– இந்திய புலனாய்வு தகவலுக்கமைய கட்டுநாயக்கவில் 4 பேர் கைது
– ஆபரணங்களாகவும், துகள்களாகவும் சூட்சுமமாக கடத்தல்
– சுங்க வரலாற்றில் எதிர்கொண்ட மிகப்பெரும் கடத்தல்
சட்டவிரோதமாக ரூ. 40 கோடி பெறுமதியான 22kg தங்கத்துடன் வந்த 4 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 பேர் துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சுங்கத் திணைக்கள வரலாற்றில் மிகப் பெரிய தங்கக் கடத்தலை சுங்க அதிகாரிகள் இவ்வாறு தடுத்து நிறுத்தியுள்தாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (08) இந்திய வருவாய் புலனாய்வு பணியகத்தினால் (Directorate of Revenue Intelligence) நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு வழங்கிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த நான்கு இலங்கையர்களை சுங்கச்சாவடியில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இவர்களில் நால்வரில் மூவர் இன்று (09) காலை துபாயிலிருந்து சென்னை வழியாக ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 126 எனும் விமானம் மூலம் இலங்கை வந்துள்ளனர்.
இச்சோதனையின் போது, அவர்களது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க ஆபரணங்கள் மற்றும் அரைந்த நிலையில் தூளாக மாற்றப்பட்ட தங்கம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
இதில் தங்க நகைகளை அடையாளம் காண முடியாத வகையில் சூட்சுமமாக வர்ணம் பூசப்பட்டிருந்துள்ளதோடு, தங்க தூளை மறைக்கும் வகையில் கெப்சியூல் வகையில் அவை தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்க துகள்களை சூட்சுமமாக 30 ஆடைகளில் வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த எடை சுமார் 22 கிலோ கிராம் என்பதோடு, அதன் பெறுமதி சுமார் ரூ. 400 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க வரலாற்றில் மிகப்பெரிய சோதனையில் ஒன்றாக இதனைன மேற்கொள்ள உதவிய, இந்திய வருவாய் புலனாய்வு பணியகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு, கடத்தலை தடுக்க அண்டை நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.