சிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி
தியாகராசாவின் புத்தி
கொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது என்று தான் வட்டுக்கோட்டை பா.உ.தியாகராசா நினைத்திருந்தார்.
அதனால் தான் முன் பின் அறிமுகமில்லாத இரு இளைஞர்கள் பத்திரிகை ஒன்றின் பெயரைச் சொல்லி பேட்டி கேட்டபோது சந்திக்கச் சம்மதித்தார். ஆனாலும் முதல் அனுபவம் என்பதால் இளைஞர்கள் இருவரதும் நடவடிக்கைகளில் தியாகராசாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது.
கதவருகில் நின்ற இளைஞர் கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டதைக் கண்ட தியாகராசா உசாராகிவிட்டார்.
மரண தூதன் எதிரே நிற்கும் உணர்வில் எப்படியாவது தப்பித்தாகவேண்டுமே என்று உள் மனம் உந்த தரை நோக்கி குனிந்தார்.
அச்சமயம் கதவருகில் நின்ற இளைஞரோ தியாகராசாவின் அருகில் நின்ற தனது சகாவான இளைஞரை “ திசை இங்கே வா|| என்று அவசரமாக குரல் கொடுத்தார்.
பயிற்சியும் இல்லை. கைத்துப்பாக்கியும் உள்ளுர் தயாரிப்பு. வெடிக்கலாம். ரவையைத் துப்பாமலும் அடம்பிடிக்கலாம் தவிர, தான் சுடுவது தப்பித்தவறி சகாவுக்கும் பட்டுத் தொலைத்துவிடலாம் என்ற பயம் வேறு.
~திசை’என்று அழைக்கப்பட்ட இளைஞர் கதவை நோக்கி ஓட, கதவருகில் நின்ற இளைஞர் தியாகராசாவை குறி வைத்து விசையை அமுக்க அதே தருணத்தில் தரையை நோக்கி குனிந்த தியாகராசா அபயக்குரல் எழுப்பியபடி தரைவிரிப்பின் முனையில் பிடித்து இழுத்தார்.
தியாகராசா குனிந்ததும் தரைவிரிப்பு இழுக்கப்பட்டதால் அதன் மறுமுனையில் நின்ற இளைஞர் தனது சமநிலை தவறிய நிலையில் சுட நேர்ந்ததும் குறி தவறக் காரணமாயின.
துப்பாக்கி ரவை சுவரில் பாய்ந்தது. திட்டம் தோல்வியாகிவிட்டதை உணர்ந்து இரு இளைஞர்களும் தப்பி ஓடினார்கள்.
அவர்கள் இருவரும் தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியே வந்திருந்தனர்.
வெடிச்சத்தமும் அபயக்குரலும் சிங்களவரான வாகனச்சாரதிக்கு விபரீதத்தை தெரியப்படுத்திவிட ஓடி வந்த இளைஞர்களைக் கண்டதும் வாகனச் சாவியை வீசி எறிந்துவிட்டு சாரதி ஓடிவிட்டார்.
பின்னர் எப்படியோ இரு இளைஞர்களும் தப்பிக் கொண்டார்கள்.
ஒருவர் திசைவீரசிங்கம். மற்றவர் ஜீவன் அல்லது ஜீவராசா.
அவர்களைத் திட்டத்தோடு அனுப்பி வைத்தது தமிழ் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன். இந்த மூவரும் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.
அனுப்பி வைப்பார் வரமாட்டார்
சத்தியசீலன் பற்றி அவரோடு இருந்தவர்கள் சொல்லும் விமர்சனம் இது. “அவர் யாரைச் சுடவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைப்பார். எந்த நடவடிக்கையிலும் தான் மட்டும் பங்கு கொள்ளமாட்டார். பொலிசார் விசாரிக்கும்போது ஆதியோடு அந்தம் வரை சொல்லிவிடுவார்.
~சிறை மீண்டு செம்மல்’ என்று அழைக்கப்பட்ட சத்தியசீலன் ஜெர்மனுக்கு கொள்ளை விளக்கம் அளிக்க அழைப்பு வந்துள்ளதாகக் கூறிச் சென்றவர் தான் திரும்பி வரவே இல்லை.
