்கீம் அணி, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார எல்லோரும் இணைந்து டலசை வெற்றிபெற வைக்கலாம் என கணக்குப் போட்டார்.

டலஸ் வெற்றி பெற உதவுவதற்கு கைம்மாறாக தனக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என்பது சஜித்தின் நிபந்தனை. அதை டலசும் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருப்பார்.

ஆனால், ஜனாதிபதியாகும் டலசின் கீழ் அதிகாரமற்ற பொம்மை பிரதமராக மட்டும் இருப்பதை சஜித் ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார்.
அதனால் அவருக்கு தனது எதிர்காலம் குறித்து இரண்டு திட்டங்கள் இருந்ததாக இப்பொழுது அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதில் ஒன்று, 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து ஜனாதிபதியை விட பிரதமருக்கான அதிகாரத்தை அதிகரித்து தன்னை வல்லமை மிகுந்தவராக ஆக்குவது.

இரண்டாவது, டலஸ் அதற்கு உடன்பட மறுத்தால், கோத்தாவுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி அவரை ஜனாதிபதி பதவியை விட்டுத் துரத்திவிட்டு ரணில் ஜனாதிபதி ஆகியது போல, டலசுக்கு எதிராகவும் கிளர்ச்சியைத் தூண்டி, அவரையும் ஜனாதிபதி பதவியை விட்டுத் துரத்திவிட்டு, பிரதமராக இருக்கும் தான் தற்போதைய அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக வருவது.

சஜித் போட்ட இந்த நயவஞ்சக திட்டத்தை உணர்ந்துதான் சஜித் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால் அவரை ஆதரிக்க எண்ணியிருந்த சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் கோஸ்டிகள் பின்னர் சஜித் கை காட்டிய டலசுக்கு ஆதரவளிக்க முன் வந்தனர்.

இல்லாவிடின் அவர்கள் ஒருபோதும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த டலசுக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் எல்லோரும் தலையால் மண் கிண்டியும் டலஸ் பரிதாபகரமாக தோற்றுப் போனார்.

இப்பொழுது அரசியல் வட்டாரங்களில் நிலவும் தகவல்களின்படி, தமது எதிர்காலப் பாதுகாப்பின் நிமித்தம் ரணிலை வெற்றிபெற வைப்பதற்காக முன்னாள் அரச தலைவர்களான கோத்தபாய, மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் பொதுஜன பெரமுனவின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு ரணிலுக்கு வாக்களிக்கும்படி கோரியதாகத் தெரிய வருகிறது.

அதன் மூலமே நாட்டில் ஏற்படவிருந்த ஒரு பெரிய அரசியல் பேரழிவு தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

-பரிமாணன்

Share.
Leave A Reply