ilakkiyainfo

ஓரணி சாத்தியப்படுமா ?

“ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கப் போவது இன்னும் இரண்டு வருடங்களை விடக் குறைவு தான். அதற்குள் அவர், தீர்வு ஒன்றை எட்டத் தவறினால், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும். அதற்குப் பின்னர், விக்ரமாதித்தன் கதை போல மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும்”

வரவு-செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு முடிந்த பின்னர், தேசியப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காண்பது குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப் போவதாக கூறியிருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அதற்கான நாள் இன்னமும் குறிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் இரா.சம்பந்தனின் இல்லத்தில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தவிர ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய சந்திப்பில், மூன்று முக்கியமான நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டு- சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்துப் பேச்சு நடத்த, தயார் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன், கூடிய சமஷ்டித் தீர்வை தமிழ்க்கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த முனைகின்ற நிலையில், இந்தப் பேச்சுக்களை தமிழர் தரப்பு எவ்வாறு ஒன்றுபட்டு முன்னெடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஏனென்றால், இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பங்கேற்கவுமில்லை, அவருக்கு அழைப்பு விடுக்கப்படவுமில்லை.

சமஷ்டித் தீர்வை வலியுறுத்தினாலும், சமஷ்டித் தீர்வு குறித்து ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேச்சு நடத்துகின்ற விருப்பும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட அவருடன் பேச்சு நடத்திப் பயனில்லை என்று அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

“பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாது என்றும், தமிழ் தேசத்தை அங்கீகரிக்க கூடிய சமஷ்டி ஆட்சியை நிறுவுவதன் மூலம் தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தீர்வினை சிங்கள மக்களுக்கு வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதனை உறுதிப்படுத்தாமல் பேச்சுவார்த்தையில் தமிழ் கட்சிகள் அமர்வது ஏற்புடையதல்ல” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச வேண்டும் என்பதில் எல்லாத் தமிழ்க்கட்சிகளும் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தினாலும், அதனை ஒரு முன்நிபந்தனையாக வைத்துப் பேச்சு நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனென்றால் இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ்க் கட்சிகள் நடத்திய கூட்டத்துக்குப் பின்னர், நிபந்தனைகள் பற்றிய தகவல்கள் வெளியான போது, முதலில் நிபந்தனையின்றிப் பேச முன்வர வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

நிபந்தனைகளுடன் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கதயாராக இல்லை என்பதை அது வெளிப்படுத்தியது.

சமஷ்டி என்ற விடயம் மாத்திரமன்றி – பேச்சுக்களை குறித்த காலவரம்புக்குள் நடத்தி முடிப்பது உள்ளிட்ட விடயங்களிலும் முற்கூட்டிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது, தமிழ்க்கட்சிகள் தரப்பில் உள்ள மற்றொரு முக்கியமான நிபந்தனையாக உள்ளது.

ஏனென்றால் தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தும், சிங்கள அரசியல் தலைமைகளால் இழுத்தடிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதே வரலாறு.

அதைவிட ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கப் போவது இன்னும் இரண்டு வருடங்களை விடக் குறைவு தான்.

அதற்குள் அவர், தீர்வு ஒன்றை எட்டத் தவறினால், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும். அதற்குப் பின்னர், விக்ரமாதித்தன் கதை போல மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.

எனவே தான், தீர்வு ஒன்றை குறுகிய காலத்துக்குள் எட்ட வேண்டும் என்பதில் தமிழ்த் தரப்புகள் உறுதியாக இருக்கின்றன.

அதேவேளை, கஜேந்திரகுமார் தரப்பு பேச்சுக்களில் ஆர்வத்தை காட்டுவதாகத் தெரியவில்லை.

ரணில் விக்கிரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் என்பதால் மாத்திரம் அவர்கள், இதிலிருந்து விலகி நிற்க முயற்சிக்கவில்லை.

கஜேந்திரகுமார் தரப்பு சமஷ்டியை முன்னிறுத்தியே பேச வேண்டும் என்று கூறினாலும், இன்னொரு பக்கத்தில் பேச்சுக்களை நடத்த முற்படும் ஏனைய கட்சிகளை ஒற்றையாட்சிக்கு இணங்கிப் பேச செல்லும் கட்சிகள் என்று அடையாளப்படுத்த ஆரம்பித்திருப்பதை காண முடிகிறது.

