நம்மில் பெரும்பாலோர் மரணத்தைப் பற்றி சிந்திக்கவோ பேசவோ விரும்புவதில்லை, ஆனால் சிலர் அதைச் செய்கிறார்கள். இந்தோனீசியாவில் உள்ள சுலவேசியின் டோராஜா பகுதியில், இறந்தவர்கள் அன்றாட வாழ்வில் ஒரு நிலையான பகுதியாக உள்ளனர்.

எச்சரிக்கை: சில படங்கள் வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

மரத்தால் ஆன சாதாரணமான முன்னறை. ஃபர்னீச்சர்கள் எதுவும் இல்லாத, சுவரில் சில படங்கள் மட்டுமே கொண்ட அந்த அறை அரட்டையடிக்கும் குரல்கள் மற்றும் காபியின் வாசனையால் நிரம்பியுள்ளது. இங்கெ நெருக்கிய சொந்தங்கள் ஒன்றுகூடி உள்ளன.

“உன் அப்பா எப்படி இருக்கிறார்?” ஒரு விருந்தினர் கேட்கிறார். மனநிலை திடீரென்று மாறுகிறது. எல்லோரும் மூலையில் உள்ள சிறிய அறையைப் பார்க்கிறார்கள். அங்கு ஒரு முதியவர் ஒரு வண்ணமயமான படுக்கையில் படுத்திருக்கிறார்.

“அவர் இன்னும் உடல்நிலை சரியில்லாமல்தான் இருக்கிறார்,” அவரது மகள் மாமக் லிசா அமைதியாக பதிலளித்தார்.

புன்னகைத்தவாறே எழுந்த மாமக் லிசா அந்த முதியவரின் அருகில் சென்று, அவரை மெதுவாக அசைத்தார். பின்னர் “அப்பா உங்களைப் பார்க்க சிலர் இருக்கிறார்கள். இது உங்களுக்கு அசௌகரியத்தையோ கோபத்தையோ ஏற்படுத்தாது என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

உள்ளே வந்து பாலோ சிரிண்டாவை சந்திக்குமாறு மாமக் லிசா என்னை அழைத்தார்.

என் கண்கள் படுக்கையில் நிலைத்தன. பாலோ சிரிண்டா முற்றிலும் அசைவில்லாமல் இருக்கிறார். கண் சிமிட்டல் கூட இல்லை.

அவருடைய தூசி படிந்த கண்ணாடி மூலம் அவரது கண்களை என்னால் பார்க்க முடியவில்லை.

அவரது தோல் கரடுமுரடாக சாம்பல் நிறமாக உள்ளது. பூச்சிகள் தின்றதுபோல எண்ணற்ற துளைகள் காணப்பட்டன. அவரது உடல் பல அடுக்கு ஆடைகளால் மூடப்பட்டுள்ளன.

அவரது இளம் பேரக்குழந்தைகள் விளையாடியபடி அறைக்குள் ஓடிவந்து என்னை யதார்த்தத்திற்கு அழைத்துச் வருகின்றனர்.

“ஏன் தாத்தா எப்பொழுதும் தூங்குகிறார்?” குழந்தைகளில் ஒன்று மெல்லிய சிரிப்புடன் கேட்கிறது. “தாத்தா, எழுந்திருங்கள், சாப்பிட போகலாம்!” என்று மற்றொரு குழந்தை கிட்டத்தட்ட கூச்சலிடுகிறது.

“ஷ்ஷ்ஷ்… தாத்தாவை தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள், அவர் தூங்குகிறார்,” மாமக் லிசா அவர்களைப் பார்த்துப் பேசுகிறார். “நீங்கள் அவரை கோபப்படுத்தப் போகிறீர்கள்.”

இங்கே ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,பாலோ சிரிண்டா என்ற இந்த மனிதர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.

வெளியாட்களுக்கு இறந்த மனிதரின் உடலை வீட்டில் காட்சிக்கு வைக்கும் எண்ணம் மிகவும் அந்நியமானதாக தோன்றுகிறது. ஆயினும்கூட, கிழக்கு இந்தோனீசியாவில் உள்ள சுலவேசியின் டோராஜா பகுதியின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இது பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் பாரம்பரியம் ஆகும்.

இங்கே நிலவும் அனிமிஸ்ட் (உயிரில்லாப் பொருட்களிலும் உயிர் பண்பை காண்பது) நம்பிக்கைகள், இந்த உலகத்திற்கும் அடுத்த உலகத்திற்கும் இடையிலான கோட்டை மங்கலாக்குகின்றன. இதனால் இறந்தவர்கள் உயிருள்ளவர்களின் உலகில் தொடர்ந்து வாழ்கிறார்கள்.

ஒருவர் இறந்த பிறகு இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு மாதங்கள், சில சமயங்களில் வருடங்கள் ஆகலாம்.

இதற்கிடையில், குடும்பத்தினர் அவர்களின் உடலை வீட்டிலேயே வைத்து, அவர்கள் நோய்வாய்ப்பட்டதைப் போல கவனித்துக்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு, பானங்கள் மற்றும் சிகரெட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.

அவர்களின் உடைகளை துவைத்து, ஆடைகளை அடிக்கடி மாற்றுகிறார்கள். இறந்தவர்கள் அறையின் மூலையில் ஒரு கிண்ணத்தை “கழிவறை”யாக வைத்திருக்கிறார்கள். மேலும் இறந்தவர்கள் ஒருபோதும் தனியாக விடப்படுவதில்லை.

இருட்டாகும்போது அவர்களுக்காக விளக்குகள் போடப்படுகின்றன. சடலங்களை முறையாக பராமரிக்காவிட்டால், பிரிந்து சென்ற உறவினர்களின் ஆவிகள் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர்.

பாரம்பரியமாக உடலைப்பாதுகாக்க சிறப்பு இலைகள் மற்றும் மூலிகைகள் உடலில் தேய்க்கப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம், அதற்குப் பதிலாக ஃபார்மலின் என்ற பாதுகாக்கும் ரசாயனம் செலுத்தப்படுகிறது.

இதனால் அறையில் ரசாயன நெடிஅடிக்கிறது.

தன் தந்தையின் தோல் போல ஆகிவிட்ட கன்னத்து எலும்புகளை அன்புடன் தடவிய மாமக் லிசா, அவருடன் வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பை இப்போதும் உணர்கிறேன் என்று கூறுகிறார்.

“நாங்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், அப்பா எப்படி இருக்கிறார் என்று பார்க்க உறவினர்கள் அடிக்கடி வருவார்கள் அல்லது தொலைபேசியில் அழைப்பார்கள். ஏனென்றால் அவரால் நாம் பேசுவதைக் கேட்க முடியும் என்றும் அவர் இன்னும் இருக்கிறார் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”

பொதுவாக மக்களுக்கு இருக்கும் இறந்தவர்களைப் பற்றிய பயத்தின் அறிகுறியை, நான் இங்கு காணவில்லை.

என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். என்ன நடந்தது என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்வதற்கு முன்பே அவர் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டார். இந்த துயரத்திலிருந்து நான் இன்னும்கூட மீளவில்லை.

மாமக் லிசா
படக்குறிப்பு, மாமக் லிசா

தனது தந்தை வீட்டில் இருப்பது தான் துக்கப்படுவதற்கு உதவியதாக லிசா என்னிடம் கூறுகிறார். இறந்த மனிதர் என்ற அவரது புதிய அடையாளத்துடன் மெதுவாக ஒத்துப்போக அது அவருக்கு நேரம் அளித்துள்ளது.

தங்கள் வாழ்நாளில் டோராஜன்கள் செல்வத்தை குவிக்க கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் ஒரு ஆடம்பரமான வாழ்க்கைக்காக பாடுபடுவதை விட, ஒரு ஆடம்பரமான மரணத்திற்காக அவர்கள் சேமிக்கிறார்கள்.

அவரது குடும்பத்தினர் உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும். விடைபெறத் தயாராகும் வரை சிரிண்டா இங்கேயே படுத்திருப்பார்.

கற்பனை செய்ய முடியாத ஆடம்பரமான இறுதிச் சடங்கின் போது கிராமத்தைச் சுற்றி ஒரு பெரிய ஊர்வலமாக அவரது உடல் எடுத்துசெல்லப்படும்போது அது குடும்பவீட்டை விட்டு வெளியேறும்.

இறுதிச் சடங்குகளின்போது ஆன்மா இறுதியாக இந்த பூமியை விட்டு வெளியேறும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பின்னர் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையின் இறுதிக் கட்டமான பூயாவிற்கு அதன் நீண்ட மற்றும் கடினமான பயணத்தை ஆன்மா தொடங்கும்.

