உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரான்ஸ், போலந்துஅணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பிரெஞ்சு வீரர் ஜூல் குண்டே அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அகற்றுமாறு 41 ஆவது நிமிடத்தில் மத்தியஸ்தரினால் உத்தரவிடப்பட்டது.
கத்தாரின் அல் துமாமா அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின்போது, 41 நிமிடங்கள் வரை மேற்படி தங்கச் சங்கிலியை ஜூல் குண்டே அணிந்திருந்தார்.
விதிகளின்படி, காயங்களை ஏற்படுத்தக்கூடிய, கடிகாரம், சங்கிலி, மோதிரம், காதணிகள் முதலான ஆபரணங்களை போட்டியாளர்கள் அணிய முடியாது.
இத்தகைய ஆபரணங்களை போட்டியாளர்கள் அணியவில்லை என்பதை போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் மத்தியஸ்தர் சோதனையிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
ஆனால், ஜூல் குண்டேவின் தங்கச் சங்கலி மத்தியஸ்தரினால் அவதானிக்கப்படாமல் இருந்தது.
41 ஆவது நிமிடத்தில் பந்தை த்ரோ இன் செய்வதற்காக எல்லைக்கோட்டருகே ஜூல் குண்டே வந்தபோது, அவரின் கழுத்தில் சங்கிலி இருப்பதை உதவி மத்தியஸ்தர் ஒருவர் அவதானித்து, அதை கழற்றுமாறு உத்தரவிட்டார். அதன்பின் பிரெஞ்சு உதவியாளர் ஒருவரினால் அந்த தங்கச் சங்கிலி அகற்றப்பட்டது.
போட்டிக்கு முன்னர் கழுத்திலிருந்த சங்கிலியை அகற்றுவதற்கு தான் மறந்துவிட்டதாக ஜூல் குண்டே பின்னர் கூறினார் என செய்தி வெளியாகியுள்ளது.
மேற்படி போட்டியில் போலந்து அணியை பிரான்ஸ் 3:1 கோல்கள் விகிதத்தில் வென்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.