“இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை”

“சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின், இலங்கையில் எந்த தரப்பையும் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறது இந்தியா”

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த புதன்கிழமை ராஜ்ய சபாவில் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

அவரது அந்த உரை, இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது, இந்தியாவினதும், இந்திய மக்களினதும் நலன்களுக்கானதாகவே இருக்கும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.

“இந்திய வெளிவிவகாரக் கொள்கை, அனைத்து இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சவாலான சூழ்நிலையில், இந்திய மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளிவிவகாரக் கொள்கை.

அந்த பொறுப்பை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.” என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

அவரது இந்தக் கருத்து இந்தியாவையும், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையையும் வெளியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதானதாகவே இருக்கும் என்பது பல பேரின் நம்பிக்கை.

தமிழர்களை கைவிட்டு விடாது, தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் என்று இன்றைக்கும் பலர் உறுதியாக நம்புகின்றனர்.

ஆனால், இந்தியா அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதா என்ற கேள்வியை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கிறது.

இலங்கை, சீனா, பலஸ்தீனம் போன்ற நாடுகள் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

“தமிழ், சிங்கள மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் இந்தியா ஆதரவை வழங்கி உள்ளது.

கடுமையான பொருளாதார சூழ்நிலையில் சிக்கியுள்ள அண்டை நாட்டிற்கு ஆதரவு வழங்குவதில் நாம் வகுப்புவாத அணுகுமுறையை எடுக்கவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது, இலங்கையில் உள்ள இனங்களை வேறுபடுத்தி இந்திய வெளிவிவகாரக் கொள்கை, அணுகவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதேவேளை, ஐ.நா.விலும் பிற சந்தர்ப்பங்களிலும், இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது.

தமிழர்களுக்கு சமத்துவமான, நீதியான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய தீர்வு பற்றி இந்தியா அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்திருக்கிறது.

இதனை தமிழர் தரப்புக்கு மாத்திரமே இந்திய ஆதரவு உள்ளது என்ற தோற்றப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியிருக்கிறது.

அதனைக் கொண்டு தான், இந்தியா எங்களின் பக்கம் இருக்கிறது என்றும், இந்தியா தீர்வைப் பெற்றுத் தரும் என்றும், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், இன்றைக்கும் நம்பியிருக்கின்றனர்.

இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை.

ஜெனிவாவில், அதனை நாம் பல ஆண்டுகளாகப் பார்த்து வந்திருக்கிறோம்.

இலங்கை தொடர்பான தீர்மானங்கள் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான், இந்தியா அதற்கு ஆதரவு அளித்தது.

அதுவும், அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அதன் தமிழக கூட்டாளியான தி.மு.க. கொடுத்த அழுத்தங்களால் நிகழ்ந்த ஒன்று.

மற்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை. வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கும் இராஜதந்திரத்தையே கையாண்டு வந்திருக்கிறது.

உக் ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ரஷ்யாவை எதிர்க்காமல் எவ்வாறு நடுநிலை வகிக்கிறதோ -அவ்வாறு தான் இலங்கை விவகாரத்திலும், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் சமநிலை உறவைப் பேண முனைகிறது இந்தியா.

1987இற்கு முன்னர் இந்த நிலைப்பாட்டில் இந்தியா இருந்ததெனக் கூற முடியாது. அப்போது, தமிழர்களுக்கு சார்பானது போன்ற தோற்றப்பாட்டை இந்திய வெளிவிவகாரக் கொள்கை வெளிப்படுத்தியது.

ஆனால் இப்போது, அனைத்து மக்களுக்குமான இலங்கையையே ஆதரிப்பதாக கூறுகிறது இந்தியா.

இந்தியாவின் இந்த வெளிவிவகாரக் கொள்கை, இந்திய மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டது என்பதே, இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு எவ்வாறு இந்திய மக்களின் நலன்களை உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறதா?

இந்திய மக்களின் பாதுகாப்பையும், செழிப்பையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கையில் இந்தியா அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

இலங்கையில் சீனா தனது செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் – இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இந்திய அரசாங்கத்துக்கு உள்ளது.

முன்னர் இலங்கை தொடர்பான தீர்மானங்கள், கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, இந்தியாவுக்கு இந்தச் சிக்கல் இருக்கவில்லை.