அங்கு ஆன்மா மறுபிறவி பெறுகிறது. எருமைகள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஆன்மாவைக் கொண்டு செல்வதாக நம்பப்படுகிறது.

அதனால்தான் இறந்தவரின் பயணத்தை எளிதாக்க உதவும் வகையில் குடும்பங்கள் தங்களால் இயன்ற எண்ணிக்கையில் எருமைகளை பலிகொடுக்கின்றன.

டோராஜன்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த சடங்குகளுக்காக சேமிப்பதில் செலவிடுகிறார்கள்.

குடும்பங்கள் போதுமான அளவு சேமித்தவுடன், அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து எல்லா நண்பர்களையும் உறவினர்களையும் அழைக்கிறார்கள்.

உயிருடன் இருக்கும் போது இறந்தவர் எவ்வளவு செல்வந்தராக இருக்கிறாரோ, அவ்வளவு பெரிதாகவும், விரிவாகவும் சடங்குகள் இருக்கும்.

நான் கலந்துகொள்ளப்போகும் இறுதிச் சடங்கு டெங்கென் என்பவருடையது. அவர் ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.

டெங்கென் ஒரு பெரிய பணக்காரர். அதிகார பலம் பெற்றவர். அவரது இறுதிச் சடங்கு நான்கு நாட்கள் நீடிக்கும்.

அதில் 24 எருமைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பன்றிகள் அவரது நினைவாக பலியிடப்படும்.

டெங்கெனின் வாழ்க்கையையும் அவரது மறுபிறவியையும் கொண்டாடும் விருந்தினர்களிடையே இந்த இறைச்சி பின்னர் விநியோகிக்கப்படும்.

இறுதிச் சடங்கிற்கு 50,000 டாலர்களுக்கும் அதிகமாக செலவாகிறது என்று அவரது மகன் என்னிடம் கூறினார். இது சராசரி ஆண்டு வருமானத்தை விட 10 மடங்குக்கும் அதிகம்.

இந்த ஆடம்பரமான, வண்ணமயமான, நடனம், உற்சாகமான இசை, சிரிப்பு மற்றும் நிச்சயமாக ரத்தம் நிறைந்த இந்த இறுதிச்சடங்கை என் தந்தையின் இறுதிச் சடங்குடன் ஒப்பிட்டுப்பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

அவருக்காக ஒரு சிறிய, இருண்ட மற்றும் அமைதியான இடத்தில் நெருக்கமான குடும்பத்துடன் ஒரு சிறிய சடங்கை நாங்கள் நடத்தினோம்.

டெங்கெனின் இறுதிச் சடங்கு பற்றி அவரது குடும்பத்தினர் என்ன நினைவில் வைத்துக்கொள்வார்களோ அதற்கு நேர்மாறாக என் தந்தையின் இறுதிச்சடங்கு மிகவும் சோகமான மற்றும் இருண்ட நினைவாக என் மனதில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர்களை வீட்டிலேயே வைத்திருக்கும் வழக்கம்

இறுதிச் சடங்கிற்குப் பிறகு, இறுதியாக இறந்தவர்களை புதைக்கும் நேரம்.

டோராஜன்கள் அரிதாகவே தரையில் புதைக்கப்படுகின்றனர். மாறாக, அவர்கள் குடும்ப கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர் அல்லது குகைகளுக்குள் அல்லது வெளியே வைக்கப்படுகின்றனர்.

இது ஒரு மலைப்பகுதி என்பதால் இங்கு பல குகைகள் உள்ளன. இந்த குகைகள் மறு உலக வாழ்க்கையுடன் இணைக்கும் மற்றொரு இடமாகும்.

சில குகைகள் பல கிலோமீட்டர்கள் வளைந்து செல்கின்றன. எண்ணற்ற சவப்பெட்டிகள், சடலங்கள், தளர்வான மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கூட இங்கு காணப்படுகின்றன. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்கள் இறந்த உறவினர்களுக்கு “தேவையானவற்றை” கொண்டு வருகிறார்கள். பெரும்பாலும் பணம் மற்றும் சிகரெட்டுகள் கொண்டுவரப்படுகின்றன.

புகைப்படம் எடுப்பதற்கு முந்தைய பாரம்பரியத்தில், இறந்த உன்னத ஆண்கள் மற்றும் பெண்களின் உருவங்கள் மரத்தில் கவனமாக செதுக்கப்பட்டுள்ளன.

