அரசின் இழப்பீட்டுத் தொகைக்காக விபத்தில் இறந்தவரின் உடலைக் காண்பித்து, தன்னுடைய கணவர் பிஜய் தத்தா விபத்தில் இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார்.
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று, கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாஹாநாகா ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்மீது மோதி விபத்துக்குள்ளானபோது ரயில் பெட்டிகள் தடம் புரண்டு அருகிலிருந்த ரயில் பாதையில் விழுந்தன.
அப்போது எதிர்திசையில் வந்துகொண்டிருந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள்மீது மோதியது. இந்த விபத்தில் மொத்தமாக 275 பேர் இறந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒடிசா கோர ரயில் விபத்து
இதில் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் இழப்பீட்டுத்தொகையை அறிவித்தன.
மத்திய அரசு தரப்பிலிருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.
அந்த வகையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திலுள்ள மணிபண்டாவைச் சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்பவர், அரசின் இழப்பீட்டுத் தொகைக்காக விபத்தில் இறந்தவரின் உடலைக் காண்பித்து, தன்னுடைய கணவர் பிஜய் தத்தா விபத்தில் இறந்துவிட்டதாக நாடகமாடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, கீதாஞ்சலி தத்தாவின் கோரிக்கை பொய்யானது எனத் தெரியவந்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பிவிட்டனர். ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட அவரின் கணவர் பிஜய் தத்தா, மணியபந்த காவல் நிலையத்தில் தன் மனைவிமீது புகாரளித்தார்.
அந்தப் புகாரில், பொதுப் பணத்தை அபகரிக்க முயன்றதற்காகவும், போலியாக மரணத்தை ஜோடித்ததற்காகவும் கீதாஞ்சலி தத்தா மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிஜய் தத்தா கூறியிருந்தார்.
பின்னர் இதனால் எங்கு தாம் கைதுசெய்யப்படுவோமென்று அச்சம்கொண்ட கீதாஞ்சலி தத்தா, போலீஸிடமிருந்து தப்பிக்கத் தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்துப் பேசிய போலீஸார், அவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் குமார் ஜெனா, இறந்த உடல்கள்மீது போலியாக உரிமை கோருபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே, ஒடிசா காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.