திருமண வரவேற்பின் போது மணமகன் 3 முறை மயங்கி விழுந்ததால் ஆத்திரத்தில் மணமகள் எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த யுவதி யொருவருக்கு கடந்த 13 ஆம் திகதி திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி இரவு மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது குறித்த நிகழ்வில் மணமகன், மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டிருந்ததாகவும், மணமகளைப்பார்ந்து 3 முறை மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிலையில், தான் அவமானப்பட்டதாக உணர்ந்த மணப்பெண், தனது பெற்றோரை அழைத்து மணமகனின் தள்ளாட்டம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெண் வீட்டார் வரவேற்பு நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர். மாப்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பு உருவாகும் சூழ் நிலை உருவானதால் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மணமகன் சுர்ஜித்” நான் செய்தது தவறு என்னை மன்னித்து விடுங்கள்” எனக் கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
எனினும் திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே ரகளையில் ஈடுபடும் இந்த இளைஞருடன் எங்கள் வீட்டுப் பெண்ணை கட்டிக் கொடுக்க முடியாது என்று பெண் வீட்டார் திட்டவட்டமாக மறுத்ததோடு, திருமணத்திற்கான மொத்த செலவையும் அவர் தான் ஏற்க வேண்டும் ” எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாப்பிள்ளைக்கு அணிவித்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்க கை கடிகாரம் உள்ளிட்டவைகளையும் பெண்வீட்டார் திரும்பப் பெற்றுள்ளதுடன் குறித்த திருமணத்தையே நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.