இந்தியாவில் ஆரோக்கியமான வணிகப் போட்டியை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பான இந்திய வணிகப் போட்டி ஆணையம் Competition Commission of India (CCI) கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது.
ஒருமுறை அல்ல, ஒரே வாரத்தில் இரண்டு முறை என மொத்தமாக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.2274 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 20ஆம் தேதி கூகுளுக்கு சிசிஐ ரூ.1337.76 கோடி அபராதம் விதித்தது. ஆண்ட்ராய்டு மொபைல் சாதன வணிகத்தில் அதன் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் அக்டோபர் 25 அன்று, அதே கமிஷன் ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது. இந்த முறை கூகுள் பிளே ஸ்டோரில் பணம் எடுப்பது தொடர்பான கூகுளின் கொள்கை காரணமாக அபராதம் விதிக்கப்பட்டது.
சிசிஐ இந்த இரண்டு வழக்குகளையும் 2019 மற்றும் 2020 முதல் தனித்தனியாக விசாரித்து வந்தது.
இந்த அபராதம் ரூ.2274 கோடி அல்லது சுமார் 280 மில்லியன் டாலர்கள் என்பது கடந்த ஆண்டு கூகுளின் ஆண்டு வருமானமான 257 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.21 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது, கடுகளவு கூட இல்லை.
ஆனால் இந்த அபராதம் கூட கூகுள் நிறுவனத்துக்கு ஒரு சிக்கலை உருவாக்கக்கூடும்.
எப்படி? இதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் முன், கூகுளைப் புரிந்துகொள்வது அவசியம்.
ஒரு கேள்விக்கான விடை காணவோ, ஏதாவது ஒரு பெயரை டைப் செய்து, எதையாவது தேடவேண்டுமென்றாலோ, யாருடைய ஜாதகத்தையாவது தேட வேண்டுமென்றாலோ, வரலாறு குறித்து அறிய வேண்டுமென்றாலோ அனைத்துத் தேவைகளுக்கும் நம்பகமான ஒரே வழியாக இருப்பது கூகுள் தான்.
ஆனால் கூகுள் என்பது வெறும் சர்ச் எஞ்சினாகவோ,இன்டர்னெட் ப்ரௌசராகவோ, மின்னஞ்சல் சேவையாகவோ மட்டும் இல்லை.
கூகுள் தற்போது இவை அத்தனையும் ஒருங்கே அமைந்த ஒற்றை ஆயுதமாகத் தான் விளங்குகிறது. இது நம் வாழ்க்கையை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துள்ளது, மேலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கூட இப்போது கூகுளுடனான போட்டியில் சிக்கலில் சிக்கியுள்ளன.
கூகுள், தற்சமயம், பிக் டெக் என்று அழைக்கப்படும் மெட்டா/ஃபேஸ்புக், அமேசான் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற நிறுவனங்கள் போல அல்ல.
கட்டுக்கடங்காத பிக் டெக் நிறுவனங்கள் அபாயம்
அதாவது, மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள். அவற்றின் அளவு, அவற்றின் வளங்கள் மற்றும் அவர்களின் கைகளில் உள்ள தொழில்நுட்பம், இவை கட்டுப்பாடற்றதாக மாறும் அபாயம், இப்போது ஏறக்குறைய உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் இதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளன.
அதனால்தான், அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு, அவை தலைப்புச் செய்திகளாகவும் மாறுகின்றன.
கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்?
கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறிய பொறியாளர் பணி நீக்கம்
கூகுளின் உரையாடல் தொழில்நுட்பத்துக்கு ‘உணர்வும் மனமும்’ இருப்பதாக அச்சம்
இதுபோன்ற முடிவுகள் இந்தியாவில் முதன்முறையாக வந்திருக்கலாம், ஆனால், எந்த நிறுவனம் அல்லது பிராண்டின் சாதனங்களை வாங்கினாலும், அதை இயக்கும் ஆபரேட்டிங்க் சிஸ்டம் கூகுள் நிறுவனத்தினுடையது தான் என்பதை ஆண்ட்ராய்டு ஃபோன்கள் அல்லது ஆண்ட்ராய்டில் இயங்கும் எந்த சாதனத்தையும் பயன்படுத்துபவர்கள் நன்றாக அறிவார்கள்.
