இந்நிலையில், வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய பொதுஜன பெரமுன தலைவர் மகிந்த ராஜபக்ச,
“தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள் எம்மோடு இணைவர். மாத்திரமின்றி எந்த தேர்தல் வந்தாலும் நாமே வெற்றி பெறுவோம். நாட்டை துண்டாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க மாட்டோம். எம் மீது அபாண்டமாக சேறு பூசப்பட்டு வருகின்றது.
இதே போன்று 2015ஆம் ஆண்டும் சேறு பூசப்பட்டது. சிலர் எப்போதும் எம் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவர்களால் அதை மாத்திரமே செய்ய முடியும். மேலும் எதிர்கால சவால்களை பொதுஜன பெரமுனவால் மாத்திரமே வெற்றி கொள்ள முடியும்” என அவர் கூறியிருந்தார்.
இதேவேளை அவரது சகோதரர் பஸில் ராஜபக்ச அடுத்த வரும் தேர்தல்களின் வெற்றிக்காக தயாராகுங்கள் என தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து பேசியிருந்தார்.
பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்ட பிறகு இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆகவே அடுத்து எந்த தேர்தல்கள் வந்தாலும் நாமே வெற்றி பெறுவோம்.
நாட்டின் அபிவிருத்தியை செய்தவர் மகிந்த ராஜபக்ச மாத்திரமே . இதற்கு வேறு எவரும் உரிமை கோர முடியாது. வீடுகளை ,சொத்துகளை இழந்த எமது கட்சியின் உறுப்பினர்களும் இங்கு வருகை தந்திருக்கின்றனர்’ எனத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார குற்றவாளிகள் என்றும் பொருளாதார நெருக்கடிக்கு காரணகர்த்தாக்கள் என்றும் ராஜபக்ச சகோதரர்களை பெயரிட்டு உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பொன்றை வழங்கியிருந்தது.
மகிந்த கூறுவது போன்று இது அபாண்டமான குற்றச்சாட்டா அல்லது நீதிமன்றம் இவர்களை வீணே விமர்சிக்கின்றதா? என்று கேள்வி கேட்கத் தோன்றுகின்றது.
பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இடம்பெற்ற தினமான வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே சமூக ஊடகங்களில் மகிந்த தரப்பினரை கேலி செய்யும் விதத்தில் பல கருத்துப்படங்களும் வலம் வர ஆரம்பித்துவிட்டன.
எருமையொன்று ஒலிவாங்கிகளின் முன்பாக பேசுவது போன்றும் அதை பல எண்ணிக்கையான எருமைகள் கேட்பது போன்று வடிவமைக்கப்பட்ட படம் பலரால் அதிகமாக பகிரப்பட்டிருந்தது. ஒலிவாங்கியின் முன்பாக பேசும் எருமையின் கழுத்தில் சிவப்பு நிற பட்டியொன்று அணிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தை முகநூலில் உள்ள பல சிங்கள மக்களும் பகிர்ந்து தமது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதிலும் தனது உரையில் பஸில் தெரிவித்த கருத்துகளுக்கும் சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவர் தனது உரையின் ஓரிடத்தில் ‘‘வீதியில் செல்லும் நாய்களுக்கு கல்லெறிந்தால் அவை ஓடிவிடும்.. ஆனால் சிங்கத்தின் மீது கல்லெறிந்தால் அது ஓடாது.
அது யார் கல்லெறிந்தவர் என்று பார்க்கும். நாங்கள் அந்த சிங்கம் போன்றவர்கள். எங்களை சீண்டாதீர்கள்.நாங்கள் நேரம் வரும்போது அனைவரையும் கவனிப்போம்..’ என்று பேசியிருந்தார்.
இதே வேளை குறித்த மாநாட்டுக்கு நாடெங்கினும் உள்ள பொதுஜன பெரமுன உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது பஸ்களை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இது மகிந்த தரப்பினருக்கு பெருத்த அவமானத்தை தேடித்தந்துள்ளது. ஏனெனில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது மகிந்த ஆதரவாளர்களால் காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும் பிறகு ஒன்றிணைந்த போராட்டக்காரர்கள் மகிந்த ஆதரவாளர்களை நையப்புடைத்திருந்தனர்.
அப்போது இடம்பெற்ற வன்முறையில் மகிந்த ஆதரவாளர்கள் என்று கூறப்படும் தனியார் பஸ்களில் வந்தவர்கள் தாக்கப்பட்டதோடு கிட்டத்தட்ட ஐம்பது பஸ்கள் சேதமாக்கப்பட்டு பேர வாவியில் தள்ளப்பட்டன.
இந்த அனுபவத்துக்கு தாம் முகங்கொடுக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் விரும்பவில்லை போலும்.
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இறுதி நேரத்தில் அறிவிப்போம் என மாநாட்டுக்கு முன்பதாக மகிந்த கூறியிருந்தார்.
நிச்சயமாக அந்த நபர் ராஜபக்ச குடும்பத்தவராக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை என்பது நிச்சயம்.