அமெரிக்க காங்கிரஸ் சபாநாயர் நான்சி பெலோசி தய்வான் தலைநகர்  தாய்பியில் தடைகளைத் தாண்டி தரையிறங்கியுள்ளார்.

தாய்வானை ஒரு தேசமாக அங்கீகரிக்க மாட்டோம், அதனை சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுவோம் என்று கூறிய உறுதி மொழிகளை அமெரிக்கா மீறுவதாகவே இந்தப் பயணம் அமைந்திருக்கின்றது என்று சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது.

 

பெலோசியின் தாய்வான் பயனம் மிகவும் ஆபத்தானது, நெருப்புடன் விளையாடுவதற்கு நிகரானது, நெருப்புடன் விளையாடியவர்கள் அதனாலேயே காவு கொள்ளப்பட்டு விடுவர் என்று சீன வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கைக்கு பின்னர், பெலோசி தாய்வானுக்குச் செல்வாரா இல்லையா என்பதில் குழப்பான நிலைமைகள் காணப்பட்டிருந்தன. எனினும்,  பொலோசி நெருப்புடன் விளையாடத் தயார் என்பதை தனது பயணத்தின் மூலம் அறிவித்திருக்கின்றார்.

தாய்வானைப் பொறுத்தவரையில் அது உலக அரங்கில் ஒரு அரசாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தாய்வான் இன்னமும் சீனாவின் மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது. சீனாவும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது.

ஆனால் தாய்வானின் பொருளாதார வளர்ச்சியும் சர்வதேச நாடுகளுடனான வர்த்தக உறவுகளும் அதனை சீனாவில் தங்கி இருக்கும் ஒரு நிலப்பரப்பாக கருதமுடியாத நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தாய்வான் ஒரு தனி நாடு என்ற கட்டமைப்புக்குள் வந்துவிட்டது.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைவதாக அறிவித்தது.

ஆனால் ஜப்பானுடன் போரிட்ட மேலை நாடுகளின் படைகள் தாய்வான் உள்ளிட்ட தீவுகளில் தங்கி இருந்தன. அன்றய காலத்தில் தாய்வானும் இதர தென்சீன கடற்கரை தீவு கூட்டங்களும் சீனாவுக்கே சொந்தமானவையாக அறிவிக்கப்பட்டன.

அன்று சீனக்குடியரசு என்று அழைக்கப்பட்ட பெரு நிலப்பரப்பு சுன் யற் சென் என்பவராலும் அவரது ஆதரவாளர்களாலும் நிருவகிக்கப்பட்டு வந்தது.

இரண்டாம் உலகப்போர் முடிவில் சியாங்காய் ஷேக் என்பவர் சீன தேசிய கட்சியின் பெயரால் முழுச் சீனாவையும் ஆட்சி செய்து வந்த போதிலும் சீனப் பெருநிலப்பரப்பில் கம்யூனிஸப் புரட்சியின் பலனாக மாவோ சே துங் தலைவரானார்.

பெருநிலப்பரப்பு மக்கள் சின குடியரசு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  சியாங்காய் சேக் பெரு நிலப்பரப்பை விட்டு தாய்வான் தீவில் அடைக்கலம் புகுந்த கொண்டது மட்டுமல்ல தாய்வானில் தனது ஆட்சியையும் அமைத்துக்கொண்டார்.

தாய்வானில் தொடர்ச்சியாக சீனத் தேசியக் கட்சி உள்@ர் மக்களை அடக்கியாழக் கூடிய இராணுவ ஆட்சியையே வைத்திருந்தது.

1975இல் சியாங்காய் சேக் மரணமானதும் அவரது மகன் சியாங் சிங் குவோ  பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அமெரிக்கா தாய்வானைக் கைவிட்டு சீனாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் கொள்கையை மாற்றிக் கொண்டது.

சோவியத் சோசலிச ரஷ்யாவுடன், சீனா முரண்பட்டு இருந்த நிலையும் சீனாவிடம் இருந்து சோவித்தை தனிமைப்படுத்தும் தேவையும் அமெரிக்காவுக்கு இருந்தது.

இவை, அமெரிக்கா கொள்கை மாற்றத்தினை மேற்கொள்ள வேண்டியதற்கான பிரதான காரணிகளாக அமைந்தன.

சீனாவுடன் முதலில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் அன்றைய  அமெரிக்க  ஜனாதிபதியாக இருந்த ரிச்சட் நிக்சன் அரசாங்கத்தின்  பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்துக்கொண்டிருந்த ஹென்றி கீசிங்கராவார்.

இதேகாலப்பகுதியில் பாகிஸ்தானில் ஜனாதிபதியாக இருந்த யாஹானின் துணையுடன் சீனாவுடன் இரகசிய தொடர்புகளை கீசிங்கர் ஏற்படுத்தி கொண்டார்.

