முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருந்த ஆறு பேரையும் விடுவிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1991ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டவர்கள், இதற்காக ஒரு நீண்ட சட்டப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதன் முழு விவரம் பின்வருமாறு.
மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைக்கு அடுத்தபடியாக இந்தியாவை உலுக்கிய சம்பவம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைதான்.
1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் நடந்த இந்தப் படுகொலை, இந்திய அரசியலின் போக்கையே முற்றிலும் மாற்றி எழுதியது.
மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நிலையில், மே 23ஆம் தேதி வழக்கு சி.பி.ஐக்கு ஒப்படைக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் துவங்கின.
ஜூன் 11ஆம் தேதி நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் முதலில் நடந்த கைது இதுதான். ஜூன் 14ஆம் தேதி நளினி, முருகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
ஜூன் 18 ராபர்ட் பயசும் 19ஆம் தேதி பேரறிவாளனும் 22ஆம் தேதி சாந்தனும் 26ஆம் தேதி ஜெயக்குமாரும் கைதுசெய்யப்பட்டனர்.
ஜூலை 2ஆம் தேதி ஊடக வட்டாரங்களில் மிக பிரபலமாக இருந்த புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம் கைதுசெய்யப்பட்டார். இதற்கடுத்து வரிசையாக கைது நடவடிக்கைகள் இருந்தன. இந்த கைது நடவடிக்கைகளின் போது பலர் உயிரிழந்தனர்.
41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர்
சரியாக ஒரு ஆண்டு கழித்து 1992ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி 55 பக்கத்திற்கு குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 3 பேர் தலைமறைவாக இருந்தவர்கள். தற்கொலை செய்துகொண்டவர்கள் 12 பேர். சிறையில் இருந்தவர்கள் 26 பேர்.
இந்த வழக்கை சென்னையில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஆறு ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு, 1998 ஜனவரி 28ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் சட்டப் போராட்டம் அப்போதிலிருந்து துவங்கியது. 26 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
1998 செப்டம்பர் முதல் 1999 ஜனவரி வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா முகமது கத்ரி ஆகியோர் விசாரித்தனர்.
மே 5ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், தங்களது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் அக்டோபர் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களிலேயே, நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.
அப்போது தமிழ்நாடு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, அக்டோபர் 29ஆம் தேதி இந்தக் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.
பொதுவாக, ஆளுநருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்படும்போது, அவை அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசின் முடிவே ஆளுநரின் முடிவாக அறிவிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் பாத்திமா பீவியே தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, முதல் முறையாக சாதகமான தீர்ப்பு கிடைத்தது இந்தத் தருணத்தில்தான்.
நால்வரின் மனுக்களையும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவையே ஆளுநர் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறி, ஆளுநரின் முந்தைய உத்தரவை ரத்து செய்து, நவம்பர் 25ஆம் தேதி உத்தரவிட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சி
இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க 2000வது ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் கூடிய அமைச்சரவை, நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. இதற்கான அரசாணை ஏப்ரல் 24ல் வெளியானது.
இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.
இந்தக் கருணை மனுக்களின் அந்தத் தருணத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர், 2007ஆம் ஆண்டுவரை எவ்வித முடிவையும் எடுக்காமல் நிலுவையில் வைத்தனர்.
இதற்கிடையில், 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் பத்தாண்டுகளாக சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நிலையில், அவர்கள் விடுவிக்கப்படாததை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால், இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் 2008 செப்டம்பர் 24ஆம் தேதி தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்திலும் இந்த மனு தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்கு அடுத்த படியாக, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பதவியேற்றார். அவர், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்காக அவற்றை மத்திய அரசிடம் அனுப்பினார்.
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி இந்த கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்ததாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. சென்னை கோயம்பேட்டில் அங்கயற்கண்ணி, வடிவாம்பிகா, சுஜாதா ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினர். இதற்கிடையில், காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடி, மூவரையும் தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்தார்.
இதற்கிடையில், தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட இடைக்காலத் தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் பல ஆண்டு காலம் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தது. சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சி
இதற்கு அடுத்த நாளே ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா. தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.
ஆனால், மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி, ஏழு பேரின் விடுதலைக்கு தடை ஆணை பெற்றது.
மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்த வழக்குகளில், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது மத்திய அரசு. அதே ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் 161வது பிரிவின் கீழ், கைதிகளை விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்த காலகட்டத்திலேயே ஏழு பேரையும் விடுவிக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது தமிழ்நாடு அரசு.
ஆனால், அந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மூன்று பேர் அமர்வில் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இந்த வழக்கில் ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.
அதன்படி, ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவுக்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக தமிழ்நாடு அமைச்சரவை கூடி ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவை அறிவிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, அமைச்சரவையின் பரிந்துரையை கண்டிப்பாக ஆளுநர் ஏற்றுக்கொண்டாக வேண்டுமெனவும் ஆளுநர் என்பவர் மாநில அரசைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்றும் அரசு எடுக்கும் முடிவுகளை அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த விவகாரத்தைக் கிடப்பில்போட்டார்.
தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு செய்தி வெளிவந்தது.
அதாவது, இந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி, கருத்தைக் கேட்டிருப்பதாக அந்தச் செய்திகள் கூறின.
ஆனால், ஆளுநர் மாளிகை உடனடியாக இந்தத் தகவலை மறுத்தது. 7 கைதிகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஏதும் அளிக்கப்படவில்லையென்று கூறியது.
இந்த வழக்கு மிகச் சிக்கலானது என்பதால் சட்டரீதியான, அரசியல்சாஸன ரீதியான, நிர்வாக ரீதியான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்றும் இது தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, அரசியல் சாஸனத்திற்குட்பட்டு நியாயமான முறையில் முடிவெடுக்கப்படும் என்றும் தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்தது.
முதல்வர் ஸ்டாலின் எடுத்த முயற்சி
ஆனால், அதற்குப் பிறகு ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
ஆனால், ஆளுநர் எந்த பதிலும் அளிக்காத நிலையில், சில தகவல்களைக் கேட்டு பேரறிவாளன் தடா நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதற்கு நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அதில் இடையீட்டு மனுவாக தனது விடுதலையையும் அவர் கோரினார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மே 18ஆம் தேதியன்று பேரறிவாளனை விடுவித்துத் தீர்ப்பளித்தது. இதையடுத்து பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரோடு சேர்த்துத் தண்டிக்கப்பட்ட ஆறு பேரும் விடுவிக்கப்படுவார்களா எனக் கேள்வி எழுந்தது.
இருந்தபோதும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், நளினியும் ரவிச்சந்திரனும் தங்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
தங்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்வதால், சிறையிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென நளினி தரப்பு வாதிட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்திற்கு 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவில்லை என்பதால் தாங்கள் அவர்களை விடுவிக்க முடியாது என கடந்த ஜூன் 17ஆம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்குப் பிறகே, நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த மனு கடந்த செப்டம்பா் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகையில், 2018ல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்தப் பரிந்துரை அனுப்பப்பட்ட நிலையில், அதன் மீது கடந்த 21 மாதங்களாக முடிவு எடுக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், சாந்தன் ஆகியோரும் தங்களையும் இந்த வழக்கில் சேர்க்கக்கோரி இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதில், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவெடுத்ததைப்போல, தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கில்தான் பி.ஆர். கவாய், பி.வி. நாகரத்னா அமர்வு, பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆறு பேருக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது.