“தமது தாயகப் பகுதிகளில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையிலான- மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வே, தமிழர்களின் எதிர்பார்ப்பு”

“ரணில் அரசாங்கம் தமிழர் தரப்பை பேச்சுக்கு அழைத்திருப்பதற்கு முக்கிய காரணம் சர்வதேச உதவியைப் பெற்றுக் கொள்வதற்குத் தான் என்பதில் சந்தேகம் இல்லை”

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

அதிகாரப் பகிர்வு மூலம் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாரா என்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்ட போது, மஹிந்த ராஜபக்ஷவும் அதற்குத் தலையாட்டியிருந்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன மட்டும், எந்தப் பதிலையும் கூறாமல், சிரித்துச் சமாளித்துக் கொண்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும், அவரோ அவரது கட்சியோ, அரசியலில் பெரிய தாக்கத்தைச் செலுத்தக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

ஆனால், அவர்கள் தாக்கம் செலுத்தக் கூடிய சக்திகளை தங்களின் வழிக்கு அல்லது பக்கத்துக்கு இழுத்துச் செல்லக் கூடியவர்கள்.

ஜே.வி.பி., தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்தவர்கள்.

2004இல் சந்திரிகா குமாரதுங்கவுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அவரை தனியான வழிக்கு கொண்டு சென்றனர்.

2015இல் மஹிந்த ராஜபக்ஷவையும் அவ்வாறான வழிக்கு கொண்டு சென்றனர்.

அதாவது, தங்களின் அரசியல் நிலைத்தன்மையை பேணிக் கொள்வதற்காக, சக்திவாய்ந்த தலைவர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.

இப்போது ஜே.வி.பி. தனி வழியில் இருக்கிறது. உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் வேறொரு திசையில் இருக்கின்றனர்.தினேஷ் குணவர்த்தன அரசாங்கத்துடன் இருக்கிறார்.

ஜே.வி.பி. மாற்றுச் சிந்தனை கொண்ட கட்சியாக இருந்தாலும், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு, எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வந்திருக்கிறது.

அதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்த்தன போன்ற தரப்பினர், எப்போதும் இனவாதப் போக்குடனும், அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வுக்கு எதிரான நிலைப்பாட்டுடனும் தான் இருந்து வந்திருக்கின்றனர்.

ஆனால், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தொடங்கப்படும் போது, அதிகாரப் பகிர்வு என்பது முக்கியமானதொரு விவகாரம்.

தமது தாயகப் பகுதிகளில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையிலான- மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வே, தமிழர்களின் எதிர்பார்ப்பு.

அது அவர்களின் அபிலாசைகளில் முக்கியமானது – முதன்மையானதாக இருக்கிறது.

அதிகாரப் பகிர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அரசாங்கத்துடன் நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தமிழ்க்கட்சிகள் தெரிவித்திருக்கின்றன.

அதாவது சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்நிபந்தனையாக கொண்டு பேச்சுக்குத் தயாராக இருப்பதாக தமிழ்க் கட்சிகள் கூறியுள்ளன.

இதையடுத்து, பேச்சுக்கு நிபந்தனைகள் விதிப்பதா என்று ஒரு தரப்பு கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூட, நிபந்தனையின்றிப் பேச வாருங்கள் என்று கூறியிருந்தார்.

நிபந்தனையற்ற பேச்சு என்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதா- இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழ்த் தரப்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, நிபந்தனைகளின்றி பேச வேண்டும் என்ற விவாதம், தெற்கின் அரசியல் தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில், கலாநிதி ஜெகான் பெரேரா, தமிழர் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால், தெற்கிலுள்ள தரப்புகள் குழப்பமடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் தரப்பு சமஷ்டியை முன்னிறுத்தும் போதும், சிங்களத் தரப்பு ஒற்றையாட்சியை முன்னிறுத்தும் போதும், எப்போதும் குழப்பங்கள் உருவாகின்றன என்பது அவரது கருத்து.

ஆனால், ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் மூலம் இலங்கை 75 ஆண்டுகளில் எதனைச் சாதித்திருக்கிறது?

இனக்கலவரங்கள், வன்முறைகள், போர், பொருளாதார வீழ்ச்சி, என தொடர்ச்சியாக அமைதியற்ற-  குழப்பங்களும், நெருக்கடிகளும் மிக்க நிலையைத் தான் ஒற்றையாட்சி உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

இதற்குப் பின்னரும், ஒற்றையாட்சியில் தொங்கிக் கொண்டிருப்பதற்கு சிங்களக் கட்சிகள் ஏன் விரும்புகின்றன என்பது தான் தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் கேள்வி.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன், எங்களின் பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுங்கள், அதனை நாங்களே அபிவிருத்தி செய்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் எத்தகைய நம்பிக்கையில் அதனைக் குறிப்பிட்டாரோ தெரியவில்லை, ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பை கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை.

