திருட்டுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் வீட்டின் கூரை மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கீழே விழுந்து கால் முறிந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கியதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அமுகொட்டுகந்த, பிலான பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய சந்தேக நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற கறுவாப்பட்டை திருட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பொலிஸார் வீட்டுக்குச் சென்றபோது சந்தேக நபர் குளியலறையில் இருந்து கூரையின் மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அவ்வாறு தப்பிச் சென்றபோது கூரையிலிருந்து தரையில் வீழ்ந்துள்ளார். இதனால், கால் முறிந்த நிலையில் காணப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காலி பதில் நீதிவான் இன்று (17) மாலை கராப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரை பரிசோதனை செய்துவிட்டு, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply