தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார்.
தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்தவர் , தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையிடம் பாதுகாப்பாக வைக்குமாறு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தான் கொடுத்த நகைகளை தருமாறு தங்கையிடம் கோரியுள்ளார். தங்கை தாலிக்கொடியை மாத்திரமே கையளித்துள்ளனர்.
சங்கிலி தொடர்பில் கேட்ட போது , சங்கிலி தரவில்லை தாலிக்கொடி மாத்திரமே தந்தாய் என தங்கை கூறியுள்ளார்.
அதனால் அக்கா – தங்கை மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குடும்பி பிடி சண்டையாக மாறியுள்ளது. அதன் போது தங்கையின் முடியை அக்கா கத்தரித்துள்ளார்.
அதனையடுத்து , கத்தரிக்கப்பட்ட தனது தலைமுடியுடன் , பொலிஸ் நிலையம் சென்ற தங்கை , தனது அக்கா மீது முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.