`இரவுப் பணிக்கு வரும்போதெல்லாம், 500 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இன்ஸ்பெக்டர் சென்றுவிடுவார்’ என பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்தார்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலிருக்கும் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் விஜயலட்சுமி.
இவர் கடந்த 4-ம் தேதி இரவுப் பணிக்காக ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் ஆகியோருடன் படப்பை பகுதிக்குச் சென்றிருந்தார்.
பின்னர் அங்கு பாஷா என்பவரின் கடைக்குச் சென்ற போலீஸார் டீ, பிஸ்கட், கூல்டிரிங்ஸ், பிரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றிருக்கிறார்கள். அது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்ட நான்கு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி
இது குறித்து கடைக்காரர் பாஷா கூறுகையில், “போலீஸ் இன்ஸ்பெக்டர், சில போலீஸாருடன் என்னுடைய கடைக்கு வருவார்.
நைட் ரவுண்ட்ஸ் போலீஸார்தானே டீ, பிஸ்கட், கூல்ட்ரீங்ஸ், தண்ணீர்பாட்டில், கொசுவத்தி, பிரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளை வாங்குகிறார்கள் என ஆரம்பத்தில் கருதினேன்.
ஆனால் நைட் ரவுண்ட்ஸ் போலீஸார், சாப்பிடும் பொருள்களுக்குப் பணம் கொடுக்க மாட்டார்கள். ஒரு தடவை இன்ஸ்பெக்டர், போலீஸார் வந்தால் 500 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருள்களை எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
அதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் போலீஸாரிடம் கெஞ்சிக்கூட பார்த்தேன், `மேடம், நீங்கள் 100 ரூபாய்க்கு சாப்பிட்டுக்கொள்ளுங்கள், 500 ரூபாய்க்கு சாப்பிட்டால் எப்படி?’ எனக் கேட்டேன்.
அதற்கு அந்த மேடம் மற்றும் போலீஸார், `உன்னுடைய கடையின் லைசென்ஸை ரத்து செய்துவிடுவேன்’ என மிரட்டுவார்கள்.
அதற்கு பயந்து நான் அமைதியாக இருந்துவிடுவேன். நைட்ரவுண்ட்ஸ் மற்றும் தினமும் இப்படி போலீஸார், என்னுடைய கடையில் டீ, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் என வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்றதால் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். அதன் பிறகுதான் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்” என்றார்.