விசுவமடு – வள்ளுவர் புரம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் பெற்றோல் திருடும் போது வசமாக சிக்கியுள்ளார்.
குறித்த நபர் வள்ளுவர் புரம் கிராமத்தில் வீடுகளில் புகுந்து தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள், தென்னை மரங்களில் ஏறி தேங்காய்கள் பறித்தல், வழிப்பறி உள்ளிட்ட கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அண்மை நாட்களாக வீடுகளில் இருக்கும் மோட்டார் சைக்கிள்களில் பெற்றோல் திருடியும் வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பெற்றோலினை திருட முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
இதையடுத்து வீட்டிலுள்ளவர்கள் அயலவர்களின் உதவியுடன் தீயினை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன், திருடன் அருகில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த வேளை இளைஞர்கள் ஒன்று திரண்டு திருடனை பிடித்து கட்டிவைத்துக்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் திருடனை கைது செய்து கொண்டுள்ளதுடன் எரிந்து சேதமான மோட்டார் சைக்கிளையும் கொண்டு சென்றுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட திருடனிடம் விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்