தன் ஆபரேட்டிங்க் சிஸ்டமுடன் கூகுள், தன் பல செயலிகளையும் தொலைபேசியில் நிறுவுகிறது.
ஓஎஸ் எப்போதும் கூகுல் நிறுவனத்துடையது தான். கூகுளின் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், கூகுளின் ஆப் ஸ்டோர், அதாவது ப்ளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஜிமெயில் போன்ற இணைய சேவைகள், அதன் ப்ரௌசரான குரோம் மற்றும் அதே வெப் வீடியோ பதிவிடும் யூட்யூப் ஆகியவற்றை மொபைல் ஃபோனில் நிறுவ, மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக சிசிஐ தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், தொலைபேசி வாங்குபவர் தனது இருப்பிடம் மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்தச் சேவைகளுக்கு வழங்காமல் தொலைபேசியை இயக்க முடியாது. மேலும் இந்த ஆப்ஸ் மற்றும் சேவைகளை நீக்கும் வாய்ப்பும் பயனருக்கு இல்லை.
மொபைல் பயன்பாட்டாளர்
இந்தியாவில் சுமார் 60 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் 95 சதவீதம் பேர் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துகின்றனர்.
கூகுளின் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு
இது மேலோட்டமாகப் பார்த்தால் சிறு பிரச்னை போலத் தோன்றலாம். ஆனால், சந்தையின் மீதான தனது செல்வாக்கை கூகுள் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதை சிசிஐ கண்டறிந்துள்ளது. கூடுதலாக, இதுபோன்ற செயல்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் சேவைகளை உருவாக்கி இயக்கும் பிற நிறுவனங்களின் வணிகத்தை இது கட்டுப்படுத்துகிறது.
சிசிஐ, கூகுலுக்கு அபராதம் விதித்தது மட்டுமல்லாமல், பிற செயலிகளை உருவாக்குபவர்களுக்கும் தடைகள் உடனடியாக அகற்றப்படுவதை உறுதிசெய்யவும், மேலும் ஃபோன் வாங்குபவர்கள் கூகுளின் ஆப்ஸ் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தேர்வுசெய்யவும் வழி வகை செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவது வழக்கு, ஆண்ட்ராய்ட் மூலம் செயல்படும் ஒரு பயன்பாட்டை உருவாக்கிய நிறுவனங்கள் அதை கூகுல் பிளே ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறித்தது. இதிலும் கூகுள் ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க கூகுள் ப்ளே பில்லிங் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. இது கூகுளின் சொந்த கட்டணச் சேவையாகும், நிச்சயமாக இதைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் அல்லது கமிஷன் செலுத்த வேண்டும்.
இந்த நிபந்தனை பயன்பாட்டின் ஆரம்ப கட்டணத்திற்கு மட்டுமல்ல, அதன் பயன்பாட்டின் போது செய்யப்படும் எந்தவொரு கட்டணத்திற்கும் அவசியமானது.
இந்த வழக்கில் கூகுள் தனது சந்தை பலத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டிய சிசிஐ, அபராதத்துடன் மூன்றாம் தரப்பு கட்டணச் சேவைகளையும் பயன்படுத்த அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு மூலம் சாத்தியமாகியுள்ள தொழில்நுட்பம், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு மற்றும் பல வாய்ப்புகள் இந்திய டெவலப்பர்களுக்குப் பெரிதும் பயனளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில் பெரும் பங்கு: கூகுள்
இதுமட்டுமின்றி, குறைந்த விலையில், இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு பங்களித்துள்ளதாகவும், அதன் பலன்களை கோடிக்கணக்கான இந்திய நுகர்வோருக்கு வழங்கியதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்த உத்தரவுகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட வழியை முடிவு செய்யவிருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் தன் தரப்பு வாதத்தை முன்வைக்கவும் ஆவணச் சான்றுகளைச் சமர்ப்பிக்கவும் முப்பது நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது சிசிஐ. மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா தவிர பிற நாடுகளிலும் இதுபோன்ற வழக்குகளில் கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளி நாடுகளிலும் கூகுள் மீது பல குற்றச்சாட்டுகள்
தென் கொரியாவும் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு மூன்றாம் தரப்பு பணம் செலுத்துவதற்கான வழி வகை செய்யுமாறு அறிவுறுத்தி, சுமார் $ 180 மில்லியன் அபராதம் விதித்தது.
இறுதியில் அந்நிறுவனம் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில், 2018ஆம் ஆண்டில், ஆன்டிட்ரஸ்ட் கமிஷன் கூகுளுக்கு 4340 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்தது.
இதற்கு எதிராக கூகுள் மேல்முறையீடு செய்தது, ஆனால் அங்கும் அதன் விண்ணப்பம் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது.
இந்தியாவில் கூகுளின் ராஜபாட்டையில் தடைகள் முளைத்துள்ளன. இன்று இல்லை என்றால் நாளை, அந்நிறுவனம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்யும்.
இருப்பினும், அபராதத்தொகை குறித்து கூகுளுக்குப் பெரிய கவலை எதுவும் இல்லை.
ஆனால் சிசிஐயின் உத்தரவை அப்படியே ஏற்றுக்கொண்டால், சந்தையில் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொண்டதாகப் பொருளாகிவிடும்.
அவ்வாறு செய்வது அந்நிறுவனத்துக்கு மிகவும் ஆபத்தாக முடியும், ஏனென்றால் எந்த ஒரு நாட்டிலும் இதை ஏற்றுக்கொள்வது, உலகின் பிற பகுதிகளில் நடக்கும் இதுபோன்ற வழக்குகளில் அதன் நிலையை பலவீனப்படுத்தும்.
எனவே, அனைத்துச் சட்ட வழிகளையும் முயற்சித்து, அனைத்து மட்டங்களிலும் நீதிமன்றப் போராட்டத்தில் தோல்வியுற்ற பின்னரே அந்நிறுவனம் வழிக்கு வரும்.
ஆனால் மறுபுறம், அபராதம் விதிக்கப் பயன்படுத்தப்படும் ஃபார்முலாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. அபராதமே பெரும் தண்டனையாகும் அளவு இதன் விதிகளைத் திருத்த வேண்டும் என்றும் அந்தக் கோரிக்கை கூறுகிறது.
அதிகமான அபராதம் என்ற கோரிக்கை
தற்போது, அவர்களின் இந்திய வணிகத்தின் வருமானத்தில் ஒரு பகுதி மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படுகிறது.இதன் காரணமாக, இந்தியாவில் விதிக்கப்படும் அபராதம் அதன் உலக வருமானத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கிறது.
ஆனால், இந்தியா தற்போது இத்தகைய நிறுவனங்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறியிருப்பதாகவும், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மிக அதிகமாக இருப்பதாகவும் சட்டத்துறையினர் கூறுகின்றனர்.
அதனால்தான், இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க, அவர்களின் இந்திய வருமானம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலக வருவாயையும் அளவிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
அப்போதுதான் அவர்களுக்குச் சட்டத்தின் மீது பயம் ஏற்படும். அபராதத் தொகையை தீர்மானிக்க ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்தும் அளவுகோல் இதுதான்.
இந்த விவகாரம் தொடர்ந்தால், கூகுளுக்கு மட்டுமல்ல, பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் சிக்கல்கள் அதிகரிக்கலாம்.
ஆனால் இந்தப் பயத்தின் காரணமாக அவர்கள் தங்கள் வணிக நடைமுறைகளை மேம்படுத்தினால், அது இந்தியா மற்றும் உலகின் பிற நுகர்வோருக்கு சிறந்த நற்செய்தியாக இருக்கும்.