மகளின் திருமணத்தில் தாயார் புகைபிடித்தபடி நடனமாடியதால், மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

திருமணம் என்றால் ஆடல், பாடல் கொண்டாட்டம் இருக்கும். சில நேரங்களில் இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி வன்முறையில் முடிந்துவிடும்.

உத்தரப்பிரதேசத்தில் தன்னுடைய மகளின் திருமணத்தில் தாயார் சிகரெட் புகைத்துக்கொண்டு நடனமாடியது பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு ராஜ்புரா என்ற இடத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. திருமணத்தன்று மணமகன், மணமகள் திருமண மண்டபத்துக்கு வந்திருந்தனர்.

திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் தொடங்கவிருந்தன. உறவினர்கள் மண்டபத்தில் நிரம்பியிருந்தனர்.

அப்போது இரு வீட்டாரின் உறவினர்களும் திருமணத்தை உற்சாகமாகக் கொண்டாட நடனமாடினர்.

அவர்களின் நடனத்தைக் கண்ட மணமகளின் தாயார், உடனே தானும் நடனத்தில் கலந்துகொண்டார். வெறுமனே நடனம் ஆடியிருந்தால் ஒன்றும் பிரச்னையாகி இருக்காது.

ஆனால், மணமகளின் தாயார் உற்சாகமாக சிகரெட் ஒன்றை எடுத்து பற்றவைத்து புகைத்துக்கொண்டே நடனமாடினார்.

சிகரெட் புகைத்துக்கொண்டே நடனமாடுவதைப் பார்த்த மணமகன், மணமகளின் தாயாரின் செயல்பாடு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், திருமணத்துக்கான சடங்குகளை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதோடு இந்தத் திருமணமே வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால் இரு குடும்பங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

உறவினர்கள் மணமகனிடம் பேசிப் பார்த்தனர். ஆனால், தனது முடிவில் மணமகன் உறுதியாக இருந்தார்.

இதனால் திருமணம் ரத்துசெய்யப்பட்டது. உறவினர்கள் அனைவரும் சோகத்தில் கலைந்து சென்றனர்.

இதையடுத்து, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் இரு தரப்பினரிடமும் சமாதானமாகப் பேசினர்.

இதில் சமரசம் எட்டப்பட்டது. இதையடுத்து, இரு குடும்பங்களுக்கிடையே உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

 

Share.
Leave A Reply