அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
நாசாவின் ஸ்பேஸ் லான்ச் வெஹிகில் (NASA SLS) ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னெடி விண்வெளி மையத்தில் இந்த சோதனை இன்று நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் தலா ஒரு முறை என ஏற்கெனவே இரண்டு முறை திட்டமிடப்பட்டு இந்த சோதனை தள்ளிவைக்கப்பட்டது.
இன்றைய சோதனை ஏவலில் மனிதர்கள் இல்லை என்றாலும், 100 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் வருங்காலங்களில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்களில் பயன்படுத்தப்படும்.
ஆர்ட்டெமிஸ்-1 சந்திரன் ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். ஆர்டெமிஸ்-1, மனிதனை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியின் முதல் படி.
LIFTOFF! @NASA_SLS and @NASA_Orion launch on their first flight, the #Artemis I mission. Keep checking back for more launch images 📷➡️https://t.co/RgnwqO6B7J pic.twitter.com/33ObRQN1G4
— NASA HQ PHOTO (@nasahqphoto) November 16, 2022
இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் சிறப்பு, இது எப்படி செயல்படும் என்பது குறித்து இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ். இதை அடைய புதிய விண்கலத்தையும் அதை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல புதிய ராக்கெட்டையும் உருவாக்கியுள்ளனர்.
விண்ணுக்குச் செல்லும் ராக்கெட்டின் கட்டமைப்பு
ராக்கெட்
ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் உள்ள அடிப்படையான சாதனம் அதன் ராக்கெட். இது எஸ்.எல்.எஸ் (SLS) எனப்படும் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தும் கட்டமைப்பு (Space Launch System) ஆகும்.
இது பூமிக்கு அப்பால் ஒரு விண்கலத்தை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாடர்ன்-வி (Saturn V) ராக்கெட்டுக்கு பிறகு எஸ்.எல்.எஸ் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும்.
1960கள் மற்றும் 70களில் அப்பல்லோ நிலவுப் பயணங்களுக்கான ராக்கெட் சாட்டர்ன் வி. ஏவுதளத்தில் ஆர்டெமிஸ் I ராக்கெட் 98 மீ (320 அடி) உயரத்தில் நிற்கும். இது பிரிட்டனில் பிக் பென் கடிகார கோபுரத்தை விட இரண்டு மீட்டர் அதிக உயரம் கொண்டது.
சாட்டர்ன் ராக்கெட்டுகளைப் போல, இது பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை பூமியிலிருந்து செலுத்தத் தேவையான அழுத்தத்தை ராக்கெட் பூஸ்டர்கள் கொடுக்கின்றன.
ஒரு நொடிக்கு ஆறு டன் கன எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இரண்டு நிமிடங்களில் அவை வெளியேற்றப்பட்டு மைய நிலை ராக்கெட் பின்னர் எஸ்.எல்.எஸ் பூமியின் சுற்றுப்பாதையில் தள்ளும்.
மைய நிலை அடிப்படையில் இது ஒரு மாபெரும் எரிபொருள் கொள்கலன். இது -180 செல்சியசை விட குளிரான திரவ வாயுவால் நிரப்பப்படுகிறது.
இது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லிட்டர் (440,000 கேலன்கள்) திரவ ஹைட்ரஜனையும் 740,000 லிட்டர் (160,000 கேலன்கள்) திரவ ஆக்ஸிஜனையும் எட்டு நிமிடங்களில் எரித்துவிடும். எரிபொருள் வெளியேறியவுடன், மைய நிலை பிரிந்து, விரைவில் அடுத்த அடுக்கு இயந்திரங்கள் ஓரியான் கேப்சூலை சுற்றுப்பாதையில் செலுத்துகின்றன.
நிலவை நோக்கிய பயணம்
இப்போது ஓரியான் விண்கலம் சந்திரனுக்குச் செல்ல தயாராகி உள்ளது.
இந்த பயணத்திற்கு சில நாட்கள் எடுக்கும். மேலும் ஓரியான் 70,000 கிமீ (40,000 மைல்கள்) தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செல்ல அதன் த்ரஸ்டர்களை (thrusters) செலுத்தும் முன்பு, மேற்பரப்பில் இருந்து 100 கிமீ (60 மைல்) அருகில் வரும். அந்தப் பயணத்தைத் தொடங்க இறுதியாக ஓர் அடுக்கு உள்ளது. இன்டரிம் கிரையோஜெனிக் புரொபல்ஷன் ஸ்டேஜ் (ஐ.சி.பி.எஸ்).
ஐ.சி.பி.எஸ். பூமியைச் சுற்றி ஓரியானை விரைவுபடுத்தி, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதை விண்வெளிக்குத் தள்ளும். இந்தச் செயல்பாடு டிரான்ஸ்-லூனார் இஞ்சக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. ஓரியான் சந்திரனுக்குச் சென்றவுடன் ஐ.சி.பி.எஸ் பிரிந்துவிடும்.
ஓரியான் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: காப்ஸ்யூல் மற்றும் சர்விஸ் மாட்யூல்.
