சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கிவிட்டது.

இத்தீர்ப்பால் பாஜக மேலிடத்தை முழுமையாக நம்பி போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வம் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் நிராதரவாக நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளிவிடப்பட்டிருப்பது பரிதாபத்துக்குரியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஜெயலலிதா மறைவின் போதே அதிமுகவின் விவகாரங்களில் பாஜக தலையிடத் தொடங்கியது. தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை பாஜக ரசிக்கவில்லை. அத்துடன் சசிகலா முதல்வராக முயற்சிதத்தை டெல்லியால் ஜீரணிக்கவும் முடியவில்லை.

இதன்விளைவாக பாஜக மூளைக்காரர்கள் உதவியுடன் தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓபிஎஸ். அப்போதே ஓபிஎஸ்- முற்று முழுதாக தமது எதிர்காலத்தை பாஜக வசம் ஒப்படைத்துவிட்டார்.

அந்த கால கட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருந்த அதிமுக தொண்டர்கள் ஆதரவு, மக்களிடம் இருந்த அனுதாபம் ஆகியவையும் ஓபிஎஸ் மீது ஒருவித கரிசனத்தை தொடர்ந்து பாஜக காட்டுவதற்கு அடிப்படையான காரணமாகவும் இருந்தது.

ஆனாலும் அதிமுக தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே இருப்பது என்பது தமிழ்நாட்டில் வேர்பிடித்து நிற்க துடிக்கும் தங்களுக்கு சாதகமானது அல்ல.

ஆகையால் இருதரப்பும் இணைந்து செயல்பட்டாக வேண்டும் என்கிற நிலையை பாஜக மேலிடம் எடுக்கிறது.

இதன்விளைவாக சசிகலாவை ஓரம்கட்டிவிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்த கரங்களாகினர்.

இந்த இணைந்த கரங்களை கோர்த்து வைத்தவர் ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசகர் ராவ் என்பதும் கவனிக்கத்தக்கது.

இபிஎஸ் முதல்வராக, ஓபிஎஸ் துணை முதல்வராக என ஆட்சிக் காலம் முழுவதும் பாஜகவின் நிழல் அரசாங்கமாகவே அதிமுக அரசு தமிழ்நாட்டில் செயல்பட்டது.

தமிழ்நாட்டின் உரிமைகளை அப்படியே கொத்து கொத்தாக தாரைவார்க்கிறது அதிமுக அரசு என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் பாஜக மீதான விசுவாசத்தால் அப்போதைய அதிமுக அரசும் அதிமுக இரட்டை தலைமையும் கண்டுகொள்ளவில்லை.

அதிமுக அரசு முடிந்த கையோடு அதிமுகவில் கலகமும் வெடித்தது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வரை இந்த பஞ்சாயத்து இடைவிடாமல் நீடித்தது.

அப்போதும் கூட இருதரப்பும் பாஜகவையே நம்பிக் கொண்டிருந்தது. பாஜகவும் கட்டபஞ்சாயத்து செய்து கொண்டிருந்தது. 2021 சட்டசபை தேர்தலின் போது இந்த இருதரப்பு விவகாரம் பெரிதாக வெடிக்காமல் அனுசரணையாக பார்த்துக் கொண்டு தேர்தலை அறுவடை செய்தது பாஜக.

சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவில் பிளவும் வெடித்தது. அதிமுகவில் பிளவு பகிரங்கமானது முதலே பாஜகவை முற்று முழுதாக நம்பியே இருந்தார் ஓபிஎஸ்.

ஆனால் அவரது நம்பிக்கை அவருக்கு கை கொடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது ஈரோடு கிழக்கு தொகுதியை முன்வைத்து இபிஎஸ் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்ததில் இருந்தே ஓபிஎஸ்-ன் இறுதி அரசியல் அத்தியாயம் தொடங்கிவிட்டது.

அப்போது இருந்தே டெல்லி காற்று இபிஎஸ் பக்கமே வீசத் தொடங்கியது. இப்போது உச்சகட்டமாக, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் என ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

பாஜகவை, டெல்லியை மலைபோல நம்பி நின்ற ஓபிஎஸ், இப்போது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி அரசியல் வாழ்க்கையே சூனியம் என்ற நிலையில் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டப்பட்டிருக்கிறார் என்பதே யதார்த்தம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

 

Share.
Leave A Reply