சமஷ்டி முறையிலான , மீளப்பெற முடியாத அதிகாரங்களுடன் தீர்வு ஒன்று வழங்கப்படுமானால், அது அபிவிருத்திக்கான போட்டிச் சூழலையும் ஏற்படுத்தும்.

அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, பிரிந்து போவதற்கான சூழலை உருவாக்கும் என்பதே சிங்கள அரசியல் தலைமைகளின் நீண்டகாலக் கருத்து. அச்சம் என்றும் குறிப்பிடலாம்.

அத்தகைய அச்சத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கு இருந்தாலும், அதனைக் காரணம் காட்டி சமஷ்டிக் கோரிக்கையை அதனை முன்னிறுத்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவது அபத்தமானது.

இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்பட வேண்டியது என்பதை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொள்கின்ற போதும், அதனை எவ்வாறு தீர்ப்பது என்பதில் தான் முரண்படுகின்றனர்.

அதிகாரப் பகிர்வு இல்லாமல்- குறிப்பாக மீளப்பெற முடியாத சமஷ்டி அமைப்பு முறைமையை தவிர்த்த ஒரு தீர்வுக்கு, இணங்க முடியாத நிலையில் தமிழர் தரப்பு இருக்கிறது.

அதனை ஒரு முன்நிபந்தனையாக நிறுத்துவதை தெற்கிலுள்ள தரப்புகள் எதிர்ப்பது அல்லது அதனைக் குறித்து சந்தேகம் கொள்வது என்பது அநாவசியமானது.

ஏனென்றால், சமஷ்டி முறையை தமிழர்கள் முன்னிறுத்த முன்னர், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவே அதனை முன்மொழிந்திருந்தார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் கூட, உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி தீர்வொன்றை முன்வைத்துப் பேசுவதற்கு இணங்கியது.

விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்திய காலகட்டத்தில் கூட, அதற்கு குறைவான உள்ளக சமஷ்டி குறித்துப் பேச இணங்கியது முக்கியமானதொரு விடயமாக கருப்பட்டது.

ஆனால் இப்போது உள்ளக சமஷ்டி அடிப்படையில் பேசுவதற்கு நிபந்தனை முன்வைக்கும் போது, அதனை சந்தேகத்துடன் நிராகரிக்கின்ற போக்கு சிங்களத் தரப்பில் காணப்படுவது அபத்தமானது.

தமிழர் தரப்பு டட்லி சேனநாயக்க தொடக்கம், ரணில் விக்கிரமசிங்க வரை- (கோட்டாபய ராஜபக்சஷ தவிர)-  ஆட்சியில் இருந்த அத்தனை அரசாங்கங்களுடனும் பேச்சு நடத்தியிருக்கிறது.

ஆனாலும் தீர்வு எதுவும் கிட்டாத நிலை இன்று வரை தொடர்கிறது. இவ்வாறான நிலையில், பேச்சுக்களான உட்பொருளையும், அதற்கான காலஎல்லையொன்றையும் முன்வைத்துப் பேச வேண்டிய கட்டாயத்தில் தமிழர் தரப்பு இருக்கிறது.

குறுகிய காலத்தில் காத்திரமான தீர்வு ஒன்றை அடைவதற்கு இந்த முன்நிபந்தனைகள் உதவும்.

ரணில் விக்கிரமசிங்க பேச அழைத்தவுடன் தமிழர் தரப்பு அதற்கு இணங்கியது. அவருக்கு தீர்வை நடைமுறைப்படுத்தும், பலம் உள்ளதா இல்லையா என்றெல்லாம் சந்தேகம் எழுப்பவில்லை.

அவரது ஆளுமையை கேள்விக்குட்படுத்தவில்லை. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற பலமோ, சிங்கள மக்களின் செல்வாக்குப் பலமோ இல்லை.

இவ்வாறான நிலையில் பேச்சுக்களை நடத்துவதாக காலத்தை வீணடித்து, அதன் ஊடாக ஆதாயங்கள் அடைவதற்கு தமிழர் தரப்பினால் அனுமதிக்க முடியாது.

ரணில் அரசாங்கம் தமிழர் தரப்பை பேச்சுக்கு அழைத்திருப்பதற்கு முக்கிய காரணம் சர்வதேச உதவியைப் பெற்றுக் கொள்வதற்குத் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

சர்வதேச உதவிகளை பெற்றுக் கொள்வது தவறில்லை. ஆனால் அதற்காக தமிழர் பிரச்சினைத் தீர்வை அவர் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க முடியாது.

பேச்சுவார்த்தை என்று காலத்தை வீணடிக்கும் விடயங்களில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.

அதனால் தான் சமஷ்டி நிபந்தனையை தமிழர் தரப்பு முன்வைத்திருக்கிறது.

அதனை ஏற்கமுடியாத நிபந்தனையாக  அடையாளப்படுத்துவது அல்லது நிராகரிப்பது, தீர்வுக்கான பேச்சுக்களை நடத்துவதற்கான அழைப்பா என்று சந்தேகம் கொள்வதற்குத் தான் வழிவகுக்கும்.

(சத்ரியன்)
Share.
Leave A Reply