உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் அமைப்பு அசைத்துப் பார்த்தது எப்படி?
இஸ்ரேலின் அதிநவீன பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்பையும் மீறி வலுவான தாக்குதலை நடத்தியிருக்கிறது பாலஸ்தீனத்தின் `ஹமாஸ்’ அமைப்பு. `இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராமல் எங்கு கோட்டைவிட்டோம்’ என புலம்பிக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்!
கடந்த 7-ம் தேதி அதிகாலையில் இஸ்ரேல் நாட்டைக் குறிவைத்து, பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்பு சுமார் 5,000 ஏவுகணைகளை ஏவியது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிலியிருந்து பாய்ந்தவந்த பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகள், வெறும் 20 நிமிடங்களில் இஸ்ரேலின் பல்வேறு இடங்களைத் தீக்கிரையாக்கின.
வான்வழித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், தரைவழியிலும் ஏராளமான ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்திருக்கின்றனர்.
குறிப்பாக, இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவிய ஹமாஸ் போராளிக் குழுவினர், பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினருடன் போரிட்டு வருகின்றனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்களை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றிருக்கின்றனர்.
ஆப்ரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின்:
இந்த திடீர் தாக்குதலுக்கான காரணம் பற்றி பேசியிருக்கும் ஹமாஸ் ராணுவப் பிரிவின் தலைமை தளபதி முகமது டெய்ஃப், “இஸ்ரேல் ராணுவம் எங்களின் பாலஸ்தீனப் பகுதிகளை வேகமாக ஆக்கிரமித்து வருகிறது.
பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியிருக்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள், போராளிகள் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
இஸ்ரேலின் இந்தச் செயல்பாட்டை, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என முடிவெடுத்த நாங்கள், பதிலடி தாக்குதாலைத் தொடங்கியிருக்கிறோம்.
இஸ்ரேல் நாட்டின் ராணுவ நிலைகள், ராணுவப் பயிற்சி மையங்கள், ஆயுதக்கிடங்குகள், விமான தளங்களைக் குறிவைத்து சுமார் 5,000 ஏவுகணைகளையும், ஷெல் குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.
இந்த தாக்குதல் திட்டத்துக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் `ஆப்ரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்!’ ” என அதிரவைத்திருக்கிறார்.

ஹமாஸ் ராணுவப் பிரிவின் தலைமை தளபதி முகமது டெய்ஃப்
அதிர்ச்சி, ஆக்ரோஷத்தில் இஸ்ரேல்:
ஹமாஸின் இந்த தந்திர தாக்குதலை இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால், மிகப்பெரிய பாதுகாப்பு கட்டமைப்பையும் மீறி இது போன்ற ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை ஹமாஸ் அமைப்பால் எப்படி நடத்த முடிந்தது என்ற கேள்விக்கு, பதிலில்லாமல் குழம்பித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள்.
இது குறித்து பதிலளித்திருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள், “இஸ்ரேலின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாட் மற்றும் உள்நாட்டு உளவுத்துறையான ஷின் பெட் ஆகிய இரண்டு உளவு அமைப்புகளுக்கும் ஹமாஸின் தாக்குதல் திட்டம் குறித்து தெரியவில்லை.
இது எப்படி நடந்தது என்று எங்கள் யாருக்குமே தெரியவில்லை!” என கைவிரித்திருக்கின்றனர்.

Israel-Hamas – இஸ்ரேல் – பாலஸ்தீனம் | போர் பதற்றம்
அதேபோல இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், “இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என சுமார் 100 இஸ்ரேலிய மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றிருக்கின்றனர்.
இந்த எண்ணிக்கை இதுவரை கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு ஹமாஸ்தான் பொறுப்பு. அவர்களுக்கு ஏதாவது அசாம்பாவிதங்கள் நடந்தால், அதற்கான விலையை ஹமாஸ் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்!” என எச்சரித்திருக்கிறார்.
இஸ்ரேலின் உளவு-பாதுகாப்பு கட்டமைப்பு:
உலகின் வல்லரசு நாடுகளே பொறாமைப்படும் அளவுக்கு சக்திவாய்ந்தது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட். மத்திய கிழக்கு நாடுகளிலேயே உளவுத்துறைக்கென மிக அதிக அளவு நிதி ஒதுக்கக்கூடிய ஒரே நாடும் இஸ்ரேல்தான்.
தன் எல்லையைச் சுற்றியுள்ள லெபனான், சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் மட்டுமல்லாமல் தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு உள்ளேயும் தனது ரகசிய உளவாளியை ஒளித்து வைக்கும் அளவுக்கு மிகத் தந்திரமான நாடு இஸ்ரேல்.
இவ்வளவு ஏன்… தன்மீது தாக்குதல் தொடுத்த ஹமாஸ் அமைப்புக்குள்ளும் தனது உளவாளிகளை வைத்திருக்கிறது இஸ்ரேல்.
அவர்களில் உளவுத் தகவல் மற்றும் உதவிகள் மூலம் ஏராளமாக பாலஸ்தீன விடுதலைப் போராளிகளை, ஹமாஸ் தலைவர்களை கொன்றொழித்திருக்கிறது இஸ்ரேல் உளவுத்துறை. ஹமாஸ் அமைப்பினர் பயணிக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகளை ரகசியமாகப் பொருத்தி, அவர்களின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து, ட்ரோன் தாக்குதல்கள்மூலம் அவர்களின் கதையை கச்சிதமாக முடித்திருக்கிறது.

மொசாட்
உளவு அமைப்பு ஒருபுறமிருக்க நாட்டின் எல்லைப் பாதுகாப்பைப் பொறுத்தவரையில், இஸ்ரேல்;-பாலஸ்தீன எல்லைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், தரை மோஷன் சென்சார்களையும் பொருத்தி கவனித்துக்கொண்டிருக்கிறது.
தவிர, அனுதினமும் ராணுவ ரோந்துகளையும் மேற்கொண்டுவருகிறது. காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொள்ளும் என்பதை நன்கு தெரிந்த இஸ்ரேல், அயர்ன்-டிரோம் (Iron-Drome System) என்கிற பிரத்யேக தற்காப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு தன்நாட்டைக் காத்துவருகிறது.
Iron-Drome System
அதாவது, எல்லையிலிருந்து எந்த ஏவுகணை இஸ்ரேல் வான்பரப்புக்குள் நுழைந்தாலும், அதை வழியிலேயே இடைமறித்து, தாக்கி அழிக்கும் அதிசிறந்த தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் கொண்டிருக்கிறது.
இத்தகைய இஸ்ரேலின் அனைத்து தொழில்நுட்பத்தையும் தாண்டித்தான் ஹமாஸ் அமைப்பினர் நாட்டுக்குள் புகுந்திருக்கின்றனர்.

இரும்புக்கோட்டைக்குள் ஓட்டைபோட்ட ஹமாஸ்:
இஸ்ரேலுக்குள் நுழைய ஹாமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய அளவிலான தந்திர திட்டங்களையெல்லாம் மேற்கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
சொல்லப்போனால், ஹமாஸ் அமைப்பினர் சாதாரணமாக புல்டோசர் மூலம் எல்லைப்புற கம்பி வேலிகளை உடைத்துக்கொண்டும், வெறுமனவே கம்பிகளின் துளைகளை வெட்டி எடுத்துமே தரை வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவியிருக்கின்றனர்.
அதேபோல, இன்னும் சிலர் கடல் வழியாகவு ம், பாராகிளைடர் மூலம் வான் வழியாகவும் லாவகமாக நுழைந்து இஸ்ரேலின் கண்களில் மண்னைத் தூவியிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

