ஏ.டி.எம் கொள்ளையர்கள் இருவரை ஹரியானாவில் துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்திருக்கிறது தமிழ்நாடு போலீஸ்.

இதையடுத்து, விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அந்தக் கொள்ளையர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் இன்று அடைக்கப்படுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், நான்கு ஏ.டி.எம் இயந்திரங்களை ‘காஸ் வெல்டிங்’ மூலம் உடைத்து ரூ.72,79,000 பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான முகமது ஆரிஃப், 37 வயதான ஆஜாத் இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப் பகுதியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானாவுக்கு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஹரியானாவிலுள்ள தங்களது சொந்தக் கிராமங்களுக்கு தப்பித்துச் செல்லும்போது, தமிழக தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் இருவரையும் சுற்றி வளைத்து மண்டியிடச் செய்திருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பணம், வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இருவரையும் கஸ்டடிக்குள் கொண்டு வந்த தனிப்படை போலீஸார், டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு நள்ளிரவு அழைத்து வந்தனர்.

அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து, இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, திருவண்ணாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதையடுத்து, இரண்டு கொள்ளையர்களும் வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுகிறார்கள்.

இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சில கொள்ளையர்களை பிடிக்கவும் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் தமிழக தனிப்படை போலீஸார் முகாமிட்டிருக்கிறார்கள்.

தற்போது வரை 10-க்கும் மேற்பட்டோர், தமிழக தனிப்படை போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள்.

விரைவில், அவர்களும் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்படவிருக்கிறார்கள்.

Share.
Leave A Reply