விண்வெளியில் கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு முதல் பயணம் செல்ல தயாராகும் நாசாவின் ராட்சத ராக்கெட்
மனித திசுக்களில் உருவாகும் கணினி சிப்: நியூரான் கணினி ஆக்கப்பூர்வமானதா? ஆபத்தானதா?
இரண்டும் சேர்ந்து சுமார் 8 மீட்டர் (26 அடி) நீளம் இருக்கும்.
இந்த சர்விஸ் மாட்யூல் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தை இயக்குவதற்கான வழிகாட்டும் கணினிகள் மற்றும் த்ரஸ்டர்களை இது கொண்டுள்ளது.
கேப்ஸ்யூல் என்பது மனிதர்கள் இருக்கும் இடம். எதிர்கால பயணங்களில் ஓரியான் நான்கு விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அழைத்துச் செல்லும்.
ஆனால் இப்போது முதல் கட்டமாக ஆர்ட்டெமிஸ் I-ல் சோதனை டம்மிகள் ஏற்றப்பட்டுள்ளது. அப்பல்லோவை விட இதன் உள்ளே இருக்கும் இடம் பெரியது. இது ஒரு நடுத்தர அளவிலான வேனில் இருக்கும் அளவைக் கொண்டது.
அதிகபட்சமாக 21 நாட்கள் வரை குழுவினர் கேப்ஸ்யூலில் தங்கலாம்.
இந்த முதல் ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்கள் இல்லாமல் 42 நாட்களுக்கு செயல்படும். நாசா கலத்தில் விண்வெளி வீரர்கள் இருப்பதற்கான வரம்புகளுக்கு அப்பாலும் இதை அழுத்தத்திற்கு உள்ளாக்கி ஓரியானை சோதனை செய்ய நாசா விரும்புகிறது.
எல்லாம் சீராக நடந்தால், ஆர்டெமிஸ- II இதேபோலத் தொடரும். ஆனால் அப்போது ஒரு விண்வெளி வீரர்கள் குழுவினருடன் செல்லும்.
அடுத்த ஆர்ட்டெமிஸ் பயணத்தில் சுற்றுப்பாதையில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மனிதர்கள் இதுவரை செல்லாத தூரத்தில் இருப்பார்கள்.
ஓரியான் விண்கலத்தின் நோக்கம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்வதுதான். ஆனால் அது அங்கு தரையிறங்க வடிவமைக்கப்படவில்லை.
எதிர்காலப் பயணங்களில், விண்வெளி வீரர்கள் கலத்தின் சுற்றுப்பாதையில் உள்ள லேண்டிங் க்ராஃப்டுக்கு மாற்றப்பட்டு மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.
நாசாவுக்காக இந்தத் தரையிறங்கும் அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ் மூலம் கட்டமைக்கப்படுகிறது. கேட்வே எனப்படும் சந்திரனைச் சுற்றி வரும் முதல் விண்வெளி நிலையத்திற்கான திட்டங்களும் உள்ளன.
எதிர்காலத்தில், ஓரியான் கேட்வே உடன் இணைக்கப்பட்டு விண்வெளி வீரர்கள் லேண்டிங் க்ராஃப்டுக்கு மாற்றப்படுவார்கள். சந்திரனின் மேற்பரப்பில் அவர்களின் பணி முடிந்த பின், அவர்கள் மீண்டும் விண்வெளி நிலையத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் ஓரியன் மூலம் பூமிக்கு வருவார்கள்.
பூமிக்குத் திரும்புவதற்கு, ஓரியான் சந்திரனைச் சுற்றி வேகத்தை அதிகரித்து, பூமியை நோக்கிப் பாயும்.
பூமியை நெருங்கும் போது, கேப்ஸ்யூல், சர்விஸ் மாட்யூலில் இருந்து பிரிகிறது. கேப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஒலியை விட 32 மடங்கு வேகத்தில் பயணிக்கும். வளிமண்டலம் கேப்ஸ்யூலின் வேகத்தைக் குறைக்கும்.
ஆனால் ஹீட்ஷீல்ட் தோராயமாக 2,700C (5,000F) வெப்பநிலையில் இருந்து குழுவினரைப் பாதுகாக்க வேண்டும். இரண்டு மில்லியன் கிலோமீட்டர்கள் (1.3 மில்லியன் மைல்கள்) பயணித்த பிறகு, கேப்ஸ்யூல் இறுதியாக பசிபிக் பெருங்கடலில் விழும்.
அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன், நாசா ஓரியான் கேப்சூலை மீட்டெடுத்து, தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியை வரும் மாதங்களில் மேற்கொள்ளும்.
2024 ஆம் ஆண்டில் நான்கு புதிய விண்வெளி வீரர்களுடன் SLS ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் ஆர்ட்டெமிஸ் II திட்டத்திற்காக கேப்ஸ்யூலின் பாகங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும்.
பின்னர் 2025ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் III நாசாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மனிதர்களை சந்திரனின் மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லும் பணியை நிறைவு செய்யும்.