• முகமது அசாருதீனுடன் தற்போது இந்தியாவில் யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக அவரது செல்போன் உரையாடலை வைத்து போலீசார் பட்டியல் தயாரித்தனர்.

• கோவையில் தற்போது நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், முகமது அசாருதீனுடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்தது தெரியவந்தது.

சென்னை: இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள்.

கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் இலங்கையையே உலுக்கியது. இலங்கையில் நடைபெற்ற இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் பின்னணியில் ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜக்ரன் ஹசீமுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது இந்தியாவின் தென்மாநிலங்களில் நிறைய பேரிடம் அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக முகமதி அசாருதீன் என்பவருடன் அவர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முகமது அசாருதீன் தற்போது கேரளாவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே முகமது அசாருதீனுடன் தற்போது இந்தியாவில் யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக அவரது செல்போன் உரையாடலை வைத்து போலீசார் பட்டியல் தயாரித்தனர்.

அப்போது கோவையில் தற்போது நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், முகமது அசாருதீனுடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்தது தெரியவந்தது.

2019-ம் ஆண்டு இதுகுறித்த சந்தேகத்தின் பேரில் ஜமேஷா முபினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.

ஆனாலும் அவர் மீது சந்தேகம் இருந்ததால் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தான் ஜமேஷா முபின் கோவையில் கார் குண்டு தாக்குதல் நடத்தி உள்ளது தெரியவந்தது.

ஜமேஷா முபின் ஏற்கனவே ஒருமுறை கார் குண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருந்தான். அதை செயல்படுத்த முயன்ற போது போலீஸ் கெடுபிடி காரணமாக அவனால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் அவன் 2-வது முறையாக தாக்குதல் நடத்த திட்டமிட்டு காரை ஓட்டி வந்தான். ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காரில் வந்து கொண்டிருந்தபோதே அது வெடித்து சிதறியதால் அவன் பலியானான்.

ஆனால் அவனது முயற்சி தோல்வியில் முடிந்தது. வெடித்து சிதறிய காரில் 2 சிலிண்டர்கள் இருந்தன.

இதேபாணியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் தான் இலங்கையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

எனவே கேவையிலும் 100-க்கும் மேற்பட்டவர்களை கொல்லும் நோக்கத்திலேயே அவன் கார் ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஜமேஷா முபின் ஓட்டி வந்த கார் முழுக்க முழுக்க பெட்ரோலில் இயங்கக் கூடிய கார். எனவே அதை வெடிக்க வைக்கும் நோக்கத்திலேயே 2 சிலிண்டர்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜமேஷா முபினும், முகமது அசாருதீனும் சேர்ந்து கோவையில் எந்தெந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

எனவே இப்போது நடந்த தாக்குதலை ஜமேஷா முபின் மட்டும் நடத்தி இருக்க முடியாது. இதன் பின்னணியில் சிலர் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

முகமது அசாருதீன் தற்போது ஜெயிலில் இருக்கிறார். எனவே ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்று தீவிர விசாரணை நடத்தி முதல் கட்டமாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்னும் பலர் அவருடன் தொடர்பில் இருக்கலாம் என்றும் அவர்கள் கோவையில் வெவ்வேறு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியுடன் ஜமேஷா முபின் பழகி உள்ள நிலையில் அவனது பின்னணி பற்றியும் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசாரும், துணை நிலை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கார் குண்டு வெடிப்பு

Share.
Leave A Reply