யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் சனிக்கிழமை (29) இரவு பயணிகள் பேருந்தினை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பூதர்மடம் பகுதியை சேர்ந்த தவசீலன் வினோயன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை கோப்பாய் பூதர்மட சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.