இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை ‘அச்சுறுத்தல்’ எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது.

உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது.

கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

“காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி” என்றும் ராணுவம் கூறியுள்ளது.

 

தெருவில் இறங்கிய மக்கள்

இஸ்ரேல் ராணுவத்தின் தவறான தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, அந்நகரில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் அரசு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் சுவரொட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவரொட்டிகளில் “அவர்களை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” மற்றும் “இப்போது பணயக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள்,” என்று எழுதப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் இஸ்ரேலை அடைந்துள்ளன. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது உயிரிழந்த யோதம் கயீம் என்பவரை அக்டோபர் 7ஆம் தேதி, கிப்புட்ஸ் கஃப்ர் அஸாவில் இருந்து ஹமாஸ் குழுவினர் கடத்திச் சென்றனர்.

யோதம் ஒரு இசைக்கலைஞர் என்பதுடன், அவர் விலங்குகளை நேசிப்பவராகவும் இருந்தார். அவருக்கு இத்தாலிய உணவுதான் மிகவும் பிடித்த உணவு என்றும் தெரியவந்துள்ளது.

ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய நாளில், யோதம் கயீம் தனது குடும்பத்தினரை அழைத்து, தங்களது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகக் கூறினார். இதற்கிடையில், யோதம் கயீம் காற்றோட்டமாக இருப்பதற்காகத் தனது வீட்டின் ஜன்னலை திறந்தபோது, ​​​​ஹமாஸ் குழுவினர் அவரைக் கடத்திச் சென்றனர்.

மகன் இறப்பதற்கு முன் பிபிசி செய்தியிடம் பேசிய அவரது தாயார், தாக்குதல் நடந்த அன்று அவர் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவருடன் பேசியதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் இறந்த இரண்டாவது நபர், 26 வயதான அலோன் ஷம்ரிஸ், அக்டோபர் 7ஆம் தேதி காஃப்ர் அஸபவில் இருந்தார்.

இதுதவிர, 22 வயதான சமீர் தலால்கா, கிப்புட்ஸ் நிர் அம் என்ற இடத்தில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஆர்வலரான சமீர், கிராமப்புறங்களுக்குச் செல்வதையும் தனது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையும் அதிகம் விரும்புவராக இருந்திருக்கிறார்.

அவர் ஹுரா நகரில் வசித்து வந்த நிலையில் கிப்புட்ஸில் ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் 7ஆம் தேதி காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கிறார்.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, சமீர் தலால்கா தனது சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு துப்பாக்கி தோட்டாவால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

தாக்குதல் நடந்த அன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் தனது மகனுடனான தொடர்பை இழந்ததாக அவரது தந்தை உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். சமீர் தலால்கா காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட படம் டெலிகிராமில் பகிரப்பட்டது.

 

ராணுவத் தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்ன சொன்னார்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த மரணங்களை ‘தாங்க முடியாத சோகம்’ என்று வர்ணித்துள்ளார்.

“இந்தக் கடினமான வேளையில்கூட, நமது காயங்களைக் குணப்படுத்துவோம், பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.

மேலும் எங்கள் நாட்டுப் பணயக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

 

அமெரிக்கா என்ன சொன்னது?

இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேலிய ராணுவத்தின் இந்தக் கொலைகள் ஒரு பெரிய தவறு என்றும், இந்த நடவடிக்கை எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் அமெரிக்காவிடம் இல்லை என்றும் கூறினார்.

சமீபத்தில், காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் மீது அமெரிக்கா மிகக் கண்டிப்புடன் இருந்தது. காஸாவில் நடந்து வரும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருவதாக டிசம்பர் 13ஆம் தேதியே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான நிதி திரட்டுவது தொடர்பான நிகழ்வில் பைடன் பேசுகையில், ”இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவை சார்ந்து இருக்கலாம், ஆனால் தற்போது அது அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளைச் சார்ந்துள்ளது.

ஆனால் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களின் காரணமாக இஸ்ரேல் அந்த ஆதரவை இழக்கும் நிலை உள்ளது,” என்றார்.

இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் தொடர்பாக பைடனுக்கு அமெரிக்காவில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்தும் இந்த அழுத்தம் வெளிப்படுகிறது.

பைடனின் அறிக்கை அமெரிக்க நிர்வாகத்தின் அறிக்கைகளைப் போன்றது. இதில் இஸ்ரேல் போரின்போது மனித உயிர்களைக் காப்பாற்றுவது பற்றியும் பேசப்பட்டிருந்தது. மூத்த அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலின் ராணுவ நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இது தவிர, 23 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன.

 

ராணுவ நடமுறைகள் குறித்து எழும் கேள்விகள்

ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

காஸாவில் ஹமாஸ் குழுவினர் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 18,800 பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர் என்பதுடன் ஹமாஸ் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.

ஹமாஸின் ஆக்கிரமிப்பில் இருந்து பணயக் கைதிகளை விடுவிக்க பயன்படுத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். ஹமாஸால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்களில் ஹான் அவிக்டோரியும் ஒருவர்.

“பணயக் கைதிகளை ராணுவத்தின் மூலம் மீட்க முடியும் என்று மக்கள் கூறுவதை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அவர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வர எந்த ராணுவ நடைமுறையும் பின்பற்றப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

அவர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் எழுதியபோது, இஸ்ரேல் தனது மக்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Share.
Leave A Reply