கூட்டணித் தலைவர்களால் உணர்ச்சிகரமாகத் தூண்டிவிடப்பட்ட ~துரோகி ஒழிப்பு’ படலத்தில் முதலில் குறிவைக்கப்பட்ட அரசியல்வாதியான தியாகராசா தப்பிக் கொண்டார். (பின்னர் 1981 ஆம் ஆண்டு இவர் வட்டுக்கோட்டையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். புளொட் அமைப்பே கொலைக்கு காரணம் என்று நம்பப்பட்டது)
அவர் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
தியாகராசா உயிர்தப்பியபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அருளம்பலம், சி.எக்ஸ்.மார்ட்டின், குமாரசூரியர், ராஜன் செல்வநாயகம் போன்ற பா.உ.க்களும் யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பாவும் தமக்கு குறிவைக்கப்படலாம் என்று உணர்ந்தேயிருந்தனர்.
ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களால் யார் கடுமையாக வசைபாடப்படுகிறார்களோ அவர்களே உடன் ஒழிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள்.
துரையப்பாவின் இரு பக்கங்கள்
யாழ்.மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு இரு பக்கங்கள் உண்டு.
தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகள் பற்றிய கோரிக்கைகளை அவர் அலட்சியம் செய்தார்.
அதன் மூலமாக தமிழர்களுக்கு எதிரானவராக தான் சித்தரிக்கப்படுவதையிட்டு அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.
திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அப்போது பிரதமராக இருந்தார். அவரிடம் தனது சொல்லுக்கு மதிப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அவர் கவனம் செலுத்தினார்.
இது அவரது ஒரு பக்கம்.
யாழ்.நகரை அழகுபடுத்துவது, நவீனப்படுத்துவது என்பவற்றில் தனக்கு முன்னும் பின்னும் வந்த நகர முதல்வர்களை விட துரையப்பாவே ஆர்வத்தோடு செயற்பட்டார்.
யாழ்.நகரில் வள்ளுவருக்கும் ஒளவையாருக்கும் சிலைகள் நிறுவினார்.
யாழ்.நகரில் உள்ள நவீன சந்தைக் கட்டிடம் துரையப்பாவின் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
யாழ்.நகரில் நவீன விளையாட்டரங்கும் உருவாக்கப்படவும் துரையப்பாவே ஏற்பாடு செய்தார்.
கூட்டுறவுச் சங்கங்களில் துரையப்பாவின் மூலமாக நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்புப் பெற்றார்கள். இது அவரது மறுபக்கம்.
ஆனால் இவற்றையெல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கேலி செய்தனர்.
சோறா சுதந்திரமா?
“தன்மானத் தமிழனுக்கு சோற்றை விட சுதந்திரமே முக்கியம்.||
“தமிழ்ஈழம் கிடைத்த பின்னர் நவீன சந்தைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்|| என்றனர்.
“கூப்பன் கள்ளன்|| என்றும் அவர் கேலி செய்யப்பட்டார்.
இதற்கிடையே இளைஞர்களுக்கு துரையப்பா மீது கடும் சினம் ஏற்படக்கூடிய வகையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமைந்தது.
1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது.
இந்த மாநாடு மூலம் கூட்டணியினர் அரசியல் லாபம் அடைந்துவிடுவார்கள் என்று துரையப்பா நினைத்தார்.
அதனால் மாநாடு நடைபெறுவதை தடுக்கவும் அதையும் மீறி நடந்தபோது இடைய+றாகவும் இருக்க முற்பட்டார்.
. யாழ்.நகரெங்குமே விழாக் கோலம் பூண்டு எங்கும் தமிழ் முழக்கம் கேட்ட அந்த நாட்களில் ஒரு நாள் துப்பாக்கி வேட்டொலிகள்!
திரண்டிருந்த மக்கள் சிதறியோடினார்கள்.தேமதுரத் தமிழோசை கேட்க வந்த 9 தமிழர்கள் செத்துப் போனார்கள்.
