கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு, எழுதப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற தமிழ் நூல்.
இந்த கதையில் கற்பனை கலந்திருந்தாலும், வரலாற்றுப் பாத்திரங்களும், இடங்களும் ஏதோவொரு விடயத்தில் தொடர்பு பட்டிருந்தன.
இந்த கதையில் ஒரு முக்கிய பாத்திரம் ஊமை ராணி. மந்தாகினி தேவி என்றும், ஊமைராணி என்றும் அழைக்கப்படும் இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனின் காதலி என்றும், காவேரித்தாய் என்றும், அருண்மொழி வர்மனை காப்பாறியவள் என்றும் கதையில் கல்கி கூறுகிறார்.
கதையில், இந்த ஊமை ராணி வாழ்ந்த இடம் இலங்கை வடபகுதியில் உள்ள ஒரு தீவு, பூதத் தீவு.
எந்த இடத்திற்கும் கொடுக்காத முக்கியத்துவம் கொடுத்து, பூதத்தீவுக்கு ஒரு அத்தியாயத்தையே ஆசிரியர் கல்கி ஒதுக்கியிருக்கிறார்.
சோழ சேர பாண்டிய பல்லவ சாம்ராச்சிய சக்கரவர்த்திகள் வந்து போன, நடமாடிய, வரலாற்றுப் பூமியிது. புத்த பிரான் கால் பதித்து போதித்த புனித இடம் இது.
வரலாற்றுப் புகழ் பெற்ற, இந்த தீவு, வேறெதுவும் அல்ல, போதத் தீவு, என்றும் பூதத்தீவு என்றும் அழைக்கப்பட்ட வட இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவே.
சுந்தர சோழர், இராஜ ராஜ சோழன், வந்தியத்தேவன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் போன்றோர் கால் பதித்த பூமியிது.
புத்தபிரான் போதனை செய்த புனித இடம்.
பெத்தலேகம், மெக்கா, சார்நாத், பிருந்தாவனம், குருஷேத்திரம், அயோத்தி, மதுரா போன்று நாம் எல்லோரும் பெருமைப் படக்கூடிய வரலாற்றுப் புகழ் பெற்ற புண்ணிய பூமி.
ஆறு மைல் நீளமும், நாலு மைல் அகலமும் கொண்ட இந்த அழகிய தீவு, போற்றப்பட வேண்டியது. வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது. இந்த வரலாற்றுப் பதிவுகள் பொக்கிஷமாக பாதுகாக்க பட வேண்டியவை.
கல்கியின் பூங்குழலி வந்தியத்தேவன் உரையாடலில்….
“நாகத் தீவுக்குப் பக்கத்தில் பூதத் தீவு என்று ஒன்றிருக்கிறது.”
“தீவின் பெயரே கேட்கப் பயங்கரமாயிருக்கிறதே!”
“பயப்படாதே! ஆதியில் அந்தத் தீவின் பெயர் போதத் தீவு. புத்த பகவான் ஆகாச மார்க்கமாக இலங்கைக்கு வந்த போது முதன் முதலில் அந்தத் தீவிலேதான் இறங்கினாராம். அங்கிருந்த அரசமரத்தினடியில் வீற்றிருந்து புத்த தர்மத்தைப் போதித்தாரம். அதனால் போதத் தீவு என்று பெயர் வந்தது.”
“பின்னால் அது ‘பூதத் தீவு’ என்று ஆகி விட்டதாக்கும்.”
கதையின்படி….
சுந்தர சோழ சக்கரவர்த்தி ஒருமுறை இலங்கைக்கு போகும்போது தனியாக ஒரு தீவில் ஒதுக்கப்பட்டார். சுந்தர சோழர் பூதத்தீ (புங்குடுதீவு) வில்தான் ஊமைப் பெண்ணை சந்திக்கின்றார். அவர் அந்த தீவில் சிறுது காலம் தங்கியிருக்கிறார். அப்போது ஊமை ராணி அவருக்கு அன்பு காட்டி பணிவிடை செய்கின்றாள்.
வரலாற்றின்படி, ஊமை ராணி புங்குடுதீவிலேயே வாழ்ந்து இருக்கிறாள். இறுதியாக சுந்தர சோழருக்கு வரும் ஆபத்திலிருந்து அவரை காத்து தான் மடிகிறார். சோழ வம்சத்துக்கே குல தெய்வம் ஆகிறாள்.
“அந்த சொர்க்கத்திற்கு இணையான தீவில் எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்தோம்?” என்று ஊமை ராணி சாகுந்தறுவாயில் சுந்தர சோழர் சொல்கிறார்.
சரித்திர வரலாற்றில் இருந்து…
புத்தபகவானின் உபதேசங்களைப் பயின்று கொண்டு தொள்ளாயிரம் புத்த குருமார் புங்குடுதீவில் வாழ்ந்தார்கள் என்று சிங்கள சரித்திரம் கூறுகின்றது.
இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் கண்டு, கப்பல் வாணிபம் செய்திருக்கின்றார்கள். நிலத்துக்கு உரமிட்டு வளம்படுத்தி நெல்விதைத்தார்கள். குளம் தோண்டி நீர்தேக்கிவைத்தார்கள். சிறு சிறு தானியங்கள் பயிர் செய்தார்கள். . வைத்தியம், சோதிடம், சித்தாந்த தத்துவம் என்பதில் கை தேர்ந்து இருந்தார்கள் என்கிறது வரலாறு.