சீனாவின் ஆதிக்கம் அப்போது இலங்கையிலோ, இந்தியப் பெருங்கடலிலோ, இந்தியாவுக்கு அச்சுறுத்தலானதாக இருக்கவில்லை.

அப்போது இந்தியா போட்டியாக கருதியது அமெரிக்காவைத் தான்.

அமெரிக்காவிடம் இருந்து இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்களை பாதுகாப்பது மட்டும் தான், இந்தியாவின் பிரதான திட்டமாக இருந்தது.

1987இல் இந்திய – இலங்கை உடன்பாட்டின் மூலம் அந்த அச்சத்தை இந்தியா போக்கிக் கொண்டது. அதையடுத்து, விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி, அழிப்பதற்கு இந்தியா முக்கிய கவனம் செலுத்தியது.

அதனைச் செய்து முடித்ததன் மூலம், இந்தியா தனக்கான அச்சுறுத்தல்களை நீக்கி விட்டதாக கருதிய போதும், அதற்குப் பின்னர் தான் இந்தியாவுக்கே உண்மையான அச்சுறுத்தல் உருவாகியது.

விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தான், இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் விரிவடைந்தது.

அந்த வகையில் பார்த்தால், சிறிய அச்சுறுத்தலை நீக்கிக் கொண்டு, இந்தியா பெரிய அச்சுறுத்தலை விலைக்கு வாங்கிக் கொண்டது என்றும் குறிப்பிடலாம்.

இப்போது சீன ஆதிக்கத்தை மையப்படுத்தியே இலங்கை தொடர்பாக இந்தியா முடிவுகளை எடுக்கிறது.

தனது வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்தி வருகிறது. இதனை இந்திய மக்களின் நலன்களுக்கானதாக வலியுறுத்துகிறது.

சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின், இலங்கையில் எந்த தரப்பையும் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறது இந்தியா.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் பக்கமே இந்தியா நிற்கும் என்பதோ, தமிழர்களுக்காக மட்டும் இந்தியா செயற்படும் என்பதோ, வீண் நம்பிக்கை.

தமிழர்களுக்கும் நோகாமல், சிங்களவர்களையும் பகைக்காமல் தான் இந்தியா நடந்து கொள்ளும். அதனையே ஜெய்சங்கரின் இந்த விளக்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆனாலும், தமிழர்களுக்குச் சார்பாக இந்தியாவை முற்றிலுமாக வளைப்பதற்கு சாத்தியமே இல்லை என்று கூற முடியாது. அதற்கான சிறிய வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்தக் கட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ள ஒரு வாசகம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.

“இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளிவிவகாரக் கொள்கை. அந்த பொறுப்பை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய மக்களின் நலன்களுக்காக, அதனை உறுதி செய்வதற்காக, அந்தப் பொறுப்பை நிறைவேற்றவதற்காக எதையும் செய்வோம் என்று அவர் கூறியிருப்பது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இந்தியாவின் நலன்களுக்கு பாதகமான நிலை ஏற்படுகின்ற போது, இந்தியா எந்த முடிவுகளையும் எடுக்கத் தயங்காது என்பதே அதன் உட்பொருள்.

இந்தியா தனது வழக்கமான கொள்கைகள், நிலைப்பாடுகளில் இருந்து விலகியும் முடிவுகளை எடுக்கும் என்பதையே அவர் கூற முனைந்திருக்கிறார்.

விதிவிலக்கான அந்தச் சந்தர்ப்பங்களை அவர் விபரிக்காவிட்டாலும், இந்தியாவுக்கு பாதகமான நிலை ஒன்றை தவிர்க்கும் சந்தர்ப்பமாகவே அது இருக்கும்.

அத்தகையதொரு நிலை எப்போதாவது தான் ஏற்படும். அத்தகையதொரு நிலை வாய்த்தால் அது தமிழர்களுக்கு சாதகமானதாக அமையலாம்.

அவ்வாறான நிலையிலன்றி, இந்தியா தமிழர்களின் பக்கத்தில் மட்டும் நிற்கின்ற கொள்கையை கடைப்பிடிக்காது என்பதே, ஜெய்சங்கரின் உரையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

Share.
Leave A Reply