பின்னர் சீனாவுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட நிக்சன், கீசிங்கர் கூட்டணியானது தாய்வான் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டதுடன் ‘ஒரே சீனா’ என்ற பிரகடனத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

‘ஒரே சீனா’ என்பது தாய்வான் வேறாக சீனா வேறாக நாம் பார்க்கமாட்டோம் இரண்டும் ஒரேநாடு தான் என்பதுடன் தாய்வான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் என்றும் அங்கத்துவம் பெறும் நிலையைப் பெறமுடியாது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், வல்லரசுகளின் நலன்களுக்காக தாய்வான் ஏமாற்றப்பட்ட நிலை தான் உருவானது.

குறித்த ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்திலிருந்து 2009ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனாதிபதி ஒபாமா காலம் வரை தாய்வான் விடயத்தினை அமெரிக்கா கைவிட்டிருந்தது.

அமெரிக்கா, தாய்வான் பற்றிய கரிசனை அற்ற நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் தற்பொழுது சீனாவின் உலக ஆளுமை கொண்ட வளர்ச்சி அமெரிக்காவிற்கு சவாலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக தன்னால் கைவிடப்பட்ட விடயத்தினை அமெரிக்கா மீண்டும் கையிலெடுத்துள்ளது. அதாவது, தாய்வானின் விடயம் தொடர்பில் கரிசனை காண்பிக்க ஆரம்பித்தது.

2016இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்ப் தாய்வானின் தெரிவு செய்யப்பட்ட தலைவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

தாய்வான் விடயத்தில் 1979இற்கு பின்னர் சீன கொள்கைக்கு மாறான முன்னெடுக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை என்று சீன பத்திரிகையான குளோபல் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  அதனைத் தொடர்ந்து தாய்வானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இப்பின்னணியில் தற்பொழுது  அமெரிக்காவின் அரச அந்தஸ்தில் மூன்றாவது தலைமைத்துவ இடத்தில் உள்ளவரான காங்கிரஸ் சாபாநாயகர் தாய்வானுக்குச் சென்றுள்ளார். அவருடைய விஜயம் சீனாவின் எச்சரிக்கையைத் தாண்டியே இடம்பெற்றுள்ளது.

இது, சீனாவை சீண்டும் செயற்பாடாக உள்ளது. அதுமட்டுமன்றி, சீனா இம்மாதம் முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சுழற்சி முறை தலைமைப் பதவியை ஏற்ற கொள்ளும் நிலையை அடைந்துள்ளது.

இந்நிலையில் மிகத்திட்டமிட்டே சீனாத் தலைமைத்துவத்தை சவாலுக்கு உள்ளாக்குவதுடன் சீனாவைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் அமெரிக்க சபாநாயகரின் விஜயம் அமைந்துள்ளது.

அத்துடன் சீனாவை ரஷ்ய, இந்திய கூட்டானது, தற்போது சர்வதேச வர்த்தகத்தின்போது, டொலர்களின் உபயோகப்படுத்தவதற்கு பதிலாக சொந்த நாணயங்களையே பயன்படுத்த கூடிய நடைமுறை செயற்பாடுகளில் இறங்கியுள்ளன.

இதனால் அந்த நாடுகளின் நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்நிலையில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடுவதை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது.

இதனால் சீனா, ரஷ்யா இந்திய நாடுகள் மத்தியில் உறவுச்சிக்கலை ஏற்படுத்தவதில் அமெரிக்கா மிக முக்கியமான விடயமாகக் கருதுகின்றது. அத்துடன் இராணுவ ரீதியாகவும் சீனா முக்கியமான நகர்வுகளை செய்து வருகிறது.

உதாரணமாக சீன வர்த்தகப்பாதையில் உள்ள சொலமன் தீவுகளில் உள்@ர் பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடுதல்.

இலங்கை துறைமுகத்தில் செய்மதி தொடர்பு கப்பல் நங்கூரமிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முயலுதல் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுக் கூறமுடியும். சீனாவின் இவ்விதமான  பாதுகாப்பு மூலோபாய விடயங்களை சீனா தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கின்றது.

ஆக சீனா சர்வதேச ஆளுமை குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தம் இக்காலங்களில் சீனாவை அதிக சோதனைக்கு உள்ளாக்குவது அமெரிக்காவுக்கு அவசியமாகின்றது.

அதனை அடிப்படையாக வைத்தே அமெரிக்கா சீனாவைச் சீண்டுவதற்காக நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. இது மீண்டும் ஒப்பந்தத்தினைச் செய்வத்தற்கான முயற்சியா என்பதே இங்குள்ள கேள்வி?

-லோகன் பரமசாமி-

Share.
Leave A Reply