ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மூன்று ரெயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதுவரை 261 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒரே இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இருந்தாலும் எதிர்க்கட்சிகள், அரசியல் கட்சிகள் தற்போது இதுகுறித்து விமர்சனம் செய்யவில்லை.

மீட்பு பணி நிறைவடைந்து ரெயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரிக்கும் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது தொடக்க கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் லைன் மாறி சென்றதுதான் இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என தகவல் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே நான்கு ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அதில் ஒன்று லூப் லைன். லூப் லைன் ரெயில் நிலையம் அருகே மற்ற ரெயில்களுக்கு வழி விடவும், ரெயில்கள் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்படும்.

அந்த லூப் லைன் சுமார் 750 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். அந்த லூப் லைனில்தான் சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்துள்ளது.

மெயின் லைனில் வரக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் திடீரென லூப் லைன் வழியாக சென்றுள்ளது. கோரமண்டல் ரெயில் 128 கி.மீட்டர் வேகத்தில் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மேல் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் தடம் புரண்ட பெட்டிகள் மற்றொரு தண்டவாளத்தில் சரிந்து விழுந்ததால் அந்த வழியாக 116 கி.மீட்டர் வேகத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து ரெயில்வே துறையில் உள்ள அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முழுமையான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாசவேலைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதுவரை அதிகாரிகள் யாரும் பேசவில்லை.

முழு விசாரணை முடிந்த பின்னர்தான் இதுகுறித்து தகவல் வெளிப்படையாக தெரியவரும். கவாச் என்ற ரெயில் மோதல் தவிர்ப்பு சிஸ்டம் அந்த வழிப்பாதையில் இல்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

 

 

Share.
Leave A Reply