Tau tau என்று அழைக்கப்படும் இந்த சிற்பங்கள், இறந்தவரின் உடைகள், நகைகள் மற்றும் முடியை கூட அணிந்துள்ளன.

இந்த மூதாதையரின் சிற்பங்கள் இந்த உலகத்தைப்பார்த்தபடி இருக்கின்றன. சராசரியாக இவற்றைத்தயாரிக்க சுமார் 1,000 டாலர் செலவாகும்.

ஆனால் அடக்கம் செய்வது இறுதியானது அல்ல. இறந்தவர்களுக்கும் உயிருடன் இருப்பவர்களுக்கும் இடையிலான உறவு மேலும் தொடர்கிறது. ம’நேனே எனப்படும் சடங்கு அதாவது “பிணங்களை சுத்தப்படுத்துதல்” மூலம் இது தொடர்கிறது.

ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை குடும்பங்கள் நீண்ட காலமாகப் பிரிந்த உறவினர்களின் சவப்பெட்டிகளை கல்லறையிலிருந்து வெளியே எடுத்து, இறந்தவர்களுடன் ஒரு பெரிய மறுசந்திப்புக்காக அவற்றைத் திறக்கிறார்கள்.

ம’நேனே விழாக்களில், நண்பர்களும் குடும்பத்தினரும் இறந்தவர்களுக்கு உணவு மற்றும் சிகரெட்டுகளை அன்புடன் வழங்கி அவர்களை சுத்தம் செய்கிறார்கள். பின்னர் அவர்களுடன் புதிய குடும்ப புகைப்படங்களை எடுத்துக்கொள்வார்கள்.

சமூகவியல் பேராசிரியர் ஆண்டி டான்டி லோலோ இதை “உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையே சமூக தொடர்புகளை” பேணுவதற்கான ஒரு வழி என்று விவரிக்கிறார்.

ஞாயிறு தொழுகைக்குப் பிறகு டோராஜன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேவாலயத்திலிருந்து ஆரஞ்சு ஓடுகள் மற்றும் ஜன்னல்கள் இல்லாத ஒரு சிறிய சதுர கட்டடத்திற்குச் சென்றபோது நானும் அவர்களுடன் செல்கிறேன்.

அது ஒரு குடும்ப கல்லறை. பெண்களின் அழுகைச் சத்தத்துடன் கலந்த கோஷம் ஒரு விசித்திரமான சூழலை உருவாக்கியது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மரியா சோலோவின் ம’நேனே வுக்காக எல்லோரும் இங்கே கூடியுளனர்.

அவருக்கு இப்போது 93 வயது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு அவர் இந்த குடும்ப கல்லறையில் வைக்கப்பட்டார். இப்போது அவர் மீண்டும் வெளியே வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

 

தங்கம் மற்றும் வெள்ளியில் வடிவியல் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு உருளை சவப்பெட்டியை ஆண்கள் வெளியே கொண்டு வருகிறார்கள்.

அதன் மேல், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மரியாவுக்கு காணிக்கை வைக்கிறார்கள் . அதாவது கோகோ செடியின் இலைகள், சிகரெட்டுகள் மற்றும் புதிய எருமை காதுகள் வைக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் சவப்பெட்டியைத் திறப்பதற்கு முன் இன்னும் ஒரு சடங்கு செய்யப்பட வேண்டும், அது எருமை பலியாகும்.

அவர்கள் இறுதியாக சவப்பெட்டியைத் திறந்தபோது, மீண்டும் ஒருமுறை கஸ்தூரி மற்றும் ஃபார்மலின் ஆகியவற்றின் கடுமையான வாசனை காற்றை நிரப்புகிறது.

ஒரு வயதான பெண்ணின் சிறிய உடல் உள்ளே அசையாமல் இருக்கிறது. அவருடைய மெல்லிய முகம் நன்கு தெரியும்விதமாக வெண்மையான கூந்தல் பின்னோக்கி நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.

அவரது வாய் மற்றும் கண்கள் பாதி திறந்திருக்கின்றன. அவரது சாம்பல் நிறத்தோல் அவரை சிலை போலத் தோற்றமளிக்கச்செய்கிறது.

இறந்தவர்களை வீட்டிலேயே வைத்திருக்கும் வழக்கம்

அம்மாவை இப்படிப் பார்க்கும்போது அவருடைய குழந்தைகள் எப்படி உணர்கிறார்கள்? அவரது மூத்த மகன், ஒரு தொழிலதிபர்.

