தமிழ்நாட்டின் மானாமதுரை அருகே இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு அவரது உடலை மட்டும் வீசி விட்டு தலையை எடுத்துச் சென்ற சந்தேக நபர் அதை கிணற்றில் வீசியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சந்தேக நபர் இன்னும் பிடிபடவில்லை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு (27). கடந்த புதன்கிழமை இரவு ராமு வீட்டில் இருந்த போது, அலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது நண்பர் பிரபாகரன் அருகில் உள்ள இம்மனந்தல் கண்மாய்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரபாவை பார்க்க பைக்கில் ராமு புறப்பட்ட போது ராமுவின் அண்ணன் சரத் இரவு நேரத்தில் கண்மாய்க்கு செல்ல வேண்டாம் என தடுத்ததாகவும் அதையும் மீறி ராமு பிரபாகரனை பார்க்க சென்றதாகவும் கூறப்படுகிறது. கண்மாய்க்கு சென்ற ராமு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது அண்ணன் சரத் கண்மாய்க்கு சென்று தம்பியை தேடினார்.
அப்போது கண்மாய் கரையில், ராமு ஓட்டி வந்த பைக் ரத்தக்கறையுடன் இருப்பதை பார்த்துள்ளார்.
ராமு இல்லாமல் பைக் மட்டும் நின்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரத் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உறவினர்கள் காணாமல் போன ராமுவை கண்மாய் முழுவதும் தேடினார்.
அப்போது அங்கு தலை இன்றி உடல் மட்டும் கிடந்துள்ளது.
அந்த உடலை பார்த்ததும் அவரது குடும்பத்தினர் அது ராமுவின் உடல் தான் என்பதை உறுதி செய்தனர்.
ராமுவை கொலை செய்தவர்கள், மிக கொடூரமான முறையில் அவரை கொலை செய்து தலை இல்லாமல் உடலை மட்டும் கண்மாய்க்குள் வீசி விட்டுச் சென்றது தெரிய வந்தது.
வெகு நேரம் தேடியும் ராமுவின் தலை கிடைக்காததால் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
2 கி.மீ தூரத்துக்கு அப்பால் தலை மீட்பு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ராமுவின் தலையில்லாத உடலை மீட்டு உடல்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
இதேவேளை ராமுவின் தலையையும், சந்தேக நபரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியிலும் செங்கோட்டை பகுதியிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
காணாமல் போன ராமுவின் தலையை கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீயணைப்பு துறையினர், காவல் துறை மற்றும் தனிப்படை போலீசார் பல மணி நேரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் உடல் கிடந்த கண்மாயில் இருந்த 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளமிட்டான் கிராமத்தில் காட்டுக் கிணற்றில் தலை இருப்பதாக தெரிய வந்தது.
அதை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மானாமதுரை போலீசார் மீட்டனர். அது ராமுவுடைய தலை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக இரண்டு சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
போலீஸ் நடவடிக்கை என்ன?
இது குறித்து பேசிய மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், “மானாமதுரை செங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராமு கொலை வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பிரபாகரன், நயினார்கோவில் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என இருவர் கைது செய்துள்ளோம். மானாமதுரையை சேர்ந்த நாகர் என்பவரை தேடி வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
“பிரபாகரன், பாலமுருகன், நாகர் கொலை செய்யப்பட்ட ராமு நால்வரும் நண்பர்கள். இதில் பிரபாகரன் ராமநாதபுரம், மானாமதுரை பகுதியில் விலை உயர்ந்த பைக்குகளை திருடி விற்பனை செய்து வந்துள்ளார்.
பிரபாகரன் பைக் திருடி விற்பனை செய்வது ராமுக்கு தெரிந்ததால் ராமு போலீசில் சொல்லி விடுவர் என்று பிரபாகரன் பயந்துள்ளார்.
மேலும் ராமுவின் உறவினர் பெண்ணை பிரபாகரன் காதலித்து வந்த நிலையில் பைக் திருடும் பிரபாகரனை காதலிக்கக் கூடாது என அந்த பெண்ணிடம் சொல்லி ராமு காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது,” என்கிறார் துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன்.
எனினும் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு சந்தேக நபர் பிடிபட்டாலே என்ன நடந்தது என்ற முழு விவரமும் தெரிய வரும் என்று புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.