தேர்வில் காப்பி அடித்ததாக ஆசிரியை திட்டியதால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: ஆசிரியை திட்டியதால்… பெங்களூரு பானசவாடி பில்லா ரெட்டி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஷா.
இவரது மகள் அம்ரிதா (வயது 16). இவர் பானசவாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.
கடந்த வாரம் பள்ளியில் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் அம்ரிதா காப்பி அடிப்பதற்காக பிட் கொண்டு வந்ததாக தெரிகிறது.
இதனை ஆசிரியை ஒருவர் பார்த்துள்ளார். பின்னர் வகுப்பில் வைத்து அம்ரிதாவை அழைத்து சக மாணவ-மாணவிகள் முன்னிலையில் கடுமையாக திட்டியதாக தெரிகிறது.
இதனால் அவள் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் தேர்வுக்கு பிட் கொண்டு வந்ததை ஆசிரியை வீட்டில் கூறி விடுவாறோ எனவும் அவள் பயத்தில் இருந்துள்ளார்.
இதனால் அம்ரிதா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். தற்கொலை அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்ரிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டுக்குள் அம்ரிதா தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராமமூர்த்திநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அம்ரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மாணவி அம்ரிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. போராட்டம் அந்த கடிதத்தில், ‘பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சாலினி என்பவர், தேர்வில் காப்பி அடித்ததை சுட்டி காட்டி அடிக்கடி கடுமையாக திட்டி வந்தார்.
அம்மா என்னை மன்னித்து விடுங்கள். தேர்வில் காப்பி அடித்து விட்டேன். அது எனக்கு அவமானமாக உள்ளது. என்னால் பள்ளிக்கு இனி செல்ல முடியாது.
அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மகளின் சாவுக்கு, ஆசிரியை தான் காரணம் என கூறி அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவியின் உடலுடன் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவர்களின் பெற்றோரும் வந்து போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளி முதல்வர், சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், மாணவி தேர்வில் காப்பி அடித்ததற்கு ஆதாரம் உள்ளதாகவும், மாணவிக்கு ஆசிரியை அறிவுரை தான் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
ஆனாலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவி உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஆசிரியை திட்டியதாக மோகின் என்ற ஒருவன் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருந்தான்.
அந்த சுவடு மறைவதற்குள் தற்போது மாணவி ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.