ilakkiyainfo

ஆதிக்கப் போட்டியின் களமாக மாறுகின்றதா இலங்கை?

இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில், சீனாவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல், இலங்கையின் தென்கோடி துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இது விடயத்தில், எந்த மறைமுக எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கவில்லை என்றால், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்தியா சீனா அதிகாரப் போட்டியின் களமாக, இலங்கை மாறுவது நல்லதல்ல.

இந்தியாவின் கடுமையான எதிர்ப்பு, இலங்கையின் கோரிக்கையை புறக்கணித்த சீனாவின் எகத்தாளப் போக்கு ஆகியவற்றுக்கு இடையில், இலங்கையின் அரசியல், இராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கை எல்லாம் மாட்டிக் கொண்டுள்ளதோ என்றுதான் சிந்திக்க வேண்டியுள்ளது.

கடந்த இரண்டரை வருடங்களில், இலங்கையில் கப்பல் சர்ச்சைகள் தொடர் கதையாகி உள்ளன. இலங்கைக்கு வந்த கப்பல்களும் நாட்டுக்கே வராத கப்பல்களும், இதில் உள்ளடங்குகின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் பயணித்த எண்ணெய்க் கப்பலொன்றில் தீ ஏற்பட்டது.

அதன் பின்னர், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த கப்பலில் ஏற்பட்ட தீ, பாரிய அனர்த்தமாகியதுடன், சுற்றாடல், வாழ்வாதாரம் போன்றவற்றின் மீதும் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.

சேதனப் பசளை என்ற பெயரில், சீனாவில் இருந்து ஆபத்தான குப்பைகளை ஏற்றி வந்த கப்பல் விவகாரம், நீதிமன்றம் வரை சென்றது.

இந்நிலையில், எரிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த ஓரிரு கப்பல்களுக்கு, கொடுப்பனவைச் செலுத்த முடியாத அளவுக்கு, செலாவணி நெருக்கடி உச்சம் தொட்டிருந்தது.

இதன்பின்னர் ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, துறைமுகங்களுக்கு கப்பல்களே வரமுடியாத நிலை உருவானது. இது, பல மாதங்களாக ஒரு சர்ச்சையாக நீடித்தது.

ஆனால், இவற்றை எல்லாம் மிகைத்த சர்ச்சைகளுக்கும் சிக்கல்களுக்கும், சீனாவின் ‘யுவான் வங்க் 5’ என்ற ஆய்வுக் கப்பல் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

இலங்கை எல்லா நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் நாடு. அதுமட்டுமன்றி, இப்போது அனைத்து வழிகளிலும் உதவியை நாடி நிற்கின்ற தேசமும் ஆகும்.

எனவே, எந்த நாட்டையும் பகைக்கவோ எதிர்த்தாடவோ மாட்டாது என்பதே யதார்த்தமானது.

அந்த வகையிலேயே பாகிஸ்தானின் யுத்தக் கப்பலுக்கும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் முறையே கொழும்பு, ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது.

ஆனால், சீனக் கப்பலின் வருகையை கண்டு, இந்தியா பெரிதும் அஞ்சுவதுதான், சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் ‘யுவான் வங்க் 5’ கப்பல், இலங்கையை நோக்கி வருகின்றமையை, இந்தியா தனது அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் மூலம் கண்டறிந்ததாகக் கூறப்படுகின்றது.

இது பற்றி, இலங்கையிடம் கேட்டபோது, ஆரம்பத்தில் அதனை மறுதலிக்கும் பாங்கிலான பதிலையே அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால், பின்னர் ‘முழுப் பூசணிக்காயும்’ வெளியில் வந்தது.

சீனாவும் இந்தியாவும், ஆசியாவில் அதிகாரப் போட்டியொன்றை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இது புவிசார், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான பலப்பரீட்சை என்பது உலகறிந்த இரகசியம்தான்.

எனவே, பரஸ்பரம் இரண்டு நாடுகளும், மற்றைய நாட்டின் பலத்தையும் பலவீனத்தையும், இலங்கையை விட நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.

அந்த வகையிலேயே சீனாவின் ‘யுவான் வங்க் 5’ கப்பல், ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக் கப்பல் என்று சொல்லப்பட்டாலும், நிஜத்தில் அது அதிநவீன கண்காணிப்பு மற்றும் நோட்டமிடும் வசதிகளைக் கொண்டது என்ற விடயம், கொழும்புக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், புதுடெல்லிக்கு நன்கு தெரியும்.

தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகின்ற ஒரு சிறிய நாடான இலங்கையில், அதுவும் ‘பட்டுப்பாதை’க்கு அண்மித்த துறைமுகம் ஒன்றில், ஒரு வாரம் தரித்து நிற்பது, தமக்கு ஆபத்தாக அமையும் என்று இந்தியா கருதுகின்றது.

இந்தியாவை, இந்தக் கப்பல் கண்காணிக்கலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்.

இவ்விடயத்தை, இந்தியா நாசுக்கான முறையில், இலங்கைக்கு வெளிப்படுத்தியது. முதலில் “கப்பல் எரிபொருள் நிரப்பவே வருகின்றது” என்று அரசாங்கம் கூறியது.

பின்னர், குறைந்தபட்சம் இக்கப்பலின் வருகையை தாமதிக்கவாவது நடவடிக்கை எடுக்குமாறு, சீனாவிடம் ஒரு கோரிக்கையை இலங்கை அரசு முன்வைத்தது.

ஆனால், சீனா ஓர் எகத்தாளமான பதிலை வழங்கியிருந்தது. இந்தியா, ‘இதில் மூக்கை நுழைக்கக் கூடாது’ என்று சீனா, சொல்லாமல் சொல்லியிருந்தது. இது இவ் விவகாரத்தை மேலும் பாரதூரமான விடயமாக மாற்றியது.

எது எவ்வாறிருப்பினும், கடைசியில் இந்தியாவின் ஆட்சேபனையையும் மீறி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இக்கப்பல் நங்கூரமிடுவதற்கான அனுமதியை, இலங்கை வழங்கிவிட்டது. இதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக் கடற்பரப்புக்குள் எவ்விதமான ஆய்வுப் பணிகளையும் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிந்திய கதையும் கூறப்படுகின்றது.

ஆனால். இதில் எந்த நாடு சொல்கின்ற, எந்த விளக்கம் உண்மையானது என்பதும், இந்தக் கப்பல் ‘சும்மா’ நின்றுவிட்டுப் போவது, எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும்.

இலங்கையின் புவிசார் அமைவிடம் என்பது மிக முக்கியமானது. அதுமட்டுமன்றி, சாதகமான துறைமுகங்கள், இயற்கை வளங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

இலங்கையில் தமக்கு வேண்டிய ‘ஏதாவது ஒன்றை’ செய்துகொள்ள இந்தியா, சீனா மட்டுமன்றி, அமெரிக்கா போன்ற நாடுகளும் தருணம் பார்த்து, காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

நமது நாட்டில் இடம்பெறுகின்ற இன வன்முறைகள், அரசியல் குழப்பங்கள், ஸ்திரமற்ற நிலைமைகளின் போது, கடன்கள், உதவிகள், செயற்றிட்டங்கள், நட்புறவு என்ற போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வெளிநாடுகள், இலங்கையில் தமது நலன்களை நிலைநாட்டிக் கொள்ளும் உள்நோக்கத்துடன் புகுந்து விளையாடுகின்றன என்பதே, ‘திரைக்குப் பின்னால்’ உள்ள நிதர்சனங்களாகும்.

இலங்கையில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னாலும், பெரிய பெரிய நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன.

அந்த வகையில், ஆட்சி மாற்றங்களை மட்டுமன்றி ஒவ்வொரு நிகழ்வின் ஆழ அகலத்தையும் அலச வேண்டியிருக்கின்றது.

அந்த வகையில் நோக்கினால், இலங்கைக்கு என்ன நல்லது கெட்டது நடந்தாலும் பரவாயில்லை, தங்களுடைய ஆதிக்க, பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியாவும் சீனாவும் சுயநலமாகச் செயற்படுகின்றன என்பதையே, இந்தக் கருத்து மோதல்கள் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

எனவே, இலங்கையை தமது அதிகாரப் போட்டிக்கான அல்லது ‘பனிப்போர்’ ஒன்றுக்கான, ஒரு களமாகப் பயன்படுத்த, முயற்சிகள் எடுக்கப்படுகின்றதா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

அத்துடன், இலங்கையின் அரசாங்கம், இதனை எவ்விதம் கையாள்கின்றது அல்லது, செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதையும் கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது.

இலங்கை என்பது இறைமையுள்ள தனித் தேசம். இந்தியாவின் துணை மாநிலமோ அல்லது, சீனாவின் ஆதிக்க நிலப்பரப்போ அல்ல என்பதை, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய எல்லா நாடுகளுக்கும், தெளிவாகப் புரியும் விதத்தில் அரசாங்கம், இராஜதந்திர மொழியில் சொல்ல வேண்டும்.

அதைவிடுத்து, இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கின்ற சூழலில், இலங்கையின் கோரிக்கையையும் புறக்கணித்து விட்டு, சீனக் கப்பல் வருவதும், அரசாங்கம் தனது பிடியிலிருந்து இறங்கி வந்து, அனுமதி அளிப்பதும், எண்ணிக்கூடப் பார்க்க முடியாத எதிர்வினைகளை, மக்கள் மீது தோற்றுவிக்கும்.

சீனாவால் 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு, அந்த நாட்டின் கப்பலொன்று வர முடியாது என்று, எடுத்த எடுப்பில் கூறிவிட முடியாது. அதேபோன்று, இந்தியாவின் பாதுகாப்புசார் கரிசனையிலும், நிறையவே நியாயம் இருக்கின்றது.

இலங்கையர் என்ற ரீதியில், நமக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இது நமது சக்திக்கு அப்பாற்பட்ட விவகாரமாகும்.

ஆனால், எந்த வெளிநாடுகளும் தமது அரசியல், இராணுவ ஆதிக்கத்தை உரசிப் பார்ப்பதற்கான களமாக, இலங்கையை பாவிக்க இடமளிக்க முடியாது.

அதன் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தானவையாக இருக்கும் என்பதே உலக அனுபவம் ஆகும்.

-மொஹமட் பாதுஷா-

Exit mobile version