இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம். அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது.

எடுத்த எடுப்பிலேயே அவர்கள் இஸ்ரேலின் இரகசிய உளவுப் படையான மோசாடில் (Mossad) கூட சேர்ந்து பணிபுரியலாம். வளம் நிறைந்த அமெரிக்காவிலிருந்து கூட பல யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர்.

1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் 3000 ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புண்ணிய பூமியில் தங்கள் இனத்திற்கென்று ஒரு நாடு உருவாகியிருக்கிறது, அங்கு சென்று வாழ்க்கையைக் கழித்தால்தான் சொர்க்கத்தை அடையலாம் என்று எண்ணிப் பல யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்திருக்கின்றனர்.

இப்போதும் இங்கேயே முழுவதுமாகக் குடிபெயரவில்லை என்றாலும் வருடத்தில் சில நாட்களாவது இங்கு வந்து தங்கிச் செல்ல வேண்டும் என்று பல அமெரிக்க யூதர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் பாலஸ்தீன அரேபியர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவி பதின்மூன்று நூற்றாண்டுகளாக இங்கேயே வசித்துவருகிறார்கள். இதற்கு முன்னால் இவர்கள் பழங்குடி மக்களாக இங்கு வாழ்ந்திருக்க வேண்டும். இந்த பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் சொந்த மண்ணில் வசிக்க எல்லாத் தொல்லைகளையும் இஸ்ரேல் அரசு கொடுத்து வருகிறது. இப்படித் தொந்தரவுகள் கொடுப்பதால் அவர்களாக வெளியேறினால் நல்லது. இல்லயென்றால் அவர்களை எப்படியாவது வெளியேற்றிவிடவும் பல திட்டங்களை வைத்திருக்கிறது.

எங்களை புராதன நகருக்குள் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் மூன்று வருடங்கள் படிப்பதற்காக பெல்ஜியத்திற்குச் சென்றிருந்தாராம். திரும்பி வந்தபோது இஸ்ரேல் அரசு இவர் நாட்டிற்குள் வருவதற்குப் பல தடைகள் விதித்ததாம்.

சில ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருந்தால் பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேலியக் குடியுரிமையை இழந்துவிடுவார்களாம். தன்னுடைய குடியுரிமையைப் பெறுவதற்காக இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறாராம். (இவருக்கு யூத இனத்தைச் சேர்ந்த காதல் தோழி இருக்கிறாள். ஆனால் சாதாரணமாக இப்படி இருப்பதைப் பார்க்க முடியாது.)

எங்களை பெத்லஹேமுக்கும் ராமல்லாவுக்கும் அழைத்துச் சென்ற பயண வழிகாட்டியின் மனைவியும் குழந்தைகளும் கனடாவில் இருக்கிறார்கள். வருடம் ஒரு முறை அவர்கள் இங்கு வருகிறார்கள். அவர் இருப்பது வெஸ்ட் பேங்கில். அங்கிருப்பவர்கள் இஸ்ரேலுக்கு வருவதற்கு இஸ்ரேல் அரசு வழங்கியிருக்கும் அடையாள அட்டை வேண்டும்.

எந்த இடத்திலும் வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முடியாதபடி இஸ்ரேல் அரசு மிகப் பிரமாண்டமான மதில் சுவரை எழுப்பியிருக்கிறது. சில இடங்களில் இதைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேல் அரசு அமைத்துள்ள சோதனைச் சாவடிகளின் மூலம்தான் வர வேண்டும். இப்படி இவர்களுக்குத் தடைகள் இருப்பதால் இவர் குடும்பம் கனடாவிலேயே இருக்க முடிவு செய்திருக்கிறது.

நாங்கள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கும் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து (இஸ்ரேல் உருவாவதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். இவரின் பெயரை இந்த விமான நிலையத்திற்கு வைத்திருக்கிறார்கள்.) ஜோர்டன் தலைநகரான அம்மான் வந்துசேர்ந்தோம்.

ஜெருசலேமிற்கும் அம்மானுக்கும் இடையே உள்ள தூரம் நாற்பத்தைந்து மைல்கள்தான். ஆனால் அந்த தூரத்தைக் கடக்க ஜெருசலேமில் சர்வதேச விமானப் போக்குவரத்து இல்லை. பேருந்துகளில்தான் பயணம் செய்ய வேண்டும். பேருந்தில் பயணம் செய்தால் இஸ்ரேலிய-ஜோர்டன் எல்லையில் இஸ்ரேலிய அரசு நடத்தும் சோதனை மிகவும் கெடுபிடியாக இருக்கும் என்றார்கள். பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.

அதனால் டெல் அவிவிலிருந்து விமானம் மூலமே இஸ்ரேலை விட்டுக் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்தோம். விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம்தான். ஆனால் கட்டணம் எவ்வளவு தெரியுமா? அறுநூறு அமெரிக்க டாலர்கள். அடிக்கடி ஒரே கம்பெனியில் விமானப் பயணம் செய்பவர்களுக்கு சில சலுகைகள் உண்டு. என் மகளுக்கிருந்த அந்தச் சலுகையைப் பயன்படுத்தி எங்களுக்கு அந்தப் பயணத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தாள்.

எங்களை அன்று ஜெருசலேமிலிருந்து டெல் அவிவ் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற டாக்சி ஓட்டுநர் ஒரு அரேபியர். இளவயதினர். சொந்தமாக டாக்சி வைத்திருக்கிறார். அவர் எங்களைக் கூட்டிக்கொண்டு டெல் அவிவ் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் இஸ்ரேல் போலீஸ் துறையைச் சேர்ந்த ஒருவர் எங்கள் டாக்சியை நிறுத்தினார்.

எல்லா போலீஸார் கையிலும் நீண்ட துப்பாக்கி. இவர் கையிலும் ஒன்று இருந்தது. எங்கள் டாக்சி அருகே வந்து உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தார். எங்கள் சூட்கேசுகளைத் திறக்கச் சொன்னார். எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, டிரைவரை மட்டும் தன்னோடு அழைத்துச் சென்றார். அதற்கு முன்பே அவருக்கு அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். அவரைத் தனியாக அங்கு பக்கத்தில் இருந்த அவர்களுடைய அலுவலகத்திற்குள் கூட்டிச் சென்று பல கேள்விகள் கேட்டுவிட்டுப் பின் அனுப்பிவைத்தனர்.

அந்த டிரைவருக்கு இப்படி அவர்கள் தன்னை நடத்தியதைக் கண்டு அப்படி ஒரு எரிச்சல். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘உனக்கு நான் அடிமை இல்லை’ என்ற பாவத்தில் முகத்தை வைத்துக்கொண்டார். அதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர் பல தலைமுறைகளாக ஜெருசலேமில் வாழ்ந்து வருகிறாராம். இவரைப் போன்றவர்கள் இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து இரண்டாம் பட்ச குடிமக்களாகி இருக்கின்றனர்.

இஸ்ரேலில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் ஒரே வேலைக்கு ஒரே மாதிரியான சம்பளம் இல்லையாம். யூதர்களுக்கு அதிகமாகவும் அரேபியர்களுக்குக் குறைவாகவும் கொடுக்கப்படுகிறதாம். பயண வழிகாட்டி எங்களை ராமல்லாவுக்கு அழைத்துச் சென்றபோது இஸ்ரேல் அரசால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அரேபியர்களின் வீடுகளையும் காட்டினார்.

அரேபியர்களுக்குத் தண்ணீர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்படுவதால் அவர்களின் வீடுகளின் கூரைகளில் தண்ணீரைச் சேமித்துவைத்துக்கொள்ள பெரிய தொட்டிகளைப் பொருத்தியிருந்தார்கள். ஆனால் குடியமர்த்தப்பட்டவர்களின் வீடுகளில் அப்படி தொட்டிகள் எதுவும் இல்லை. அவர்களுக்குத் தினமும் தண்ணீர் சப்ளை இருக்கிறதாம். அதனால் இவர்கள் வீடுகளுக்கு முன்னால் செழிப்பான புல்வெளிகள் இருக்கின்றன.

பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான – ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட – இடங்களைப் பிடித்துக்கொண்டு அங்கு யூதர்களை இஸ்ரேலிய அரசு குடியேற்றியிருக்கிறது. இது 1967–லிருந்து – அதாவது இஸ்ரேல் போரில் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டதிலிருந்து – தொடர்ந்து வருகிறது. இப்படிக் குடியமர்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு அருகில் வசிக்கும் அரேபியர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கிறார்கள். ஒரு முறை பெடுயின் (Bedouin) என்னும் இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆடுகளுக்கு விஷம் வைத்துவிட்டார்களாம்.

நாங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்குக் காரணமாகயிருந்த யூத நண்பரும் இன்னொரு யூத நண்பரும் தீவிர இடதுசாரிகள். இவர்கள் பல முறை இஸ்ரேல் அரசு அரேபியர்களுக்கும் பெடுயின் இனத்தவர்களுக்கும் இழைத்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.

ஒருவர் ‘முதல் யூதக் கோவில் இடிக்கப்பட்டதுதான் யூத இன சரித்திரத்திலேயே நடந்த சிறந்த சம்பவம்’ என்று நக்கலாகச் சொல்கிறார். இவர்தான் நாங்கள் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இஸ்ரேலைச் சேர்ந்த இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஆறு வருடங்கள் வேலைபார்த்துவிட்டு மறுபடி இஸ்ரேலுக்கே திரும்பச் சென்றுவிட்டார்.

இவர் இப்படித் திரும்பக் காரணமாக இருந்தவர் இவர் மனைவி என்கிறார். ஒரு முறை இவர் ரேடியோவில் பேட்டி கொடுத்தபோது இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததைப் பற்றிக் கேள்வி கேட்டார்களாம். இஸ்ரேலில் போல் அங்கும் பழைய சரித்திரத்தைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றதும் அப்படியே பேட்டியை முடித்துவிட்டார்களாம்.

இன்னொருவர் அமெரிக்காவில் பிறந்து தனது பதினெட்டாவது வயதில் ஹீப்ரு மொழியால் ஈர்க்கப்பட்டு இஸ்ரேலுக்கு வந்தவர். இருவரும் அரசின் கொள்கைகளை வெகுவாகக் கண்டிப்பவர்கள். இருவரும் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறார்கள்.

இஸ்ரேலில் யூதர்களுக்கிடையே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட பிறகு யூத மத குருமார்கள் அடங்கிய ஒரு குழு அதை அங்கீகரிக்க வேண்டுமாம். இவர் விவாகரத்து செய்துகொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது குருமார்கள் குழு எளிதில் அதை அங்கீகரிக்கவில்லையாம்.

எல்லாச் சமூகங்களிலும் இருப்பது போல் யூத சமூகத்திலும்பல விதக் கொள்கைகள் உடையவர்கள் இருக்கிறார்கள். பழமை பேணும் யூதர்களிலிருந்து (conservative) பரந்த மனப்பான்மை கொண்ட முற்போக்காளர்கள் (liberal) வரை இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் எங்கள் யூத நண்பர் வருடத்திற்கு ஒரு முறை இஸ்ரேலுக்குப் போக வேண்டியது தன் கடமை என்று நினைக்கிறார். பலர் சேர்ந்து வாங்கும் ஒரு அப்பார்ட்மெண்டை ஜெருசலேமில் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் திவருடைய முறை. அந்தச் சமயத்தில் இவர் அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம்.

அமெரிக்காவில் வாழும் இன்னொரு யூத நண்பர் ஓரிரு முறை யூதச் சட்டங்களைப் (Jewish Law) படிக்க ஜெருசலேம் சென்றுவருகிறார். இவரைப் பொறுத்தவரை யூத மதம் என்பது ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, அதற்கென்று சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றுவது ஒவ்வொரு யூதனுடைய கடமை. யூதர்கள் தங்கள் புண்ணிய தலம் என்று கருதும் பாலஸ்தீனத்திற்குப் போக வேண்டும், அங்கேயே தங்கி உயிரை விட வேண்டும் என்பதெல்லாம் இவருடைய கொள்கையல்ல. ஆனால் யூத மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.