வேட்டோசை எழுப்பி பொலிசார் நடத்திய அட்டூழியத்தை அன்றைய அரசு மூடி மறைக்கப் பார்த்தது.
மின்சார வயர்களை மிதித்ததும் கூட்ட நெரிசலும் சாவுக்கு காரணம் என்பது போல் விளக்கம் சொல்லப்பட்டது
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு மீதும் துரையப்பா மீதும் இளைஞர்களது கோபாவேசத்தை வளர்த்துவிட்டன.
கல்வியில் தரப்படுத்தல் கொள்கை, தமிழரசு – நமக்கொரு தனியரசு வேண்டுமென்ற சிந்தனைக்கு நீர்வார்த்தது.
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் ~ ஆயுதம் ஏந்தாமல் விமோசனம் இல்லை| என்ற சிந்தனைக்கு கொம்பு சீவிவிட்டது.
படுகொலைக்குக் காரணமான பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவுக்கும் துரையப்பாவுக்கும் குறி வைத்து சிவகுமாரன் தலைமையில் சில இளைஞர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் கைலாசநாதர் கோவில் அருகில் வைத்து பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். ஆனால் கைத்துப்பாக்கி சிவகுமாரனைக் கைவிட்டது – இயங்க மறுத்தது.உள்ளுர் தயாரிப்பு உருப்படியாக இல்லை.
பல்வேறு முறை மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளில் சந்திரசேகரா தப்பினார். அதேவேளை பொன்னாலை பாலத்தில் வைத்து துரையப்பாவைக் கொல்ல சிவகுமாரன் போட்ட திட்டமும் பலிக்கவில்லை.
பொன்.சிவகுமாரன் உரும்பிராயைச் சேர்ந்தவர்.ஆயுதம் ஏந்துவது ஒன்றே தமிழர்கள் விடுதலைக்கு ஒரே வழி என்று உறுதியாக நம்பியவர். துரோகிகள் ஒழிப்புத் தான் அவரது முதல் குறியாக இருந்தது.எனினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை.
1974 ஆம் ஆண்டு ஜுலை 5 ஆம் திகதி கோப்பாய் வங்கிக் கொள்ளை முயற்சியில் கைதானபோது விஷம் அருந்தித் தற்கொலையானார்.
தற்கொலைக் கலாச்சாரத்திற்கு கால்கோள் நாட்டியவர் சிவகுமாரன் தான்.
பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக சில காலம் தமிழ்நாட்டில் தங்கிருந்து விட்டு வருவதற்கு சிவகுமாரன் திட்டமிட்டார்.
கடல் வழியாகத் தப்பிச் செல்ல சிவகுமாரனுக்கு பணம் தேவைப்பட்டது.
ஐயாயிரம் ரூபா தந்துதவுமாறு அன்றைய கோப்பாய் பா.உ. கதிரவேற்பிள்ளையிடம் கேட்டிருந்தார்.
உதவ ஒப்புக் கொண்ட கதிரவேற்பிள்ளை கடைசியில் கைவிரித்துவிட்டார்.
அப்போது கதிரவேற்பிள்ளைக்கு ~சிந்தனைச் சிற்பி| என்ற பட்டம் இருந்தது.
சிந்தனைச் சிற்பிக்கு சிவகுமாரனைக் காக்கும் சிந்தனையே இல்லாமல் போனதால் சிவகுமாரன் குழுவினர் கோப்பாய் வங்கியில் குறிவைத்தனர்.
கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது.தப்பி ஓடிய சிவகுமாரும் ஏனையோரும் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கினார்கள்.
சிவகுமாரன் ஓடிப்போய் பதுங்கியிருந்த இடம் பற்றி பொலிசாருக்கு தகவல் சொன்னவன் பெயர் ந. நடராசா.
(உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான ந.நடராசா 02.07.1980 ஆம் ஆண்டு புலிகளால் கொல்லப்பட்டார்.)
சிவகுமாரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தபோதும் அது ஆற்றலின்மையின் வெளிப்பாடு அல்ல. முன் அனுபவமற்ற எந்தவொரு நடவடிக்கையும் அப்படித் தான் ஆரம்பமாகும்.