இப்போது இந்தோனீசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் வசிக்கிறார். அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார்.

அது அவரைத் தொந்தரவு செய்யவே இல்லை என்று அவர் என்னிடம் கூறுகிறார். அது மட்டுமல்ல, அவரது அம்மா எவ்வளவு பொறுமையாக இருக்கிறார், அவர் தன்னை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை இது அவருக்கு நினைவூட்டுகிறது என்று கூறுகிறார்.

சிரிண்டாவின் குடும்பத்தைப் போலவே, மரியா சோலோவின் உறவினர்களும், அவர் சாகவில்லை என்பது போல் அவரைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்.

உடல் வெளியே எடுக்கப்பட்டவுடன், துக்கம் மற்றும் பதற்றத்தின் அறிகுறிகள் மறைந்துவிடுகின்றன.

என்னுடைய பதற்றமும் விலகிவிட்டது. மரியா சோலோவுக்கு நெருக்கமான மற்றொரு விருந்தினர், அவரது மருமகள் எஸ்டெர்சோபோன். ம’நேனே என்ற இந்தச்சடங்கு தனது துயரத்தின் சுமையைக் குறைப்பதாகவும், நீண்ட காலமாகப் பிரிந்த தனது அன்புக்குரியவரின் நினைவுகளைப் புதுப்பிக்க உதவுவதாகவும் அவர் என்னிடம் கூறினார்.

என் மறைந்த தந்தை அவர் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்தாரோ அப்படி நினைவுகூர விரும்புகிறேன் என்று நான் எஸ்டெர்சோபனிடம் சொன்னேன்.

அவருடைய உடலைப் பார்த்தால் அது என் மனதில் நான் வைத்திருக்கும் பிம்பத்தை மாற்றிவிடும் என்று நான் கவலைப்படுகிறேன் என்று கூறினேன்.

குடும்ப உறுப்பினர்கள் இறந்தவர்களை நினைவுகூருவதில் இதனால் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்று எஸ்டெர்சோபோன் வலியுறுத்தினார்.

எல்லோரும் மரியாவுடன் சிறிது நேரம் செலவழித்து, அவருடன் சில குடும்ப புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிறகு, அவளுடைய ஆடைகளை மாற்றுவதற்கான அடையாளமாக ஒரு வெள்ளைத்துணியில் அவரைச்சுற்றி வைக்கின்றனர். பல கிராமங்களில் புதிய உடையை மாற்றியபிறகு, அவரை ஊரைச்சுற்றி அழைத்துச்செல்வார்கள்.

ஆனால் காலப்போக்கில் 80% க்கும் அதிகமான டோராஜன்கள் பழைய ஆன்மிஸ்ட் மதமான அலுக் டோலோவிலிருந்து விலகி கிறிஸ்தவர்களாக மாறியதால், இந்த நடைமுறைகள் மெதுவாக மறைந்து வருகின்றன.

இதன் விளைவாக, பழைய பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன.

இருப்பினும் இங்கு கிறித்துவமும் அலுக்டோலோவும் எப்போதுமே ஒன்றிணைந்து வாழ்கின்றன.

“ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு டச்சு மிஷனரிகள் முதன்முதலில் வந்தபோது அவர்கள் ஆனிமிஸ்ட் மதத்தை முற்றிலுமாக தடை செய்ய முயன்றனர்.

இருப்பினும், புதிய மதத்தை டோராஜன்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும், மேலும் அவர்களின் சடங்குகளைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்பதை அவர்கள் 1950களில் அவர்கள் உணர்ந்தனர்,”என்று சமூகவியல் பேராசிரியர் ஆண்டி டான்டி லோலோ கூறினார்.

உலகின் பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கு இந்த நடைமுறைகள் வினோதமாகத் தோன்றலாம்.

ஆனால் அவற்றின் பின்னால் உள்ள கொள்கைகள், மற்ற கலாசாரங்களில் காணப்படும் கொள்கைகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை அல்ல.

இறந்தவர்களை நினைவு கூர்வது நம்மில் பலரும் செய்ய முயற்சிக்கும் ஒன்று. டோராஜன்கள் மிகவும் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்கள் என்பதே இதில் இருக்கும் ஒரே வேறுபாடு.

Share.
Leave A Reply