சில வருடங்களுக்கும் முன்பு பெரிய கோயில் குடமுழுக்குவிழா நடைபெற்றது. அபோது கோயில் முழுவதும் புனரமைப்புப் பணிகள் செய்யபட்டன. நந்தியும் புனரமைப்புப் பணி செய்யப்பட்ட நிலையில், அதில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது தஞ்சாவூர் பெரிய கோயில்.
உலக மக்களைக் கவர்ந்திருக்கும் பெரிய கோயிலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் பெரிய நந்தி இருந்துவருகிறது.
கோயிலுக்கு வருபவர்கள் நந்தியைத் தவறாமல் தரிசித்து செல்வார்கள். இந்த நிலையில் நந்தி சிலை மீது இரண்டு அடி நீளத்துக்கு ஏற்பட்டிருக்கும் விரிசல் பெரிய கோயில் ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் புகழ்பெற்று திகழ்ந்துவருகிறது.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் விண்ணோக்கி உயர்ந்திருக்கும் விமான கோபுரத்துடன் அழகுறக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறது. உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் யுனெஸ்கோவால் அங்கீரிக்கப்பட்டிருக்கிறது.
உலகம் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினமும் ஆயிரகணக்கான சுற்றுலாப்பயணிகள் பெரிய கோயிலுக்கு வருகின்றனர்.
எந்தவிதமான தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட அதன் கட்டுமானத்தை வியந்து பாராட்டிவருகின்றனர்.
பார்க்கப் பார்க்கச் சலிப்பை ஏற்படுத்தாத அற்புதம் தஞ்சாவூர் பெரிய கோயில் என வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கோயிலுக்கு வரும்போது சிலாகித்துச் சொல்வதுண்டு.
தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சாவூருக்கு, பெரிய கோயில் அடையாளம் என்றால், கோயிலுக்கு, பெருவுடையார் சன்னிதிக்கு எதிரே நந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் மகா நந்தி முக்கிய அடையாளம். ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் மாலை நேரத்தில் நந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியை தரிசிப்பது வழக்கம்.
இந்த நிலையில், பெரிய கோயில் நந்தியின் பின்பகுதியில் இரண்டு அடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கும் முன்பு பெரிய கோயில் குடமுழுக்குவிழா நடைபெற்றது. அபோது கோயில் முழுவதும் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டன.
நந்தியும் புனரமைப்புப் பணி செய்யப்பட்ட நிலையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கோயிலைச் சரிவர கவனிக்கத் தவறியதே நந்தி விரிசல் அடைந்திருப்பதற்குக் காரணம் என பெரிய கோயில் மீது ஆர்வம்கொண்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நந்தி மேல் ஏற்பட்டுள்ள விரிசல்
இது குறித்துச் சிலரிடம் பேசினோம். “ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட பெரிய கோயில் தமிழர்களின் திறமைக்கும், கட்டடக்கலைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்துவருகிறது.
ஆயிரம் ஆண்டைக் கடந்த நிலையிலும் அதன் மீதிருக்கும் பிரமிப்பும், கோயில் அழகும் கொஞ்சமும் குறையவில்லை. பிரமிப்பூட்டும் கட்டுமானத்தால் உலக மக்களையே வசீகரித்துவருகிறது.
நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பெரிய கோயிலில் ஒரே கல்லில் உருவான நந்தி அமைக்கப்பட்டது.
சுமார் 12 அடி உயரம்கொண்ட பிரமாண்ட நந்தி, தஞ்சாவூர் பெரிய கோயில் மீதான பிரமாண்டத்தை மக்களிடையே அதிகப்படுத்தியது.
நந்தியின் மேல் பின்பகுதியில் இரண்டு அடிக்கு மேல் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பெரிய கோயில் வழிபாட்டு முறை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், கோயில் கட்டங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலும் இருந்துவருகின்றன.
இந்த நிலையில் நந்தியின் மேல் ஏற்பட்டிருக்கும் வெடிப்பு பலரையும் கவலைகொள்ள வைத்திருக்கிறது.
கோயில் நிர்வாகத் தரப்பில் அந்த வெடிப்பு நீண்டநாள்களாக இருப்பதாகக் கூறுகின்றனர். அதை உடனே சரிசெய்து பெரிய கோயிலையும், நந்தியையும் பாதுகாக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து தொல்லியல்துறை தரப்பில் சில அதிகாரிகளிடம் பேசினோம். “பெரிய கோயிலில் அடிக்கடி புனரமைப்புப் பணிகள் செய்யப்படுகின்றன.
பிரதோஷ நாள்களில் நந்தி மீது அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது நந்தி மீது பால், மஞ்சள் உள்ளிட்டவை ஊற்றப்படுகின்றன.
நந்தியைப் பாதுகாக்க அதன் மேல் பூசப்பட்டிருக்கும் முலாம், அபிஷேகத்தால் பெயர்ந்திருக்கிறது.
நந்தி மேல் விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவது தவறு. உடனடியாக புனரமைப்பு பணி செய்து அதைச் சரிசெய்து நந்தி பாதுகாக்கப்படும்’’ என்றனர்.
அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதாவிடம் பேசினோம். “நந்தி மீதுள்ள விரிசல் ஏற்கெனவே இருந்தது. தற்போது ஏற்பட்டது இல்லை. விரைவில் அது சரிசெய்யப்படும்” என்றார்.