சிவகுமாரன் போட்ட விதை
சிவகுமாரன்
சிவகுமாரனின் மரணச் சடங்கில் கடல் அலையாக மக்கள் கண்ணீர் வெள்ளம்.~எங்கள் பொடியளாவது ஆயுதம் ஏந்துவதாவது’ என்று நினைத்தவர்கள் கூட காலம் மாறத்தொடங்கிவிட்டது என்பதை கவனத்தில் கொண்டனர்.
மரண வீட்டில் முன் வரிசையில் நின்றவர்கள் இன்று வரை தம்மை அகிம்சைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டணித் தலைவர்கள் தான். அது தவிர ஆவேசமாக அஞ்சலிக் கூட்ட உரைகளும் நிகழ்த்தினார்கள்.
~இந்திய சுதந்திர போராட்ட தியாகி பகவத்சிங் மாதிரித் தான் தம்பி சிவகுமாரனும்| என்றார் தலைவர் அமிர்.
கூட்டத்தில் சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளையும் கலந்து கொண்டு சிவகுமாரன் பற்றி புகழ மறக்கவில்லை.
கூட்டணியின் குரலாக அன்று வெளிவந்த ‘சுதந்திரன்| பத்திரிகை சிவகுமாரன் புகழ் பாடியது. உரும்பிராயில் சிவகுமாரனுக்கு சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது அந்தச் சிலையை திறந்துவைத்தவர் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் முத்துக்குமாரசாமி (தற்போதைய ரெலோ அல்ல அது )
அகிம்சையே எம் வழி என்று சொன்ன கூட்டணித் தலைவர்கள் சிவகுமாரன் பாதை தவறு என்று ஒரு நாளும் சொன்னதில்லை.
மகாத்மாகாந்தி பகவத்சிங்கைப் பற்றி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகுமாரனின் மரணம் ஆயுதப் போராட்ட எண்ணத்திற்கு நெய் வார்த்தது.
சிவகுமாரனால் குறிவைக்கப்பட்டு தப்பிய துரையப்பா 1975 ஜுலை 27 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு முன் வந்திறங்கினார்.
அங்கு துரையப்பாவின் வருகை பற்றிய தகவல் அறிந்து நான்கு இளைஞர்கள் காத்திருந்தனர்.
பிரபாகரன், கலாபதி, கிருபாகரன்,பற்குணராஜா ஆகியோரே அந்த நால்வர்.
துரையப்பா காரிலிருந்து இறங்கியதும் இளைஞர்களில் ஒருவர் முன்னால் வந்து ~வணக்கம் ஐயா| என்றார்.
(தொடரும்)
பஸ்தியாம்பிள்ளை கொலை தொடர்பாக தேடப்பட்ட தமிழ் இளைஞர்களது படங்கள் சுவரொட்டி மூலமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 1978 இல் வெளியிடப்பட்டன. துரையப்பா கொலை முதல் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை வரை தேடப்பட்ட பிரபாகரனின் சிறுவயது புகைப்படம் மட்டுமே புலனாய்வுத்துறையினரிடம் சிக்கியது.
வீட்டிலிருந்த தனது புகைப்படங்கள் அனைத்தையும் முன்கூட்டியே பிரபாகரன் எடுத்துச் சென்றுவிட்டார். தேடப்பட்ட இளைஞர்களில் மாவைசேனாதிராசா, வண்ணை ஆனந்தன், கல்லாறு நடேசானந்தன், புஸ்பராஜா, சபாலிங்கம் (கடந்த மே மாதம் 1 ஆம் திகதி பாரிசில் கொல்லப்பட்டவர்) போன்றோர் பொலிசில் சரணடைந்தனர்.
பிரபாகரன், சிறீசபாரத்தினம் போன்றோர் சரணடையவில்லை. துரையப்பா கொலையில் பிரபா நேரடியாக பங்கேற்றிருந்தார். சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்டதில் பிரபா பங்கேற்கவில்லை.
தொடரும்..