எல்லா தமிழ்த் தரப்புகளும் இப்போது சமஷ்டி என்ற நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தும் போது, தங்களை வித்தியாசமானவர்களாக – தூய சமஷ்டிவாதிகளாக காட்ட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அதைவிட, எல்லாத் தமிழ்க் கட்சிகளும் அரசுடன் பேச்சு நடத்தச் சென்றால், – அந்தக் கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை சுலபமாக தங்களின் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்று தமிழ்க் காங்கிரஸ் திட்டம் போடுவதாகவும் தெரிகிறது.

அதேவேளை சமஷ்டி அடிப்படையில் பேசுவதற்குத் தமிழ்க் கட்சிகள் தயார்படுத்த தொடங்கியுள்ள நிலையில், திடீரென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்து மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு விவகாரத்தைப் பின்நோக்கி இழுத்துச் சென்று விட்டார்.

அவர் இதனைக் கூடிய போது, உடனடியாகவே பாராளுமன்றத்தில், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்கத் தாம் தயார் என்று ஜனாதிபதியும் அறிவித்து விட்டுப் போய் விட்டார்.

இதனால் மாகாண சபைகளை ஒழித்து விட்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறது என்ற எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது.

அரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவே, தட்டிக் கழித்த மாவட்ட சபைகளை மீண்டும் தொட்டுப் பார்க்க கூட தமிழ் மக்கள் தயாரில்லை என்று கூறியிருக்கிறார்.

செல்வம் அடைக்கலநாதனும், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளையா அரசாங்கம் தீர்வாக முன்வைக்கிறது என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த விவகாரம் சர்ச்சையானதும், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் உருவாக்குவது பற்றியோ, மாகாண சபைகளை ஒழிப்பது பற்றியோ ஜனாதிபதி குறிப்பிடவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனாலும் இந்தக் குழப்பம் தமிழ்க்கட்சிகளிடம் தீரவில்லை.

மாவட்ட அபிவிருத்திச் சபைகள், 1980களின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை. அதனை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர்.

மாவட்ட அபிவிருத்திச் சபைகள், மூலம் தீர்வை வழங்குவது குறித்து, ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இல்லாத போது தன்னுடன் கலந்துரையாடினார் என கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க முன்நிபந்தனைகளின்றி பேசத் தயார் என்று கூறினாலும், பேச்சுக்களைத் தொடங்க முன்னரே, சமஷ்டி பற்றிப் பேச வேண்டும் என தமிழர் தரப்பு விரும்புவது போலவே, ரணில் விக்கிரமசிங்கவும் மாவட்ட சபைகளை ஒரு முன்நிபந்தனையாக விதிக்க முற்படுகிறாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிருவதை விட மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிரம் போது, எதிர்ப்பு அதிகம் இருக்காது என்று ரணில் தரப்பு கருதுவதாக தெரிகிறது.

வடக்கு, கிழக்குக்கு அதிகாரம் வழங்குவதற்கு தெற்கில் எதிர்ப்பும் கிளம்பும். அதிலிருந்து தப்பிக்கவே, மாவட்ட சபைகளை உருவாக்கும் முயற்சி நடக்கிறது.

சமஷ்டி, ஒற்றையாட்சி, மாகாண சபைகள், மாவட்ட சபைகள் என, பேச்சுக்களுக்கு முன்னரே, விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் தொடங்கி விட்டன.

இவ்வாறான நிலையில், பேச்சுக்களை முன்னெடுத்து தீர்வு ஒன்றை எட்டுவது, ஒன்றும் அவ்வளவு இலகுவான விடயம் அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலம் சர்வதேச ஆதரவைப் பெற்று பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறார்.

அவர் அந்த இலக்கை அடைவதற்கு பேச்சுக்களைப் பயன்படுத்த முனைவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக, கஜேந்திரகுமார் தரப்பை போல, பேச்சுக்களுக்கான வாய்ப்புகளை தட்டிக்கழிக்க முடியாத நிலையில், ஏனைய தமிழ்க்கட்சிகள் இருக்கின்றன.

சமுத்திரம் ஆழமானது, ஆபத்தானது என்றாலும், அதற்குப் பயந்து அதனைக் கடக்காமல் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அடுத்த கரையை அடைய முடியாது.

அரசாங்கத்துடனான பேச்சுக்களின் கடந்த கால அனுபவங்கள் கசப்பானவையாக- ஏமாற்றம் தருபவையாக, பாடங்களைக் கற்றுத் தந்தவையாகவே இருந்தாலும், இனப்பிரச்சினைத் தீர்வு என்பது அரசாங்கத்துடன் பேசித் தான் அடைய வேண்டியது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான கட்டத்தில், ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களைத் தொடங்கினாலும், அதனை தமிழ்த் தரப்புகள் ஒன்றுபட்டு, எதிர்கொள்ளும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.

Exit mobile version