இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, கனேடிய உயர்ஸ்தானிகர், வௌிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கனேடிய பிரதமரின் இந்த குற்றச்சாட்டினை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்த கருத்து அடிப்படையற்றது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் உள்ளக அரசியல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கருத்து வௌியிடப்பட்டுள்ளதாகவும், அரசியல் நோக்கத்திற்காகவே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்துள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வரும் தருணத்தில், கனேடிய பிரதமரின் இந்த அறிக்கை இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமெனவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.