பல தொழிற்சங்கங்களால், புதன்கிழமை (15) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கு அராங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை (14) இரவு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாமையால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

வரிகளைக் குறைத்தல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரிகளை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்போது, பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படும் என்றும், அதற்கான பதிலுடன் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தற்போதைய மற்றும் இன்று (14) புதன்கிழமையன்று முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தையும் கைவிடத் தயாராக இல்லை என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதேவேளை, ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

துறைமுகங்கள், பெற்றோலியம், கல்வி மற்றும் மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்களும் இன்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

Share.
Leave A Reply