யுக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி, ஒரு காருண்ய சேவையல்ல எனவம் பூகோள பாதுகாப்புக்கும் ஜனநாயகத்துக்குமான நிதி எனவும் யுக்ரைனிய ஜனாதிபதி லொலோடிமிர் ஸெலேன்ஸ்கி கூறியுள்ளார்.
ஆமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
யுக்ரைனிய ஜனாதிபதி லொலோடிமிர் ஸெலேன்ஸ்கி புதன்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டார். கடந்த பெப்ரவரி மாதம் யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஜனாதிபதி ஸெலேன்ஸ்கி சந்தித்து கலந்துரையாடினார்.
யுக்ரைனுக்கு 1.8 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி பைடன் உறுதியளித்தார். யுக்ரைனுக்கு முதல் தடவையாக, பேட்ரியொட் ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறைகளை வழங்குவதும் இவற்றில் அடங்கும்.
சமாதானத்துக்கு தாம் ஆதரவளிப்பதாக பைடன், ஸெலேன்ஸ்கி இருவரும் கூறினர். ஆனால், ரஷ்யாவுடன் பிராந்திய விட்டுக்கொடுப்புக்கான எந்த அழுத்தங்களுக்கும் தான் உடன்படப் போவதில்லை ஸெலேன்ஸி கூறினார்.
அமெரிக்கப் பாராளுமன்றத்திலும் யுக்ரைன் ஜனாதிபதி ஸெலேன்ஸ் உரையாற்றினார். அவரை சபாநாயகர் நான்ஸி பெலோஸி வரவேற்றார். அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரீஸும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
யுக்ரைன் ஒருபோதும் சரணடையாது என பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி ஸெலேன்ஸ்கி கூறினார்.
உங்கள் பணம், காருண்ய சேவையல்ல. அது பூகோள பாதுகாப்புக்கும் ஜனநாயகத்துக்குமான முதலீடு எனவும் அவர் கூறினார்.
யுக்ரைனிய படையினர் கையெழுத்திட்ட யுக்ரைன் தேசிய கொடியொன்றை சபாநாயகர் நான்ஸி பெலோஸியிடம் ஜனாதிபதி ஸெலேன்ஸ்கி வழங்கினார்.
யுக்ரைனுக்கு வழங்கும் உதவிகளுக்காக ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.