உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை ஒன்று தயாராகி வருகிறது.
உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
சென்னை: தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த நிலையில் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் மூலம் திரைப்படங்களை திரையிட்டும் வருகிறார்.
சினிமா துறையில் மிகவும் பிசியாக இருக்கும் அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இதனால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
கட்சிப் பணியை உதயநிதி திறம்பட செய்து வந்ததால் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தேர்தலில் அவர் அமோகமாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதால் அப்போதே அமைச்சர் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரை தொகுதியை பார்க்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் தினமும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு சென்று மக்கள் குறை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வந்தார்.
சட்டசபை கூட்டத்தொடர்களிலும் தவறாமல் பங்கேற்று மக்கள் பிரச்சினைகளை பேசினார்.
அப்போதில் இருந்து ஒவ்வொரு அமைச்சர்களும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.
விரைவில் அவர் அமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதால் அவரது பிறந்தநாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் பல மணி நேரம் காத்திருந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர்.
டிசம்பர் மாதத்திற்குள் உதயநிதி அமைச்சராகி விடுவார் என்று பரபரப்பாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதுபற்றி அவரிடமே நிருபர்கள் கேட்டதற்கு நான் அமைச்சராவதை முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி (நாளை மறுநாள்) அமைச்சராக பதவி ஏற்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வருகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை ஒன்றும் தயாராகி வருகிறது.
உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மெய்யநாதன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
உதயநிதி அமைச்சராக பதவி ஏற்க உள்ளதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் இப்போதே நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.