இந்த ஆண்டின் செப்டெம்பர் வரையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இலங்கையில் ஐரோப்பிய நாடுகளின் பயணிகள் வருகைதரும் காலகட்டமாகும். குறிப்பாக ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு ஆயத்தமாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு செப்டெம்பர் இறுதி வரை ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையானது சுமார் 526,000 ஆக பதிவாகியுள்ளதாகவும், அதன் மூலமாக 829 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்பார்த்த எண்ணிக்கையை விடவும் குறைவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவித்த அவர், செப்டெம்பர் மாதம் வரையில், சுமார் 1.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 300,000 சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply