சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது. செங்கல்பட்டு ரயிலுக்காக நடைபாதையில் சுமார் 60 பேர் காத்திருந்தனர்.

ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன்னர், யாரோ ஒருவர் ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டும் சத்தத்தையும், அதனால் அலறும் பெண்னின் குரலையும் கேட்டு, ரயில் நிலையமே ஒரு நிமிடம் நிசப்தமானது. அடுத்த மூன்று நிமிடங்களில், அந்தப் பெண் துடிதுடித்து இறந்தார்.

இப்படித்தான் மென்பொறியாளர் சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலம் சுவாதி கொலை தொடர்பான குற்றப்பத்திரிகையில் பதிவு செய்தது காவல்துறை.

“ஆனால், கொலையை பார்த்த யாரும் அவருக்கு அருகில் செல்லவில்லை. இரண்டு பேர் மட்டும் கொலையாளியை துரத்திப் பிடிக்க முயன்றனர்.

ஆனால், கொலையாளி ரயில்வே தண்டவாளத்தில் செங்கல்பட்டு ரயில் வந்து கொண்டிருந்த போதும், அதில் இறங்கி, சுவர் ஏறி குதித்து தப்பிவிட்டார். ரயிலுக்காக காத்திருந்த அனைவரும், நடைமேடைக்கு வந்த செங்கல்பட்டு ரயிலில் ஏறி சென்றுவிட்டோம்,” என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார் ராஜராஜன்*(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

சுவாதியின் கொலை நடந்தும், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி 87 நாட்களுக்குப் பிறகு சிறையில் தற்கொலை செய்து கொண்டும்,

சுமார் ஏழு ஆண்டுகள் ஆனாலும், இன்று வரையிலும் இருவரின் இறப்பிலும் மர்மம் நீடித்து வருகிறது. இருவர் இறப்பிலும் இருக்கும் மர்மங்கள் என்ன? எழும் கேள்விகள் என்ன? இரண்டு வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?

 

எட்டு நாட்களில் கைது செய்யப்பட்ட ராம்குமார்

காவல்துறை வெளியிட்ட சிசிடிவி காட்சி

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட பின், முதற்கட்டமாக இந்த வழக்கை ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

பின், வழக்கை விசாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால், இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையின் வசமே வந்தது. வழக்கு விசாரணையை துரிதப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை, கொலையாளி தப்பியோடிய வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது.

அந்தக் காட்சிகளில், முதுகில் பையை மாட்டிக்கொண்டு செல்லும் ஒரு இளைஞர் தான் கொலையாளி என அப்போதைய பெருநகர சென்னை போலீஸ் கமிஷ்னர் அறிவித்தார்.

சம்பவம் நடந்த எட்டாவது நாள் இரவில், சுவாதியை கொலை செய்த நபர் திருநெல்வேலி மாவட்டத்தில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தது.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராம்குமார் என்றும், அவர் கொலை செய்துவிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இருந்தார் என்றும், அவரை கைது செய்ய முற்படும்போது, அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் போலீசார் அப்போது கூறினர்.

“எனக்கு இப்பவும் அது நன்றாக ஞாபகம் இருக்கிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

எங்கே அவன் எங்கே அவன் என்று தேடிக்கொண்டே உள்ளே சென்றனர். எங்கள் மகனைத்தான் அவர்கள் தேடி வந்தார்கள் என்று தெரியவில்லை. பின், எங்கள் வீட்டின் பின்புறத்தில் இருந்து கழுத்தில் காயத்துடன் அவனை வெளியே இழுத்துச் சென்றனர்,”என அன்று நடந்ததை நினைவு கூர்கிறார் ராம்குமாரின் தந்தை பரமசிவம்.

ஜுலை 1, 2016 அன்று இரவு கைது செய்யப்பட்ட ராம்குமார், திருநெல்வேலியில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, இரவோடு இரவாக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“அவனை காயத்தோடு அழைத்துச் செல்வதைப் பார்த்த எனது மகளும், மனைவியும், காவல்துறையின் வாகனத்திலேயே ஏறிச் சென்றனர்.

ஆனால், அவர்களையும் பார்க்கவிடாமல், மருத்துவமனையிலேயே விட்டு இரவோடு இரவாக அவனை சென்னை கொண்டு சென்றனர். பின், பேருந்துக்கு கூட காசில்லாமல், என் மனைவியும், மகளும் அங்கிருந்தவர்களிடம் பணத்தைப் பெற்று ஊர் வந்து சேர்ந்தனர்,” என்கிறார் பரமசிவம்.

கைதுக்கு பின் என்ன நடந்தது?

கைது செய்யப்பட்ட ராம்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது, அடுத்த 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், ராம்குமார் இறக்கும் வரையில் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார், 90 நாட்களுக்குள் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத பட்சத்தில், அவர் ஜாமின் பெறுவதற்கு தகுதியை பெறவிருந்தார்.

இந்த நிலையில் தான், சரியாக 87-வது நாளில், செப்டம்பர் 18, 2016ல் ராம்குமார் சிறையில் மின் வயரைக்கடித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் அறிவித்தனர்.

இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருபவரும், ராம்குமாரின் குடும்பத்தினருக்கு உதவி வருபவருமான திலீபன், “ராம்குமார் தான் இந்த கொலையை செய்தார் என்பதற்கு நிச்சயமான இந்த ஆதாரமும் இல்லை.

ரயில் நிலையத்தில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் நான் விசாரித்துவிட்டேன். யாரும் கொலை செய்தது ராம்குமார் தான் என அடையாளம் காட்டவில்லை. ஏன், குற்றப்பத்திரிகையில் கூட, ராம்குமார் கொலை செய்ததை பார்த்தேன் என உறுதிப்பட யாரும் கூறவில்லை,” என்கிறார்.

இதனால், தான் ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார் திலீபன்.

ஆனால், சுவாதி கொலை வழக்கை அப்போது விசாரித்தவர்களில் ஒருவரான பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, வழக்கில் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையிலேயே ராம்குமார் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

மேலும், வழக்கில் எழும் சந்தேகங்கள் குறித்து கேட்டபோது, இதற்கு மேல் அந்த வழக்கு குறித்து பேச முடியாது என்று கூறிவிட்டார்.

சுவாதியை அடித்த ஆண் நண்பர் யார்? ராம் குமார் தரப்பின் தீராத சந்தேகங்கள்
சுவாதி

 

இந்த வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் ராம்ராஜ், சுவாதி கொலை தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

“சுவாதி கொலை குறித்த சம்பவங்களை முழுமையாக ஆராயாமல், ராம்குமார் தான் கொலை செய்தார் என்ற முடிவுக்கு வர முடியாது. நாங்கள் விசாரித்த வரை, சுவாதி பணியாற்றிய இடத்தில் இருக்கும் ஒருவருக்கு ஹவாலா பணப் பரிமாற்றம் செய்யும் நபர்களுடன் தொடர்பு இருந்துள்ளது.

அவர்கள் சுவாதியை பயன்படுத்தி சில பணப் பரிமாற்றங்கள் செய்துள்ளனர். அதுதொடர்பாக சுவாதியிடம் முக்கிய ஆவணங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதனாலே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்,” என குற்றம்சாட்டுகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, இதில் உண்மையில்லை என்றனர் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள்.

“இதைத் தவிர, சுவாதிக்கு ஒரு இஸ்லாமிய ஆண் நண்பர் இருக்கிறார். அவருடனும் சுவாதிக்கு அவ்வப்போது சண்டை ஏற்படுவதுண்டு. இந்த ஆண் நண்பருக்கு அவரது குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த ஆண் நண்பர் பற்றி யாரும் பேசவே இல்லை,” என்கிறார் ராம்ராஜ்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்களும் சுவாதிக்கும் ஒரு ஆண் நண்பருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது குறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

“சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் நல்ல சிவப்பு நிறத்தில் ஒரு ஆண், சுவாதியை அடிப்பதை பார்த்தோம். ஆனால், சுவாதி அவரை தடுக்கவும் இல்லை, சண்டையிடவும் இல்லை. அதிலிருந்து அவர்கள் இருவரும் முன்பிருந்தே நண்பர்களாக இருக்கும் என யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை,” என்று கூறியுள்ளார் ராஜராஜன்.

மேலும், “சுவாதியை அடித்த நபரும் கொலை செய்த நபரும் ஒரே ஆள் இல்லை. இருவரும் வேறு வேறு நபர்கள். சுவாதியை அடித்தவர் வெள்ளை நிறத்தில் இருப்பார். கொலை செய்தவர், மாநிறமாக இருப்பார். இருவரும் ஒரே ஆள் இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகக் கூற முடியும்,” என்றார் ராஜராஜன்.

அந்த ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தியதாகவும், கொலை நடந்த போது, அவர் சம்பவ இடத்தில் இல்லை என்றும் சுவாதி கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

ராம்குமார் தற்கொலையில் என்ன சந்தேகம்?

ராம்குமார்

ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என செப்டம்பர் 18, 2016ல் காவல்துறை அறிவித்தது.

தொடர்ந்து, அடுத்த இரண்டே நாட்களில், தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேதப் பரிசோதனையை முறையாக நடத்த வேண்டும் என்றும், தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்றும் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப்பரிசோதனை செய்ய உத்தவிட்டனர்.

அதன் அடிப்படையில், அக்டோபர் 1 ஆம் தேதி, எய்ம்ஸ் மருத்துவர்கள் முன்னிலையில், பிரேதப் பரிசோதனை நடைபெற்று, அக்டோபர் 3 ஆம் தேதி ராம்குமாரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கு பிறகு, ராம்குமாரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ராம்குமார் தரப்பினர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தை நாடினர்.

ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் புகாரைப் பெற்று, தாமாக முன்வந்த இந்த வழக்கை விசாரித்து வந்தது மாநில மனித உரிமைகள் ஆணையம். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணையில், பிரேதப் பரிசோனை அறிக்கையின் அடிப்படையில் சில கேள்விகள் எழுந்துள்ளன.

“மனித உரிமை ஆணைய விசாரணையின்போது, ராம்குமார் மின்சாரம் பாயும் வயரினை கடித்திருந்தால், அவரது உதடுகளில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும், ஆனால், அப்படியான காயங்கள் எதுவும் இல்லை, அதேபோல, மின்சாரம் உள்ளே பாய்ந்திருந்தால், உடலின் மற்ற திசுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், ராம்குமாரின் உடலின் மூளை திசு, இதய திசுக்கள், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் உள்ளிட்டவை நல்ல நிலையில் இருப்பதாக பிரேதப்பரிசோதனை செய்த மருத்துவர்களும், மேற்பார்வை செய்த எய்ம்ஸ் மருத்துவர்களும் அறிக்கை அளித்துள்ளனர்,”என்கிறார் ராம்ராஜ்.

 

மனித உரிமை ஆணைய விசாரணையும் இடைக்கால தடையும்
I

இதற்கிடையே, அப்போதைய சிறை கண்காணிப்பாளர் (தற்போது ஓய்வு பெற்றுள்ள) அன்பழகனும், 2021ல் மனித உரிமை ஆணையத்தின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அவர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை ஆணையையும் பெற்றார்.

இதற்கிடையே, அக்டோர், 2022ல் ராம்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், மாநில அரசு ஒரு சிறைவாசியை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து தவறிவிட்டதாகவும், அது மனித உரிமை மீறல் என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், ராம்குமார் இறப்பு தொடர்பாக சுதந்திரமான ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து அன்பழகனிடம் கேட்டபோது, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கருத்துக்கூற முடியாது என்றார்.

ஆனால், இந்த வழக்கை நடத்தி, சுவாதிக்கு என்ன நடந்தது எனத் தெரிந்தால் மட்டுமே தங்களால் நிம்மதியாக இருக்க முடியும் என்கின்றனர் ராம்குமாரின் குடும்பத்தினர்.

“எங்களுக்கு ராம்குமார் தற்கொலைக்கு நீதியைப் பெறுவதைவிட, சுவாதிக்கு நீதி பெறுவது தான் முக்கியம். அந்த காரணத்தை கண்டுபிடித்தால்தான்,

ராம்குமார் தற்கொலை குறித்த விஷயங்கள் வெளிவரும். ராம்குமார் இறந்தும் நாங்கள் குற்றவுணர்வுடனே வாழ்ந்து வருகிறோம். விரைவில், உண்மைகள் வெளிவரும் என நம்புகிறோம்,” என்றார் பரமசிவம்.

 

Share.
Leave A Reply