யூதர்களுடைய ஓய்வு தினமான (Sabbath Day) சனியன்று – அதாவது வெள்ளிக்கிழமை சூரியன் அஸ்தமித்ததிலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை – இவர் யாரிடமும் பேசுவதில்லை; தொலைபேசியை அன்று தொடவே மாட்டார். அன்று யார் தொலைபேசியில் கூப்பிட்டாலும் அவர் மனைவிதான் பேசுவார். பெரிய வேலை எதுவும் அன்று செய்வதில்லை. இவர் அமெரிக்காவில் வாழ்ந்துவருவதால் அமெரிக்கப் பழக்க வழக்கங்களைக் கையாண்டாலும் இப்படிச் சில யூதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார். யூதர்கள் தங்களுக்குள்ளேயேதான் திருமணம் செய்துகொள்ளுகிறார்கள். இவருடைய பிள்ளைகளும் யூதர்களுக்குள்ளேயே திருமணம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இவருடைய நண்பர்களான ஒரு தம்பதி இப்போது இஸ்ரேலில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துவந்தவர்கள். இஸ்ரேலில்தான் யூதப் பழக்க வழக்கங்களை நன்றாகப் பின்பற்ற முடியும் என்று எண்ணி அங்கு குடியேறியவர்கள். மேலே குறிப்பிட்டவர்களை விட இவர்கள் இன்னும் கொஞ்சம் பழமைவாதிகள் எனலாம். இருந்தாலும் இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு எதிராகச் செய்யும் செயல்கள் இவர்களுக்கு உடன்பாடில்லை. இவர்களும் அரசுக்கு எதிரான சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட சிகாகோ பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரின் மனைவிதான் அவர்கள் குடும்பம் இஸ்ரேலுக்குத் திரும்பிச் செல்லக் காரணமாக இருந்தவர் என்று மேலே சொன்னேன். இவருக்கு யூத மத நம்பிக்கை உண்டு போலும். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு மத குருமார்கள் பெண்ணை ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி சில சோதனைகள் செய்வார்களாம். இது யூதப் பழக்கம் போலும் இதை இவர் எதிர்க்கவில்லையாம்.

மேலும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் இவர்களுடைய பிள்ளைகளுக்கு – இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன் – கட்டாய ராணுவ சேவை இருந்திருக்காது. இஸ்ரேலில் மூன்று பிள்ளைகளுக்கும் அது உண்டு. அப்படியும் இஸ்ரேலுக்கு வர வேண்டுமென்று இவர் நினைத்திருக்கிறார்.

இவர்கள் வீட்டில் ஒரு நாள் எங்களுக்கு விருந்து கொடுத்தார்கள். மத்திய கிழக்கில் தயாரிக்கப்படும் சிறந்த உணவு வகைகள் இருந்தன. அதை சமைத்தது அல்லது இவருக்குச் சமைக்க உதவியது யார் தெரியுமா? இவருக்கு வீட்டு வேலைகளில் அவ்வப்போது உதவும் ஒரு இஸ்ரேலிய அரேபியப் பெண்.

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூற வேண்டும். அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறியிருக்கும் எல்லா யூதர்களுக்கும் அவர்கள் விரும்பினால் திரும்ப அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர்கள். இஸ்ரேலும் இவர்களை அங்கேயே வைத்துக்கொண்டு நன்றாக நடத்தத் தயாராக இருக்கிறது; அமெரிக்காவும் திரும்ப அழைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

யூதர்களுக்காக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முற்றிலும் சரி என்று நினைக்கும் யூதர்களிலும் சிலர் பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்றும் அந்த முயற்சிகளை முறியடிக்க இஸ்ரேல் அரசு செய்து வருவது சரியில்லை என்றும் நினைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாக் காரியங்களையும் கண்டுகொள்ளாத யூதர்களும் உண்டு. இப்படிப் பல தரப்பட்ட கொள்கைகளையுடைய யூதர்களின் விருப்பம் எப்படி 2013 ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதிபலித்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நாகேஸ்வரி அண்ணாமலை

மசாடா யூதர்களின் விடுதலை சின்னம் ரோமானியர்களை எதிர்த்து நின்ற வீரத்திற்குச் சான்றாக இந்தக் கோட்டை (இஸ்ரேல் பயணம் 10)

Share.
Leave A Reply