நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிந்துள்ளதால், பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) போன்ற சர்வதேச அமைப்புகள், ஆவணமற்ற அகதிகளை வெளியேற்ற வேண்டாம் என்று பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்த பின்பும் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான தனது எல்லையில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர்களை நவம்பர் 1 ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது.

அக்டோபர் 15 ஆம் தேதி வரை 60,000 ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளனர். அவர்களில் 78% பேர் தாங்கள் பாகிஸ்தானிலேயே தங்கியிருந்தால் கைது செய்யப்படுவோம் என அஞ்சியதாக ஐநா தெரிவித்துள்ளது.

சொந்த நாடு திரும்பச் செல்ல அஞ்சும் ஆப்கன் அகதிகள்

தாலிபன்கள் ஆட்சியை பிடித்த பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தானியர்கள் தங்கள் கனவுகளும் வாழ்வாதாரமும் நசுக்கப்பட்டுவிடும் என்று மீண்டும் ஒரு முறை அஞ்சுகின்றனர்.

பாகிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அக்டோபர் 1998க்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் டாலருக்கு எதிரான பாகிஸ்தானின் ரூபாய் அதன் மோசமான வீழ்ச்சியைக் கண்டது.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் படித்து வரும் சாடியா, தலிபான்கள் பெண்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்ததை அடுத்து, கல்விக்கான வாய்ப்பைத் தேடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றதாக கூறினார்.

அவர் கூறுகையில் “நான் இங்கே பாகிஸ்தானில் படிக்கிறேன். எனது படிப்பை இங்கே தொடர விரும்புகிறேன். நாங்கள் வெளியேற்றப்பட்டால், ஆப்கானிஸ்தானில் எனது படிப்பைத் தொடர முடியாது. என் பெற்றோர்,

என் சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுகிறார்கள். பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நாங்கள் செல்வோம்?” அவர் பிபிசி உருதுவிடம் கூறினார்.


ஆப்கன் பெண்களை தொடர்ந்து அச்சுறுத்தும் தாலிபன்

மனித உரிமை அழிவைத் தவிர்க்க, நாடு கடத்தலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் பாகிஸ்தான் அதிகாரிகளை வலியுறுத்தியது.

“நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்பவர்களில் பலர் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினால், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக நேரிடும் என்று நாங்கள் நம்புகிறோம்,

இதில் தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல், சித்திரவதை, கொடூரமான மற்றும் பிற மனிதாபிமானமற்ற நடத்தை ஆகியவை அடங்கும்,” என ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி கூறினார்.

பெண்களுக்கு வேலை மற்றும் படிக்கும் உரிமையை அளிப்போம் என்ற அவர்களின் முந்தைய வாக்குறுதிகளை தலிபான்கள் மீறிவிட்டனர். தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவது உலகின் மிகக் கடுமையான அடக்குமுறைகளில் ஒன்றாகும்.

பள்ளியில் இருந்து தடை செய்யப்படுவதைத் தவிர, பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையங்கள், குளங்கள் மற்றும் பிற பொது இடங்களிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அழகு நிலையங்கள் மூடப்பட்டுவிட்டது மேலும் பெண்கள் தலை முதல் கால் வரையிலான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இசைக்கருவிகளை எரித்த தாலிபன்கள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தலிபான்கள் இசைக் கருவிகளை எரித்தனர், இசை “ஒழுக்கத்தில் சீர்குலைவை ஏற்படுத்துகிறது” என்று அவர்கள் கூறினர்.

ஆப்கானிஸ்தான் பாடகர் சோஹைல் கூறுகையில், ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய இரவில் “சில ஆடைகளை” மட்டும் எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறினார்.

“ஆப்கானிஸ்தானில் என்னால் ஒரு இசைக்கலைஞராக வாழ முடியாது,” என்று சோஹைல் கூறினார். இசைக் கலைஞர்களால் ஆன அவரது குடும்பம் பெஷாவரில் வாழ்க்கையை நடத்த முயற்சிக்கிறது.

“நாங்கள் ஒரு கடினமான நேரத்தை எதிர்கொள்கிறோம், எங்களுக்கு வேறு வழிகள் இல்லை, ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் இசையை ஏற்கவில்லை, வாழ்வாதாரத்திற்கு எங்களுக்கு வேறு வழிகள் இல்லை,” என்று அவர் கூறினார்.

இசை “ஒழுக்கத்தில் சீர்குலைவை ஏற்படுத்துகிறது” என தாலிபன்கள் கூறுகின்றனர்

பாகிஸ்தானில் 20 லட்சம் ஆப்கன் அகதிகள்

திரும்பி வரும் ஆப்கானியர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை வழங்க ஒரு கமிஷனை அமைத்துள்ளதாக தாலிபன்கள் கூறுகின்றனர்.

“எந்தக் கவலையும் இன்றி அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பி, கண்ணியமான வாழ்க்கையைப் நடத்துவார்கள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்,” என்று தலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் X சமூல வலைதளத்தில் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக நடந்து வந்த போரில் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. சுமார் 13 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 8,80,000 பேர் பாகிஸ்தானில் தங்குவதற்கான சட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளனர் என்று ஐ.நா கூறுகிறது.

ஆனால் இன்னும் 17 லட்சம் மக்கள் “சட்டவிரோதமாக” பாகிஸ்தானில் உள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி அக்டோபர் 3 அன்று அகதிகள் வெளியேற்ற உத்தரவை பிறப்பித்தபோது கூறினார்.

பாகிஸ்தானின் புள்ளிவிவரங்களோடு ஐநாவின் புள்ளிவிவரங்கள் வேறுபடுகின்றன. இருபது லட்சத்திற்கும் அதிகமான ஆவணமற்ற ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். அவர்களில் குறைந்தது 6,00,000 பேர் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானிற்கு வந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த வெளியேற்ற உத்தரவு வந்துள்ளது.

பாகிஸ்தானின் தலிபான் என்று அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் இஸ்லாமிய அரசு போராளிக் குழு உள்ளிட்ட ஆயுதமேந்திய போராளிகள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.


“ஆப்கானியர்களால் நாங்கள் தாக்கப்படுகிறோம்”

இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த 24 தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 14 ஆப்கானியர்களால் நடத்தப்பட்டதாக புக்டி கூறினார்.

“எங்கள் மீதான தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானிற்குள் இருந்தும் ஆப்கானிஸ்தான் பிரஜைகளாலும் நடத்தப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்று அவர் கூறினார்.

அங்கீகரிக்கப்படாத அகதிகள் வெளியேறவில்லை என்றால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று புக்டி மேலும் கூறினார்.

முன்னதாக செப்டம்பரில், பாகிஸ்தானில் நடந்த இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதில் TTP தங்களது ஈடுபாட்டை மறுத்துள்ளது. தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்று புக்டி கூறினார்.

 

Share.
Leave A Reply